Thursday 4 September 2014

மதிப்பெண் சான்று உண்மைத்தன்மை ஆன்லைன் மூலம் பெறலாம்


           பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய  விரும்புவோர் இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக்  கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

         அரசுத் தேர்வுகள் இயக்ககம்  நடத்தும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் வழங்கப்படும்  மதிப்பெண் பட்டியல்கள் அனைத்து அரசுப் பணிக்கும், தனியார் பணிக்கும்  அடிப்படையாக உள்ளன. பணியில் சேரும் எந்த நபரும் தங்கள் உண்மை  சான்றுகளை பணி வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.  பணி வழங்கும் நிறுவனம் அந்த சான்றுகளின் உண்மைத் தன்மை  குறித்து சம்பந்தப்பட்ட தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கும். இதை ஏற்று  பணி நாடுவோர் நிறுவனங்களுக்கு கொடுத்த சான்றுகள்  உண்மையானவையா இல்லையா என்பது குறித்து தேர்வுத் துறை ஆய்வு  செய்து சான்று வழங்கும். இந்த சான்றுகளை அந்தந்த நிறுவனங்களே  தேர்வுத்துறைக்கு நேரடியாக அனுப்பி நேரடியாகவே பதில் பெறுவார்கள்.
           தேர்வுத்துறைக்கு ஆயிரக்கணக்கில் சான்றுகள் வருவதால் உண்மைத்  தன்மை குறித்து ஆய்வு செய்ய கால விரயம் ஆகிறது. இதனால்,  அனைத்து சான்றுகளும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன. இது  குறித்து அரசுக்கு தேர்வுத் துறை கடிதம் எழுதியது. அரசும் தற்போது  ஆன்லைனில் மூலம் உண்மைத் தன்மை குறித்து விவரங்கள்  கொடுக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கேட்டுள்ள  3000 சான்றுகளுக்கு உண்மைத் தன்மை வழங்க அரசுத் தேர்வுகள்  தயாராகிவிட்டது. அதே போல தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ  பல்கலைக் கழகமும் விவரம் கேட்டு அரசுத்  தேர்வுகள் துறைக்கு மனு  செய்துள்ளது. அதற்கும் விவரம் வழங்க தேர்வுத்துறை அரசிடம்  அனுமதி கேட்டுள்ளது. இதையடுத்து இனிமேல் உண்மைத் தன்மை  குறித்த விவரங்கள் ஆன்லைன் மூலம் மனு செய்து ஆன்லைன் மூலமே  பதில் பெற முடியும்.

No comments:

Post a Comment