தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
மதுரை: பள்ளி பாடத்திட்டத்தை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனால் அகில இந்திய அளவிலான போட்டித்தேர்வை தமிழக மாணவர்களால் எதிர்கொள்ள முடியவில்லையென செய்திகள் வெளியானது. இதனடிப்படையில், ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதி) தாமாக முன் வந்து பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை முறைபடுத்தி, கல்வி திட்டத்தை மேம்படுத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘தமிழக பள்ளிகளில் தற்போது முப்பருவ தேர்வு முறை நடைமுறையில் உள்ளது. 2009ல் தான் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. ஆடியோ மற்றும் வீடியோ சிடி கல்வி முறையால் 15 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். சைகை வழியான கல்வி முறை திண்டுக்கல் மாவட்டத்தில் பரிசோதனை முறையில் அமலாகியுள்ளது. 40 பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 16 வகையான நலத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதற்காக கடந்த 2015-16ல் 3 ஆயிரத்து 45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நிதி அதிகரிக்கப்படுகிறது,’’ என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தரமான மேம்படுத்தப்பட்ட கல்வியை வழங்க அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து எடுக்க உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment