கூட்டணி - திருமருகல்
தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட நான்கு சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தியவர், உத்தராகண்டிலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் தருண் விஜய். ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரபூர்வ இந்தி பத்திரிகையான ‘பாஞ்சஜன்யா’வின் முன்னாள் ஆசிரியர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தவர். உலகமெங்கும் உள்ள தமிழர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றுவரும் தருணைச் சந்தித்தேன்.
தமிழ் மீது உங்களுக்குப் பாசம் உருவானது எப்படி?
பெரும்பாலான வட இந்தியர்கள் இந்தி மொழி மீது உள்ள கர்வத்தினால், மற்ற மொழிகளை விமர்சிக் கிறார்கள். இதனால், நம் நாட்டின் மற்ற மொழிகளையும், ‘தமது’ என ஏற்காத குணம் அவர்களிடம் இல்லாததை உணர்ந்தேன். இதைச் சரிசெய்ய விரும்பிய எனக்கு மற்ற தென் இந்திய மொழிகளில் தமிழின் மீதான ஆர்வம் அதிகமானது. தமிழின் பாரம்பரியம், கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவைதான் இதற்குக் காரணங்கள். தமிழை மற்ற மொழி என்று கூறாமல், எனது தாயின் மொழிகளில் ஒன்று என ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
மாநிலங்களவையில் இந்தி மட்டும் இருக்கும் தேசிய மொழிப் பட்டியல்களில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் எழுப்பிய குரலுக்குக் கிடைத்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ன?
எதிர்ப்பை விடப் பல மடங்கு ஆதரவுதான் எனக்கு அதிகமாகக் கிடைத்தது. தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு. கருணாநிதி என்னைப் பாராட்டித் திருக் குறளைப் பரிசாக அளித்திருக்கிறார். ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் உட்படப் பலர் தொலைபேசி மூலம் அழைத்து பாராட்டினார்கள். அதிமுக சார்பிலும் அதன் எம்பிக்கள் பாராட்டுக் கடிதங்கள் எழுதியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரும் நேரில் வந்து என்னைச் சந்தித்து நெகிழ்ந்துபோனார்கள்.
எதிர்ப்புத் தெரிவித்த மிகச் சிலரிடம், தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அவர்கள் மனதையும் மாற்றுவேன்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நீங்கள் சந்தித்தபோது அவர் கூறியது என்ன?
தமிழுக்கு இருக்கும் தலைசிறந்த கலாச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் என்னிடம் கூறி வியந்தார். உலகின் உறுதியான கப்பற்படையை உருவாக்கி, ஏழு கடல்கள் தாண்டிச் சென்று போரிட்டு நாடுகளை வென்றவர்கள் தமிழ் மன்னர்களான சோழர்கள் என்று பாராட்டினார். இதைப் பார்த்துதான் மராட்டிய மன்னன் சிவாஜி தன் கப்பற்படையை அமைத்ததாகவும் என்னிடம் குறிப்பிட்டார்.
அடுத்து, தமிழுக்கு என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் என மற்ற மாநில வாசிகள் தமிழகத்தில் வாழ நேரும்போது, அவர்களுக்குத் தமிழைக் கற்பதில் ஆர்வத்தை வளர்ப்பதும், இந்திக்கும் தமிழுக்கும் இடையே பாலமாக இருப்பதும் எனது முக்கியப் பணி. மிக விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தமிழ் என அறிவிக்கப்படும். இதற்காக நான் போராடவும் தயங்க மாட்டேன். இதை அடுத்து, வட இந்தியாவின் பள்ளிகளிலும் தமிழ் மொழி அறிமுகப்படுத்தப் பாடுபடுவேன். எனது மாநிலமான உத்தராகண்டில் தமிழ் மொழி கற்கும் நிலையங்களை நிறுவவும் முயற்சி மேற்கொண்டிருக்கிறேன்.
திருவள்ளுவர் பிறந்த நாளை நம் நாட்டின் இந்திய மொழிகளின் தினம் என அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேட்ட நீங்கள், அவரைப் பற்றி அறிந்திருப்பது என்ன?
உலகின் சிறந்த மொழிகளில் தமிழும் ஒன்று என்பது எனது உறுதியான நம்பிக்கை. இதற்கு, அந்த மொழியில் உருவான திருக்குறள் ஒரு பெரிய உதாரணம். அவரைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்வதற்காக நான் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ளவிருக்கிறேன்.
தமிழகத்தில் நிலவும் இந்தி எதிர்ப்புகுறித்து உங்கள் கருத்து?
நான் தமிழை நேசிப்பதற்கு எந்தப் பிரச்சினையும் தடையாக இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். ஏனெனில், நான் எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் தமிழை ஆதரிக்கிறேன். அசோகர், சிவாஜி, ராணா பிரதாப் சிங் ஆகியோர் மட்டுமே நம் நாட்டின் அரசர்கள் அல்ல. சேர, சோழ, பாண்டியர்களும் நம் நாட்டின் பெருமைக்குரிய மன்னர்களே. இவர்கள், ஏழு கடல்களைத் தாண்டி, தம் பேரரசை நிலைநாட்டியதும், தம் மக்களுக்காக சிறப்பான ஆட்சி நடத்தியதும் வட இந்தியப் பள்ளி மாணவர்களிடம் எடுத்துக் கூறப்படுவதில்லை. இது நம் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய புறக்கணிப்பு. இதுதான் எனக்குத் தற்போதைய பிரச்சினையே தவிர, இந்தி எதிர்ப்பு அல்ல. தமிழர்கள் இந்தியை நம் இந்திய மொழிகளில் ஒன்றாகக் கருதிக் கற்பதும் கற்காததும் அவர்கள் விருப்பம்.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிவதை எதிர்க்கும் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்துகொண்டு உங்களால் தமிழுக்கு எப்படி இந்த அளவுக்கு ஆதரவளிக்க முடிகிறது?
மாநில மொழிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். தன் ஆதரவைத் தொடர்ந்து அளித்துவருகிறது. பஞ்சாப் தனியாகப் பிரிந்தபோது எங்கள் தலைவராக இருந்த குருஜி கோல் வால்கர் அந்த மாநிலத்தின் அரசு மொழியாக பஞ்சாபி இருக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். எனவே, மொழிகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரியக் கூடாது என்பது அரதப் பழசான பிரச்சினை. எனது தமிழ் ஆர்வத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்களிடமும் ஆதரவு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 62-வது பிறந்த நாளின்போது அவரை குஜராத்தில் சந்தித்து, சுப்பிரமணிய பாரதியின் படத்தைப் பரிசாக அளித்தபோது அவர் மிகவும் மகிழ்ந்தார்.
தமிழ் மொழிக்கு ஆதரவாக நீங்கள் எடுக்கும் நிலைப் பாடு, ஆர்.எஸ்.எஸ்ஸையும் பாஜகவையும் தமிழகத்தில் ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் முயற்சியா?
இதுபோல், சந்தேகப்படும்படியான பல கேள்விகள் கேட்கத் தமிழர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. நான் தமிழின் மீது காட்டும் அன்பு, எனது மூளைக்கும் உடலுக்குமானது அல்ல. அது, என் ஆன்மாவுக்கும் மனதுக்குமான விஷயம். இதில், சந்தேகப்படுவதை விட்டுவிட்டுத் தமிழின் புகழை மீட்டெடுக்கும் எனது முயற்சிக்கு உதவலாமே!
- ஆர். ஷபி முன்னா, தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in
No comments:
Post a Comment