Friday, 12 September 2014

மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல புதிய ஏற்பாடுகளை செய்யும் தமிழக அரசு!


              கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

           நடப்பு கல்வி ஆண்டில், 14,749 பேர் இந்த வசதியை பெறுகின்றனர். தனியார் பள்ளிகள், மலைவாழ் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி குறித்து, சிந்திப்பது கூட கிடையாது. போதிய சாலை வசதி இல்லாத, அடர்ந்த காடுகளுக்கு நடுவே உள்ள, சின்ன சின்ன கிராமங்களில் வாழும் குழந்தைகள், கல்வி பயில வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

மலைப்பிரதேச பகுதிகளில் உள்ள சிறுவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதில் உள்ள பிரச்னைகளை அறிந்த தமிழக அரசு, மாணவர்கள், பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதிபடுத்தும் வகையில், வாகன வசதி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

19 மாவட்டங்கள்: இந்த திட்டத்தால், கடந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர். நடப்பு கல்வி ஆண்டில், கோவை, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், நாகை, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் 1,287 சிறு சிறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்த கிராமங்களில் வசிக்கும் 14,749 குழந்தைகள், எந்த பிரச்னையும் இன்றி, வாகனங்களில் பள்ளி சென்றுவர, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் ஏற்பாடு செய்துள்ளது.

655 அரசு பள்ளிகள்

மலை பகுதிகளில் உள்ள கிராமங்களும், பள்ளிகளும், அருகருகே உள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில் 473 ஆரம்பப் பள்ளிகளும், 182 அரசு நடுநிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான படிப்பிற்கு, இந்த அரசு பள்ளிகளை நம்பித் தான் மலைவாழ் பகுதி மாணவர்கள் உள்ளனர்.

இவர்கள், உரிய பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு சென்றுவர வேண்டும் என்பதற்காக, அந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் மூலம் பள்ளி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக, தேவையான மாணவர்களுக்கு பாதுகாப்பாக, உடன் ஒருவர் செல்லவும், தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக, பாதுகாவலர்களுக்கு மாதம் 250 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.4.42 கோடி நிதி: மாணவர்களின் வாகன செலவுக்காக, ஒரு ஆண்டுக்கு தலா 3,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில், 4.42 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் இருந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம வாரியாக, மாணவர் எண்ணிக்கை வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரம் தற்போது அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, மத்திய அரசுக்கு அனுப்பி, உரிய நிதி பெறப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், வாகன வசதி, பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 9,595 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் செலவில், வாகன வசதி மற்றும் பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment