தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
சமீபத்தில், தமிழ் மொழியின் தொன்மையை 300 ஆண்டுகள் என, 12-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் குறிப்பிட்டிருந்தது கடும் சர்ச்சைக்குள்ளானது.
2000 ஆண்டுகளுக்கும் மேல் இலக்கியம் எழுதப்பட்டிருக்கும் தமிழ் மொழியைப் பற்றி இவ்வளவு கவனக் குறைவாக பாடநூல் தயாரிக்கலாமா என்று தமிழறிஞர்களும் அரசியல் அமைப்பினரும் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தவறான இந்தப் பகுதி நீக்கப்படும் என்றும் அதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.பாடத்திட்டம்தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் தொடர்பாகப் புதிதாக எழுந்த சர்ச்சை அல்ல இது. பாரதியாருக்கு காவி முண்டாசு என்பதிலிருந்து பல விஷயங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஒரு பிழையும்இல்லாமல் தயாரிக்க முடியாது என்ற யதார்த்தம் ஒருபக்கம் இருந்தாலும், இவ்வளவு பிழைகள் தவறான தகவல்கள் என்றிருப்பது எதனால் என்ற சந்தேகம் எழுதுவது இயல்பே. அதுகுறித்துப் பார்ப்போம்.தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, சென்ற கல்வி ஆண்டில் (2018 -19) 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தில் பாடங்களை எழுதும் புத்தகம் தயாரித்து அளித்தது. அதன் தொடர்ச்சியாக, இந்தக் கல்வி ஆண்டில் (2019-20) 2,7,10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கும், 2020-21 கல்வி ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் இந்த முறை தொடரும் என இருந்தது. ஆனால், இந்தக் கல்வி ஆண்டிலேயே 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும்புதிய பாடங்கள் வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அரசிடம் கோரிய அனுமதி வழங்கப்பட்டது. அதனால், தற்போது 2, 3, 4, 5, 7, 8, 12 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டம்
ஜூன் மாதம் 3-ம் தேதியே பள்ளிகளைத் திறந்தாக வேண்டும் என்று கறாராக இருந்த அரசு, பாடப் புத்தகங்களை வழங்க ஒரு மாதத்திற்கும் மேலாக அவகாசம் எடுத்துக்கொண்டது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரே ஆண்டில் அதிக அளவிலான வகுப்புகளுக்குப் பாடப் புத்தகம் எழுதவும் தயாரிக்கவும் முடிவெடுத்தது ஒரு காரணம் என அழுத்தமாகப் பலராலும் முன்வைக்கப்பட்டது. ஏனெனில், அதற்குரிய காலஅவகாசம் அளிக்கப்படவில்லை; அப்படி அளித்திருந்தால், இந்தப் பிரச்னை வந்திருக்காது என்றும் சொல்லப்பட்டது. இப்போது, பாடங்களில் ஏற்பட்டுவரும் குளறுபடிகளுக்கும் இதுவே காரணமா என்று அறிந்துகொள்ள கல்வித்துறை சார்ந்த சிலரைத் தொடர்புகொண்டோம்."சென்ற ஆண்டில் தரப்பட்ட புத்தகங்கள் எழுதப்பட்டதும் அதை ரிவ்யூ செய்வது முறையாக நடந்தது. இதற்கு முன் இயக்குநராக இருந்த உதயசந்திரன் சாரும் முக்கியக் காரணம். பாடங்களை எழுதுவது உட்பட, எந்தவொரு விஷயத்தையும் அவரோடு நேரில் சந்தித்து விவாதிக்க முடியும். ஆனால், இந்த ஆண்டு அப்படியான ரிவ்யூக்கள் முறையாக நடைபெறவில்லை. எழுதப்பட்ட பாடங்களை கல்லூரிப் பேராசிரியர்கள் அடங்கிய குழுவுக்கு அனுப்பி, அவர்கள் சொல்லும் திருத்தங்களைச் செய்திருக்கின்றனர். அந்தப் பாடத்தை எழுதிய நபருக்குக்கூட அந்தத் திருத்தங்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டதா என்பதே சந்தேகம்தான்.
மாணவர்கள்
ஒரு வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு எனப் பாடங்கள் எழுதுபவர்களுக்குள் ஓர் உரையாடல் அவசியம் இருக்க வேண்டும். ஏனென்றால், எழுதுபவர்கள் பலராக இருக்கலாம் ஆனால், படிக்கும்மாணவர் ஒருவர்தானே! உதாரணமாக, 4-ம் வகுப்புக்கு தமிழ்ப் பாடம் எழுதுபவர், அந்த மாணவரைப் பற்றிய ஓர் அளவுகோலிலும், அறிவியல் பாடம் எழுதுபவர், வேறோர் அளவுகோலையும் கொண்டிருந்தால் நிச்சயமாக மாணவருக்கு குழப்பம் வரும். அதனால், 4-ம் வகுப்புபாடங்களை எழுதும் அனைவருக்குள்ளும் இணக்கமான ஓர் உரையாடல் நடக்க வேண்டும். அது, இந்த ஆண்டு தயாரான புத்தகங்களில் எங்களுக்குத் தெரிந்தவரை நடைபெறவில்லை.பாடங்களை எழுதவும் அதை ரிவ்யூ செய்யவும் தேவையானகாலம் இல்லை என்பது சிலரின் எண்ணமாக இருக்கிறது. ஆனாலும் அது மட்டுமே பிழைகள் ஏற்படக் காரணமாக இருக்காது. முதலில், பாடம் எழுதுபவர்களே சில விஷயங்களில் முன் முடிவோடு இருந்தனர்.
பாடத்திலிருந்து...
சென்ற ஆண்டில், பாடங்களில் ஆண், பெண் பேதம் வெளிப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். உதாரணமாக, வீட்டு வேலைகளைப் பெண்களே செய்வதுபோல இருக்கக்கூடாது எனப் பல பாடங்களில் மாற்றச் சொன்னோம். அதுபோன்ற ஒரு ஒருங்கிணைவு இந்த ஆண்டில் இல்லை" என்றனர்.7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழ் அறிஞர்கள் மற்றும் கல்வியாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், கடும் எதிர்வினையாற்றினர்.பாடப்புத்தகங்களில் இருக்கும் பிழைகள் குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் ஆசிரியர் சிவகுருநாதன்,"10-ம் வகுப்பு புவியியல் புத்தகத்தில், பாடம் ஒன்றில், எல்லா விமான நிலையங்களுக்கும் சூட்டப்பட்டப் பெயர்களைச் சொல்லிவிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையம் என்று எழுதப்படுகிறது. பேரறிஞர் அண்ணா பன்னாட்டு முனையம் என்பதை மறைக்கப்படுகிறது. அதேபோல, 10-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் 'வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!', என்ற வரிக்காக பெருஞ்சித்தரனாரின் பாடலின் ஒரு பகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறு பகுதி இணைக்கப்பட்டது." என்றும் குற்றம் சாட்டுகிறார்.
பாடத்திலிருந்து...
பாடத்திட்டத்தில் உள்ள விமர்சனங்கள் குறித்து, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் பொன்.குமாரிடம் கேட்டோம், "பாடங்கள் தயாரிக்கும்போது ஏற்படும் இயல்பான பிழைகளே உள்ளன. அவற்றை நிச்சயம் சரிசெய்துவிடுவோம்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.கல்வி மட்டுமே ஒருவரை உயர்த்தும் எண்ணம் பெற்றோர்களிடம் இருந்துவருகிறது. அதனால்தான், தாங்கள் படிக்க வில்லை என்றாலும் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைத்துப் படிக்க வைக்கின்றனர். ஆனால், அக்குழந்தைகள் படிக்கும் பாடங்களில் இவ்வளவு விமர்சனம் என்றால், பாடத்திட்டத்தை உருவாக்கும் குழு இன்னும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
நன்றி -விகடன்
No comments:
Post a Comment