Sunday, 15 January 2017

பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


முன்பெல்லாம் தமிழகத்தில் பள்ளிக்கூடக்கல்வி மிகவும் உயர்தரத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் தமிழகத்தில் பள்ளிக்கூட கல்வித்தரம் குறைந்ததால், ஐ.ஐ.டி. உள்பட அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்லூரிகளிலும், கலைக்கல்லூரிகளிலும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், 2005-2006-ல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் விதவிதமான பாடத்திட்டம் என்றில்லாமல், ஒரே கல்விமுறை இருக்கவேண்டும் என்றநோக்கத்தில், "சமச்சீர் கல்விமுறை" கொண்டுவரப்பட்டது. மற்ற கல்வித்திட்டங்களின் கல்வித்தரம் உயர்ந்துகொண்டே சென்றபோது, தமிழ்நாட்டில் மாறிவரும் காலத்திற்கேற்ப பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படும் வகையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. தற்போது தமிழ்நாட்டில் 540 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்திருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படித்தவுடன் கைநிறைய சம்பளம் உடனடியாக கிடைக்கும் வகையில், வேலைவாய்ப்புகள் ஏராளமாக இருந்த நிலையில், அலைஅலையாய் மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்கத் தொடங்கினார்கள்.
இப்போது பிளஸ்-2 படித்து பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், 'சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளையைப்போல' மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண்களை பெற்றுவிட்டு, நுழைவுத்தேர்வு இல்லாத நிலையில், இந்த மார்க்குகளின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து விடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம் இப்போது ஒரு திடுக்கிடும் தகவலை தந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் 50 சதவீதம்பேர் முதல் ஆண்டில் தங்கள் 'செமஸ்டர்' தேர்வில் பல பாடங்களில் தோற்றுவிடுகிறார்கள். இவ்வாறு தோல்வியடையும் மாணவர்களில் 90 சதவீதம்பேர் மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்தவர்கள். இதுபோல, என்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்களில் பெரிய வேலைக்கு செல்பவர்களில் ஏராளமானோர் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் என்ற திடுக்கிடும் தகவலும் வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு, அந்த பாடத்திட்டத்தின்கீழ் படிக்க முடியாமல், ஏராளமானோர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுகிறார்கள் என்ற ஒரு அதிர்ச்சியான தகவலும் கிடைத்துள்ளது.
 இதற்கெல்லாம் காரணம், பிளஸ்-2 பாடத்திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசு கல்வித்துறையால் மாற்றப்படாமல் இருப்பதுதான். வருகிற ஆண்டு முதல் மருத்துவக்கல்லூரிகளின் சேர்க்கை அகில இந்திய அளவிலான 'நீட்' தேர்வு மூலம்தான் நடக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் 'நீட்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போதுள்ள பாடத்திட்டத்தில் நிச்சயமாக 'நீட்' தேர்வை எழுதி வெற்றி பெறவே முடியாது.
தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக்கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் தமிழக மாணவர்கள் பெரும்பான்மையாக இல்லாமல், பிற மாநிலத்தவர் வந்து சேரப்போகும் அபாயநிலை கதவை தட்டிக்கொண்டே இருக்கிறது. எனவே, உடனடியாக பிளஸ்-2 பாடத்திட்டத்தை தமிழக அரசு உயர்தரத்தில் மாற்றி, பாடப்புத்தகங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக வைத்தே ஆகவேண்டும். கிராமப்புற மாணவர்களால், ஏழை மாணவர்களால், உயர்தரத்தில் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக படிக்க முடியாது என்று சொல்வதெல்லாம் இனி எடுபடாது. ஆசிரியர்கள் அந்த பாடத்திட்டத்துக்கு இணையாக நமது மாணவர்களை தயார்படுத்தும் வகையில் இன்னும் சற்று உழைத்து மாணவர்களை படிக்க வைத்தால், நிச்சயமாக நமது மாணவர்களால் படிக்க முடியும். ஏற்கனவே, நிபுணர்குழு இதுபோல திருத்தப்பட வேண்டிய ஒரு பாடத்திட்டத்தை தயாரித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
தமிழக அரசு உடனடியாக அந்த ஒப்புதலை கொடுத்து, மிகவும் உயர்தரத்தில் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியைத் தொடங்கி, அந்த பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்கும் அளவுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கோடைகால விடுமுறையின்போது தீவிரமான பயிற்சி அளிக்கும் வேலைகளை தொடங்கவேண்டும். இதையெல்லாம் உடனடியாக தொடங்கினால்தான், வருகிற கல்வியாண்டில் பிளஸ்-2 பாடத்திட்டங்களை மாற்றமுடியும். ஒளிமயமான எதிர்காலத்துக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும். இனி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மறுஆய்வு செய்யவேண்டும்.

No comments:

Post a Comment