Sunday, 15 January 2017

மார்ச் முதல் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 'ஆதார்' விபரம் தந்தவர்களுக்கு கிடைக்கும்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


தமிழகத்தில், மார்ச், 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. கடந்த, 2005ல் வழங்கிய, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்தது. இதற்கான, ஒருங்கிணைப்பு பணிகள், 2015ல் துவங்கின. 
மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்களை வாங்கி, அவற்றின் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் வாங்கும் பணி, 2016ல் துவங்கியது. அதே ஆண்டு, அக்டோபர் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பலர் ஆதார் விபரம் தராததால், கார்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில், மார்ச், 1ல் இருந்து, ஸ்மார்ட் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தமுள்ள, 2.03 கோடி ரேஷன் கார்டுகளில், 1.91 கோடி கார்டுகள், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ரேஷன் கார்டில், எத்தனை உறுப்பினர் பெயர் உள்ளதோ, அத்தனை பேரின் ஆதார் எண்களை, ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும். அப்படி முழுமையாக பதிவு செய்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 93 லட்சம். குடும்ப தலைவரின் ஆதார் எண் மட்டும், பதிவு செய்த கார்டுகளின் எண்ணிக்கை, 87 லட்சம். 
ஆதார் விபரம் தர, ரேஷன் கடை தவிர்த்து, 'மொபைல் ஆப்' வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், பலர் பதிவு செய்யவில்லை. சட்டசபையில், வரும், 23ல் கவர்னர் உரையாற்ற உள்ளார். அதில், ஸ்மார்ட் கார்டு அறிவிப்பு வெளியாகும். ஆதார் பதியாதவர்களுக்கு, பிப்., வரை அவகாசம் தரப்படும். அதற்குள், எத்தனை பேர் முழு ஆதார் விபரத்தை தருகிறார்களோ, அவர்களுக்கு, மார்ச் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஆதார் தராத கார்டுகள் ரத்து செய்யப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
தீவிர சோதனை! : ஸ்மார்ட் கார்டுக்காக, ஆதார் விபரம் தராத வீடுகளில், ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு வினியோகம் துவங்கிய பின், அவசரமாக ஆதார் பதிவு செய்வோர் ஆவணங்களை, தீவிர சோதனை செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆவணங்களில் எழுத்து பிழை, முகவரி குழப்பம் உள்ளிட்டவை இருந்தால், ஸ்மார்ட் கார்டு பெறுவது கடினம். எனவே, அனைவரும் ஆதார் பதிவு செய்வது நல்லது.

No comments:

Post a Comment