Friday, 26 September 2014

வாசிப்புத்திறனை அதிகப்படுத்த தினம் 2 மணிநேரம் சிறப்பு வகுப்பு: பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

வாசிப்புத்திறனை அதிகப்படுத்த தினம் 2 மணிநேரம் சிறப்பு வகுப்பு: பள்ளிக் கல்வித்துறைசெப்டம்பர் 20,2014,10:40 IST

எழுத்தின் அளவு :
சென்னை: "அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களிடையே வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும் 2 மணி நேரம் கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்" என தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது, கிராமப்புற மாணவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திருப்தியில்லை
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் (எஸ்.எஸ்.ஏ.,), ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரின் கல்வித்தரம் குறித்து ஆய்வு நடத்தியது. இதன் முடிவு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதையடுத்து, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏற்கனவே தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, காலை ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும், கூடுதலாக சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. துறையின் உத்தரவு அடிப்படையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அனுப்பிய சுற்றறிக்கையில், "ஆசிரியர்கள், சுழற்சி அடிப்படையில், தினமும் கூடுதலாக 2 மணி நேரம் சிறப்பு வகுப்பை நடத்தி, மாணவர்களின் வாசிப்புத் திறனை, குறிப்பாக ஆங்கில வாசிப்புத் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர்களின் இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், நடைமுறை ரீதியாக கிராமப்புற மாணவர்களுக்கு, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக தலைவர், தியாகராஜன் கூறியதாவது: கூடுதல் வகுப்பு எடுக்க, நாங்கள் தயார். தற்போது கிராமப்புறங்களில் காலை 9:30 மணிக்கு பள்ளி துவங்கி, மாலை 4:30க்கு முடிகிறது. தற்போதைய உத்தரவால், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர், காலை 8:30 மணிக்கே, பள்ளிக்கு வர வேண்டும். மாலையில், 5:30 மணி வரை வகுப்பில் இருக்க வேண்டும்.
அரசுப் பள்ளிகளில், ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் படிக்கின்றனர். பெரும்பாலான மாணவர்கள், காலையில் சாப்பிடாமல் கூட பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து, பஸ்கள் மூலமாக வருகின்றனர்.
இருட்டிவிடும்
எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மிகவும் சிறியவர்கள். இவர்கள், காலை 8:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, பள்ளியில் இருந்தால் சோர்வடைவர். மேலும் காலை 7:00 மணிக்கு கிளம்பினால்தான், 8:30 மணிக்கு பள்ளிக்கு வர முடியும். அதேபோல் மாலையில் வீட்டுக்குச் செல்ல இருட்டிவிடும்.
இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் தெரியாமல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். கூடுதல் வகுப்பு நடத்தியே தீர வேண்டும் எனில், இரு வேலைகளிலும், மாணவர்களுக்கு சிற்றுண்டி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment