Thursday, 4 September 2014

ஆசிரியர்களை பழிவாங்க அரசு பள்ளியில் புகுந்து சான்றிதழ், வருகை பதிவேடு எரித்த மர்ம நபர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி மாணவர்களை துன்புறுத்தினால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை நாகை மாவட்டம் உள்ளுர் விடுமுறை ஆசிரியர் தினத்தில் மோடி உரை: எதிர்ப்பு அரசியலும் இயலாமை நிலையும்! எங்களுக்கு இருந்தது இது ஒண்ணு தான்.....அதையும் ஏலம் போடுங்க..! பயிற்றிப் பலகல்வி தந்து..



மாணவர்களை துன்புறுத்தினால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை


மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை எழுதிவராமல் இருத்தல், நன்றாக படிக்காதது, வகுப்பில் பேசிக்கொண்டிருத்தல் என ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், பிரம்பால் அடித்தல் உள்ளிட்ட பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.
சுற்றறிக்கை: அண்மையில் "ஸ்கேல்' கொண்டு ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மாணவ-மாணவிகளை எந்தக் காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது.
அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் திட்டக்கூடாது. "ஸ்கேல்', கம்பு, கை உள்ளிட்ட எதைக் கொண்டும் அடிக்கக் கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தது உறுதி செய்யப்பட்டால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆசிரியர் தினத்தில் மோடி உரை: எதிர்ப்பு அரசியலும் இயலாமை நிலையும்!

By Sriram Senkottai
First Published : 01 September 2014 06:21 PM IST
வரும் செப்.5ம் தேதி வெள்ளிக்கிழமை ஆசிரியர் தினத்தில் குரு உத்சவ் கொண்டாட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மாணவ சமுதாயத்தினரிடம் செயற்கைக் கோள் மூலமாக காணொலிக் காட்சி முறையில் உரையாடவும், அதை பள்ளிகள் காட்சிப் படுத்தவும் கோரப் பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இல்லாத மாநிலங்களான பீகார், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மனித வள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, திங்கள்கிழமை இன்று எதிர்க்கட்சிகளின் அரசியலை கண்டித்துள்ளார்.
இது, இந்திய நாட்டின் பிரதம மந்திரி, இந்திய நாட்டு மாணவர்களுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சி. மோடி ஒன்றும், பா.ஜ.கட்சியின் பிரதமர் இல்லை. இந்திய நாட்டின் பிரதம மந்திரி மாணவர்களுடன் உரையாடுவதைக் கேள்வி கேட்பது, நகைப்புக்குரியது என்று கூறியுள்ளார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான ஆசிரியர் தினத்தை, குரு உத்ஸவ் என்று பெயர் மாற்றுவது, சம்ஸ்கிருதத்தை மறைமுகமாகத் திணிக்கும் செயல் என்று பாஜகவின் தமிழக கூட்டணி கட்சிகளான மதிமுகவும், பாமகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, அரசியல் கட்சிகள், இந்த சுற்றறிக்கையை தவறாகப் புரிந்து கொண்டுள்ளன. குரு உத்ஸவ் என்பது, அனைத்துப் பள்ளிகளுக்குமான கட்டுரைப் போட்டியின் ஓர் அம்சம். ஆசிரியர் தினம் என்பதன் பெயர் மாற்றம் அல்ல. நடைமுறையை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், மோடி- மாணவர் உரையாற்ற நிகழ்ச்சி, கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நாராயண் ரானே, நம் நாட்டில் கொடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட சுதந்திரத்துக்கு எதிரானது இது. பள்ளிகள் கட்டாயமாக இதனை கேட்க வேண்டும் என்ற உத்தரவை நாங்கள் எதிர்ப்போம் என்று கூறியுள்ளார்.
ஸ்மிருதி இரானியின் அமைச்சகமோ, மாணவர்கள் தாங்களாகவே விருப்பப் பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நேரம் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்கள், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் மாணவ மாணவியரை வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் 4.45 வரை நேரலை ஒளிபரப்பையோ, வெப்காஸ்டிங்கையோ காண்பதற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது அதற்கு ஏற்ப மதிய உணவு வேளையையோ, வகுப்பு பாடவேளையையோ மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் இத்தகைய வசதி இல்லை என்று தங்களது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன.
பிரதமர் மோடி, வழக்கமான தனது தேசபக்தி கலந்த உரையை மாணவர்களிடம் பரப்ப எண்ணுவது தவறல்லதான் என்றாலும், அதனைக் கட்டாயமாக்கும் செயல் அரசியல் எதிர்ப்பாளர்களிடம் கிளம்பியிருப்பதில் தவறில்லைதான். எதிலும் அரசியல் என்றாகிவிட்ட இந்நாளில், இந்த நிகழ்ச்சியின் வெற்றி எப்படி அமைகிறது என்பது கேள்விக்குறி.



பயிற்றிப் பலகல்வி தந்து...By முனைவர் தெ. ஞானசுந்தரம்

First Published : 01 September 2014 02:25 AM IST
மனிதனை மனிதனாக்கும் கல்வி வேண்டும்' என்றார் ஞானத் துறவி விவேகானந்தர். அத்தகைய இலக்கை அடைய நம் கல்வி முறையில் சில மாற்றங்கள் தேவை. இந்தியா அமெரிக்காவைப் பார்த்து நெடுஞ்சாலை விரிவாக்கம், பென்னம் பெரிய மால்கள் என்னும் வணிக வளாகங்கள் முதலியவற்றை அமைத்துள்ளது. கல்விச்சாலைகளின் அமைப்பிலும் அங்குள்ள சில நல்ல கூறுகளை மேற்கொள்ளலாம்.
அமெரிக்காவில் பள்ளிக்கல்வி மூன்று பிரிவாக உள்ளது. மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் நடுநிலைப் பள்ளி. ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் உயர்நிலைப் பள்ளி.
ஒவ்வொரு கல்விக்கான பள்ளிகளும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் உள்ளன. இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் குவியும் நிலை தவிர்க்கப்படுகிறது.
நம் நாட்டில் அரசு பள்ளிகள் குறைவு; தனியார் பள்ளிகளே அதிகம். அமெரிக்காவில் இதற்கு மாறான நிலை. அரசு பள்ளிகளே மிகவும் அதிகம். தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. அவற்றில் படிப்பதற்கு மிகுந்த பொருள் செலவு ஆகும். அரசு பள்ளிகளில் கல்விக் கட்டணம் இல்லை.
நம் நாட்டில் சில பகுதிகளில் அடுத்தடுத்துச் சில பள்ளிகள் இருப்பதைப் போன்று அல்லாமல், ஒவ்வொரு வட்டத்திலும் தேவைக்கேற்ப அரசு பள்ளிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.
ஒவ்வொரு பகுதியிலும் குடியிருப்பவர்கள் தங்கள் அஞ்சலகப் பகுதி எல்லைக்குள் இருக்கும் பள்ளியில்தான் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பது விதி. இதனால், ஒரு குறிப்பிட்ட பள்ளியிலேயே தொலைதூரத்தில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பது தவிர்க்கப்படுகிறது.
நம் ஊரில் பள்ளிகள் இருக்கும் சாலைகள் காலையிலும் மாலையிலும் வாகனப் போக்குவரத்தைத் தாங்க முடியாமல் திணறுகின்றன. காவலர்கள் ஆங்காங்கே நின்று ஒழுங்குபடுத்தினாலும் கால விரயம் உண்டாகிறது.
பெற்றோர்கள் சைக்கிள், குதியுந்து, மகிழுந்து ஆகியவற்றில் அழைத்துச் சென்று, திரும்ப அழைத்துவருகிறார்கள். சிலர் கட்டணம் செலுத்திப் பள்ளி வாகனங்களில் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். அமெரிக்காவில் எல்லாப் பிள்ளைகளையும் பள்ளி வாகனமே கட்டணம் இல்லாமல் ஏற்றிச் செல்கிறது.
பள்ளிகள் அருகிலேயே இருப்பதால் நீண்ட பயணத்தால் உண்டாகும் களைப்பு தவிர்க்கப்படுகிறது. பள்ளி வாகனம் அடையாளம் காணத்தக்க வகையில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தங்கள் அமைந்துள்ளன. பிள்ளைகளை ஏற்றிக் கொள்வதற்கோ, இறக்கி விடுவதற்கோ வண்டி நிற்கும்போது அதனைக் கடந்து எந்த வாகனமும் செல்லாமல் புறப்படும்வரை காத்திருக்கிறது. இதனால், விபத்துகள் நிகழ்வது தவிர்க்கப்படுகிறது.
தொடக்கப் பள்ளிக்கென்றும் இடைநிலைப் பள்ளிக்கென்றும் உயர்நிலைப் பள்ளிக்கென்றும் தனித்தனி வாகனங்கள் இல்லை. சில பேருந்துகளே எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவானவை.
முதலில் உயர்நிலைப் பள்ளியிலும் அடுத்து இடைநிலைப் பள்ளியிலும் இறுதியில் தொடக்கப் பள்ளியிலும் படிப்போர் ஏற்றிச் செல்லப்பட்டு, பள்ளி முடிந்தபின் அம்முறையிலேயே அழைத்துவரப் படுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் உயர்நிலைப் பள்ளிகள் முதலிலும், இடைநிலைப் பள்ளிகள் அடுத்தும், தொடக்கப் பள்ளிகள் கடைசியிலும் தொடங்கி முடிகின்றன.
மழலையர் வகுப்பு அரைநாள் மட்டுமே. அவ்வகுப்பு மட்டும் காலை மாலை என்று இருவேளையிலும் நடைபெறுகிறது. பெற்றோர்கள் வசதிக்கேற்ப காலை நேரப் பள்ளியிலோ மாலை நேரப் பள்ளியிலோ மழலைச் செல்வங்களைச் சேர்க்கிறார்கள்.
எல்லா வகுப்புகளிலும் ஒவ்வொரு பிரிவிலும் 25 முதல் 30 பிள்ளைகள்வரை உள்ளனர். மழலையர் வகுப்பில் வாசிப்பு, எழுத்துப் பயிற்சி, ஓவியம் தீட்டுதல் ஆகியவை மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன.
பிஞ்சுக் குழந்தைகள், மலர்களையும், வானவில் போன்ற இயற்கைக் காட்சிகளையும், தாங்கள் கேலிச் சித்திரங்களில் கண்ட பாத்திரங்களையும் வண்ண வண்ண எழுதுகோல்களால் பள்ளியில் தரப்படும் தாள்களில் வரைகிறார்கள்.
பாடப் புத்தகங்களைப் பள்ளியிலேயே தருகிறார்கள். அவற்றை மாணவர்கள் அங்கேயே வைத்துக் கொள்கிறார்கள். தேவைப்படும்போது வீட்டுக்கு எடுத்து வரலாம். ஆண்டு முடிவில் திருப்பித் தந்துவிடவேண்டும். தொலைத்துவிட்டாலோ, சிதைத்துவிட்டாலோ அதற்குரிய தொகையினைக் கட்ட வேண்டும்.
மாணவர்கள் வீட்டுப் பாடங்களைத் தனித்தனித் தாள்களில் எழுதி எடுத்துச் சென்று ஆசிரியரிடம் காட்டியபின் கோப்புகளில் சேர்த்து வைத்துக்கொள்கிறார்கள். இதனால், சிறுவர்கள் புத்தக மூட்டையினைச் சுமந்து செல்லும் பரிதாப நிலை அங்கு இல்லை.
ஆங்கிலக் கவிதை இலக்கணத்தைத் தொடக்கப் பள்ளியிலேயே பயிற்றுவிக்கத் தொடங்குகிறார்கள். ஆங்கிலம் தவிர, ஸ்பானிஷ், பிரெஞ்சு, இலத்தீன், அரபி, சீனம், ஜப்பான் போன்ற மொழிகளில் ஒன்றை மூன்றாம் வகுப்புத் தொடங்கிக் கற்பிக்கிறார்கள். வெளியிலிருந்து அம்மொழிகளில் வல்லவர்களை ஒப்பந்த அடிப்படையில் வகுப்புகளை எடுக்குமாறு செய்து செலவினைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
போதிய மாணவர்கள் இருந்தால் தமிழையும் எடுத்துப் படிக்கலாம். இந்தியாவிலும், வடநாட்டில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு தென்னாட்டு மொழியையும், தென்னாட்டில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வடநாட்டு மொழியையும் கற்கத் தொடங்கினால், நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு மொழிபெயர்ப்பாளர்கள் பலர் தோன்றுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர் அவ்வகுப்புக்குரிய பாடங்களில் ஒன்றிலோ, சிலவற்றிலோ முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால், அந்த வகுப்பில் படிக்கும்போதே மேல்வகுப்புப் பாடங்களை அவ்வகுப்புகளுக்குச் சென்று அமர்ந்து படித்துத் தேர்வு எழுதி முடித்துவிடலாம்.
அவற்றை மேல் வகுப்பில் படிக்கத் தேவையில்லை. இதற்காக, மாணவர்களின் திறனை அறியத் தேர்வுகள் நடத்துகிறார்கள். சில பள்ளிகளில் ஆண்டு இறுதியில் மட்டுமன்றித் தொடக்கத்திலும் தேர்வு வைக்கிறார்கள்.
கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு எஸ்.ஏ.டி. (நஸ்ரீட்ர்ப்ஹள்ற்ண்ஸ்ரீ அல்ற்ண்ற்ன்க்ங் பங்ள்ற்), ஏ.சி.டி. (அம்ங்ழ்ண்ஸ்ரீஹய் இர்ப்ப்ங்ஞ்ங் பங்ள்ற்ண்ய்ஞ்) என்னும் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். இவற்றோடு பாடம் சாராத துறைகளில் பெற்ற புள்ளிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இடம் கொடுக்கப்படுகிறது.
உயர்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே இத்தேர்வுகளை எழுதலாம். பதினோராம் வகுப்புக்குள் இத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் எங்கே மேற்படிப்பைத் தொடர்வது என்பதனை முடிவுசெய்துவிடுகிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் ஓய்வாக அதற்குரிய ஆயத்தங்களைச் செய்துகொள்கிறார்கள்.
பாடத்திட்டத்தில் நுண்கலைகளும் விளையாட்டுகளும் தகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. வாய்ப்பாட்டு, வயலின், சாக்ஸஃபோன், பியானோ போன்றவற்றைக் கற்றுத் தருகிறார்கள்.
பள்ளி அரங்கங்களில் மழைக்காலத்தில் ஒருமுறையும் கோடைக்காலத்தில் ஒருமுறையுமாக மாணவர்களே பங்கு பெற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் இசை விழாக்கள் நடைபெறுகின்றன. நம் பள்ளிகளில் பெயருக்கு ஓவிய ஆசிரியர் இருப்பார். அந்த வகுப்புகளை வேறுபாடம் நடத்தப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் வென்று, தங்கப் பதக்கங்களை குவிப்பதில் வியப்பில்லை. அதற்கான வசதிகளைப் பள்ளியிலேயே அமைத்துள்ளார்கள்.
உயர்நிலைப் பள்ளிகளில் ஒலிம்பிக்ஸில் உள்ளது போலவே, மனையக நீச்சல் குளத்தோடு கூடைப்பந்துக் களங்களும், பல திறந்த வெளி டென்னிஸ் களங்களும், ஓரிரு கால்பந்துக் களங்களும், செயற்கைச் சேர்மங்களாலான ஓடுபாதைகளும், உடற்பயிற்சிக் கூடங்களும் உள்ளன.
இவற்றைப் பராமரிப்பதற்கான செலவை ஈடுகட்டும் வகையில் பள்ளிகளுக்கிடையே நடக்கும் போட்டிகளைக் காணக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே தொண்டு மனப்பான்மையை உருவாக்கும் விதத்தில் கோடை விடுமுறையில் பணிபுரிவதற்கான வாய்ப்புகளைத் தருகிறார்கள். நேர்முகத் தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்வுசெய்து கோடை முகாம், பணிமனை போன்றவற்றில் பணியமர்த்துகிறார்கள்.
அப்படிப் பணி புரிபவர்களுக்குச் சிறிது ஊதியம் மட்டுமன்றிப் புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் புள்ளிகள் கல்லூரியில் சேருவதற்குத் துணைபுரிகின்றன.
இவ்வாறு அமெரிக்கப் பள்ளிகள் அறிவியலால் அறிவை வளர்த்து, கலைகளால் உள்ளத்தைப் பண்படுத்தி, விளையாட்டுகளால் உடலை உறுதியாக்கி, முழு மனிதர்களை உருவாக்கும் களங்களாக அமைந்துள்ளன.
நம் நாட்டிலும் அத்தகைய களங்களாகப் பள்ளிகள் உருவாவது இன்றியமையாத தேவை.

No comments:

Post a Comment