ரயில்வே தொடர்பான படிப்புகளை மட்டும் வழங்கும் வகையில், ஒரு ரயில்வே பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: இந்த வகையில், இந்தியாவில் அமைக்கப்படும் முதல் கல்வி நிறுவனமாக திகழும் இந்த ரயில்வே பல்கலை, சீன கல்வி நிறுவனங்களை மாதிரியாக கொண்டிருக்கும்.
சீனாவுடன் இணைந்து...
சீன தேசிய ரயில்வே நிர்வாகத்திடம், தாங்கள் இதுதொடர்பாக மேற்கொண்ட கலந்துரையாடல் பற்றிய தகவல், மத்திய ரயில்வே அமைச்சகத்தால், மத்திய கேபினட் செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தொடர்பான படிப்புகளை கற்றுக்கொடுக்கும் பல்வேறான கல்வி நிறுவனங்கள் சீனாவில் உள்ளன மற்றும் அவை கடந்த 100 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றன. எனவே, இப்படிப்புகள் தொடர்பான பாடத்திட்டம் வகுத்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பாக, சீன அதிகாரிகளின் உதவி கேட்கப்படும். ஏனெனில், இதுதொடர்பான நீண்ட அனுபவத்தைப் பெற்றவர்கள் அவர்கள்.
ரயில்வே தொடர்பான பொறியியல் படிப்புகளை வழங்குவது சம்பந்தமாக, ஐ.ஐ.டி., காரக்பூர், ரயில்வே அமைச்சகத்துடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும். இதே நோக்கத்திற்காக, EdCIL உடன், வரும் செப்டம்பர் 30ம் தேதி, ஒரு ஒப்பந்தத்தில், ரயில்வே அமைச்சகம் கையெழுத்திடவுள்ளது.
அமைவிடம்
இந்த ரயில்வே பல்கலையை, நாட்டின் எந்த இடத்தில் அமைப்பது என்பது, EdCIL புராஜெக்ட் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அதேசமயத்தில், இந்த பல்கலை அமையவுள்ள இடம், பல்வகைப் போக்குவரத்தின் மூலம் எளிதாக அடையக்கூடிய வகையில் கட்டாயம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான, பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகள் வழங்கப்படும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment