Monday, 2 January 2017

தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்


சபாஷ் தலைமை ஆசிரியை !!!! தனியார் பள்ளியை மிஞ்சிய அரசுப் பள்ளி! (நமது கிருஷ்ணகிரி மாவட்டம்)
`அரசுப் பள்ளியில் அடிப் படை வசதிகள் மற்றும் ஆசிரியர் கவனிப்பு குறைவாக இருக்கும்’ என்ற பொதுக்கருத்தை மாற்றிக் காட்டியிருக்கிறது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி! காரணம், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி. தன் சக ஆசிரியர்களுடன் கைகோத்தும், பல தரப்பிடம் இருந்து உதவித்தொகை பெற்றும் நூலகம், கலையரங்கம், கணினி ஆய்வகம், சிசிடிவி கேமராக்கள் என இந்த மாற்றத்தை இங்கு மலர்த்தியிருக்கிறார்!
‘‘இந்தப் பள்ளிக்கு,2012-ம் ஆண்டு பணி மாறுதலில் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றபோது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. மழைபெய்தால் வகுப்பறைக்குள் நீர் ஒழுகும்; தரை குண்டும் குழியுமாக இருக்கும். கணினி, நூலகம் போன்ற கல்வி வெளிச்சங்கள் இல்லை என பலவும் இங்கே இல்லை. அதேசமயம், மாணவர்களின் திறமைக்கும் குறைவில்லை. அவர்களின் ஆர்வத்துக்கும், வேகத்துக்கும் இன்னும் தீனி கிடைக்க வேண்டும் என்று தோன்றியது. அதேபோல, ‘எம்புள்ள நல்லா படிக்கிறானா?’ என்று கேட்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கு, செயலால் பதில் சொல்லும் பொறுப்பையும் நான் உணர்ந்தேன்.
தனியார் பள்ளிகளுக்கு இணையான வகையில் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்று நானும், ஆசிரியர்களும் உறுதியேற்றோம். அதன் முதல்படியாக, பள்ளியில் பணியாற்றும் 28 ஆசிரியர்களும் தலா ஐந்தாயிரம் செலவு செய்து, பள்ளி அலுவலகம் மற்றும் இரண்டு வகுப்பறைகளுக்கு டைல்ஸ் ஒட்டினோம். பிறகு, நகராட்சியின் உதவியால் மற்ற எல்லா வகுப்பறைகளுக்கும் டைல்ஸ் ஒட்டி, கட்டடங்களை புனரமைத்தோம்’’ என்றவர், தொடர்ந்து சேவை அமைப்புகளை அணுக ஆரம்பித்திருக்கிறார்.
‘‘‌அனைவருக்கும் கல்வித்திட்டம் மூலமும், பல்வேறு அமைப்புகளிடமும் நிதியைப் பெற்றும் 350 பேர் அமரும் வகையிலான ஆடிட்டோரியம் கட்டினோம். சுற்றுவட்டார மாவட்டத்தில், எந்த ஒரு அரசுப் பள்ளியிலும் இதுபோன்ற ஆடிட்டோரியம் இல்லை. முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அவர்கள் மூலம் உதவியும், பல தொண்டு நிறுவனங்களின் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டோம். அது, பள்ளியின் முன்னேற்றத்துக்கு பேருதவியாக அமைந்தது.
‘தயா’ அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன் ராகவனிடம், பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கும்படி கேட்டேன். அவர், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம், கம்ப்யூட்டர் லேப், அறிவியல் ஆய்வகம், வட்ட வடிவ மேஜைகள் என்று பல லட்சங்களை செலவழித்து அமைத்துக் கொடுத்தார் ’’ எனும் பத்மாவதி, இப்படி பல்வேறு தரப்பினரிடமும் உதவிபெற்று 30 லட்சம் செலவிலான பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை, மூன்று ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளார்.
`‘இதையெல்லாம் மாணவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள வைப்பதில் ஆசிரியர்கள் அனைவரும் அக்கறையுடன் செயல்படுகிறோம். கம்ப்யூட்டர் மூலமாகவும் பாடங்
களை நடத்துகிறோம், ஆங்கில மொழித்திறனுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கிறோம். நூலகத்தில் படிக்கும் புத்தகத்தில் இருந்து கிடைக்கும் கருத்துகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் மாணவர் குழுவிடம் சொல்லலாம். அதை அந்தக் குழு, ஆசிரியரிடம் கொடுப்பார்கள். இதனை, எங்கள் பள்ளியில் வெளியிடப்படும், ‘பால் வீதி’ என்ற பத்திரிகையில் வெளியிடுவோம்.
பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் மாணவர்களே விவசாயம் செய்கிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் காய்கறிகளை, சத்துணவு தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். தவிர, பள்ளிக்காக ஒவ்வொரு ஆசிரியரும் இரண்டாயிரம் ரூபாய் என 56 ஆயிரம் ரூபாயை  வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு, பள்ளியின் துப்புரவுப் பணிகளுக்கும் பராமரிப்புக்கும் ஆட்களை நியமித்துள்ளோம்!’’
- இப்படி ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே போனார் மாநில நல்லாசிரியர் விருது வாங்கியிருக்கும் பத்மாவதி.
‘‘வரும் கல்வியாண்டில் பள்ளியில் மாடித்தோட்டமும், மூலிகைத் தோட்டமும் அமைப்பது எங்கள் திட்டம்!’’
- மாணவர்களும், மற்ற ஆசிரியைகளும் உற்சாகக் குரலில் கூற, பூரித்து நிற்கிறார் பத்மாவதி!
இந்தப் பள்ளியை முன்மாதிரிப் பள்ளி என  அரசு அதிகாரிகளும், மற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களும் வந்து பார்வையிடுகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள உதவும் உள்ளங்கள் இதுபோல முன்வந்தாலே, அனைத்து அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிக்கு இணையாக மாறிவிடும்!

No comments:

Post a Comment