பஸ் பயணத்தின்போது நிறுத்தங்கள் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கும் 'பேசும் சிக்னல்' கருவியை, மதுரை திருநகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை வெங்கடேஸ்வரி கண்டுபிடித்துள்ளார்.
மதுரை, சென்னையில் அரசு பஸ்களில் செல்ல வேண்டும் என்றாலே கூட்ட நெரிசல் தான் நம் நினைவுக்கு வரும். பஸ்சில் ஏறி தப்பித்தவறி கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நபர்கள், இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்திருச்சா...வரலையா... எப்போ வரும் என எட்டி எட்டி பார்க்கும் பரிதாப நிலையை நாம் பார்க்கலாம். நகர்களில் வசிப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் கிராமங்களில் இருந்து நகருக்கு வருபவர்கள் நிலை அதோ கதிதான்.இவர்களுக்கு தீர்வு காணும் வகையில் தான், பஸ் பயணத்தின் போது, பஸ் நிறுத்தம் பெயர்களை முன்கூட்டியே அறிவிக்கும் 'பேசும் சிக்னல்' கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கருவியின் செயல்பாடு குறித்து ஆசிரியை வெங்கடேஸ்வரி கூறியதாவது:நான் கள்ளிக்குடி யூனியன் லாலாபுரம் நடுநிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக உள்ளேன். எடிசன் போன்று சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் சிறிய கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்க வேண்டும். பல நாட்கள் உழைப்பில் இக்கருவி உருவானது. இதை பஸ்ஸில் பொருத்தினால், கண்டக்டர், டிரைவர் உதவி இல்லாமல் பஸ் நிறுத்த பெயர்களை பயணிகளே தெரிந்துகொள்ளலாம்.பொதுவாக பஸ் நிறுத்தங்களின் ரோட்டோரத்தில் மின் கம்பங்கள் அடுத்தடுத்து இருக்கும். அதில், 'சென்சார்' கருவிகளை பொருத்த வேண்டும். சம்மந்தப்பட்ட பஸ்ஸின் பின்புற படிக்கட்டு பகுதியில் 'ரிசீவர்' கருவியை பொருத்த வேண்டும். ஒவ்வொரு நிறுத்தத்தையும் பஸ் கடக்கும் போதும், பஸ்ஸில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக கருவியில், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பஸ் நிறுத்த பெயர்கள் ஒலிக்கும்.
அரசு தாழ்தள சொகுசு பஸ்களில் கதவுகள் திறந்து மூடும் முறையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பத்துடன் சிறிய மாற்றத்துடன் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்தம் வந்தவுடன் 'சுவிட்சை' டிரைவர் அழுத்தினால், ஆடியோ, வீடியோ இரண்டிலும் பஸ் நிறுத்த பெயர்களை அறிவிக்கும் வகையிலும் இக்கருவியை மாற்றியமைக்கலாம். இதற்கு, டி.வி.டி., பிளேயர் அல்லது எப்.எம்., பிளேயர், பென் டிரைவர், ஸ்பீக்கர் உள்ளிட்ட விலை குறைந்த பொருட்கள் இருந்தாலே போதும். ஒரு கருவியை ரூ.500க்குள் தயாரிக்க முடியும். மதுரையில் அரசு பஸ்களில் இதை பொருத்தினால் பயணிகள் பயன்பெறுவர், என்றார்.இவரை 95975 78803 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment