Monday, 15 September 2014

அனைத்து பாசன பகுதிகளுக்கும் தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை

கூட்டணி - திருமருகல்நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன பகுதிகளுக்கும் தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபணித்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் முனுசாமி அறிவுரை வழங்கினார்.

கலெக்டர் ஆய்வு

நாகை மாவட்டம் கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் தங்குதடையின்றி செல்கிறதா? என்பது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாகை மாவட்டம் விழுந்தமாவடி மின் இறைவை பாசன திட்டம், தென்னடார் மின் இறைவை பாசனத்திட்டம், உம்பளச்சேரி மின் இறைவை பாசன திட்டம், வளவனார் மின் இறைவை பாசன திட்டம் உள்ளிட்ட இறைவை பாசன திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு பகுதிகளையும், வெண்மனச்சேரி, சீராவட்டம், மேலப்பிடாகை, ஆலங்குடி, மணக்குடி, தலைஞாயிறு, ஓரடியம்பலம், வாட்டாக்குடி, பிராந்தியங்கரை, வடமழை, மணக்காடு, தாணிக்கோட்டகம், ஏர்வைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களையும், வடிகால் வாய்கால்களையும் கலெக்டர் முனுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மின் இறைவை பாசன திட்டம்

பின்னர் இதுகுறித்து கலெக்டர் முனுசாமி கூறியதாவது:- ஏர்வைக்காடு கடைமடை இயக்கு அணையில் இருந்து விழுந்தமாவடி வரையிலான காவிரி தெண்கொண்டனார் வாய்க்காலில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு விழுந்தமாவடி, காமேஸ்வரம் கிராமங்களில் சுமார் 1,600 ஏக்கர் பாசன பரப்பிற்கு விழுந்தமாவடி மின் இறைவை பாசன திட்டத்தின் கீழும், தாணிக்கோட்டகத்தில் இருந்து தென்னடார் வரையிலான முள்ளியார் வாய்காலில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு தென்னடார் கிராமத்தில் சுமார் 996 ஏக்கர் பாசன பரப்பிற்கு தென்னடார் மின் இறைவை பாசன திட்டத்தின்கீழும், உம்பளச்சேரி கிராமத்தில் அடப்பார் நீர் வழங்கும் வாய்க்காலில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு உம்பளச்சேரி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பாசன பரப்பிற்கு உம்பளச்சேரி மின் இறைவை பாசன திட்டத்தின் கீழும், வாய்மேடு கிராமத்தில் வளவனார் வாய்க்காலில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வாய்மேடு கிராமத்தில் சுமார் 1,970 ஏக்கர் பாசன பரப்பிற்கு வளவனார் மின் இறைவை பாசன திட்டத்தின்கீழும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

அறிவுரை

மேற்கண்ட 4 மின் இறைவை பாசன மின் மோட்டார் அறைகளில் உள்ள மின் மோட்டார்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா? என பார்வையிட்டு, மின் மோட்டார்கள் பழுதின்றி பராமரித்திடவும், தேவைப்பட்டால் கூடுதலாக மின் மோட்டார்களை பயன்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக, தடைககள் மற்றும் அடைப்புகள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி சரி செய்ய பொது பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விழுந்தமாவடி மின் இறைவை பாசன திட்டத்திற்கு ஒரு மின் மோட்டார் மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். கலெக்டரின் இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை வெண்ணாறு வடிநில கோட்டம் (திருவாரூர்) ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் மாரிமுத்து, சங்கர், உதவி பொறியாளர்கள் சண்முகம், மகேஷ்குமார், தங்கமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment