Thursday, 8 August 2019

2 ரூபாய் சேமிப்பில் குளத்தை சீரமைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்: தமிழகத்திற்கே வழிகாட்டிய முயற்சி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்




ஆக்கிரமிப்பு குளங்களை சீரமைக்க நிதியில்லாமல் அரசு திண்டாடும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 சிறு சேமிப்பில் கிடைத்த நிதி மூலம் குளத்தை சீரமைத்து சமூதாயத்திற்கு வழிகாட்டியுள்ளனர். தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பருவமழை முழுமையாக பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள், குளங்கள் வறண்டு உள்ளன. இவற்றை சீரமைக்க அரசு போதிய நிதியில்லாமல் குடிமராமத்து பணிகளை பொது அமைப்புகளின் நிதி மற்றும் உடல் உழைப்புடன் சீரமைக்க முனைகிறது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 185 குளம் பராமரிப்பு பணிகள் 4325 லட்சம் மதிப்பில் நடக்கிறது. ஆயினும் இந்த தொகை அனைத்து குளங்களையும் தூர் வார போதுமானது இல்லை

இந்த நிலையில் நெல்லை மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர்கள் 2 சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் குளத்தை சீரமைத்து வழிகாட்டியுள்ளனர்.

9ம் வகுப்பு தமிழ்பாடபுத்தக்தில் இயற்கை சுற்றுச் சூழல் என்ற தலைப்பில் உள்ள பாடப்பிரிவில் நீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு போன்ற பாடங்கள் நீரின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளது. இதனை இப்பள்ளியின் 9ம் வகுப்பு தமிழாசிரியர் சாரதா மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்ததுடன் இதில் உள்ள அறிவுரைகளை உள்வாங்கி நாமும் ஏதாவது ஒரு குளத்தை முடிந்த வரை சீரமைக்க வேண்டும் என மாணவர்களிடம் ஆலோசனை தெரிவித்துள்ளார். இதை மாணவர்கள் வரவேற்றனர். இதனையடுத்து 9ம் வகுப்பின் இரு பிரிவு மாணவர்களும் தினமும் 2 ரூபாய் வீதம் இத்திட்டத்திற்கு பொது உண்டியலில் சேர்த்தனர். இதன் மூலம் 4 வாரங்களில் ₹3,200 கிடைத்தது. இத்துடன் ஆசிரியரும் ஒரு தொகையை வழங்கினார்.

இத்தொகை மூலம் உரிய அலுவலர்களிடம் அனுமதி பெற்று மூலைக்கரைப்பட்டி அடுத்து அரசன்குளம் கிராமத்தில் உள்ள தான்தோன்றி குளத்தை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சீரமைத்தனர். இயந்திரத்தை மட்டும் நம்பியிருக்காமல் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் அங்கு குவிந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை உள்ளிட்டவைகளை அகற்றினர். மாணவர்களின் இந்த சமுதாய சேவையை கிராம மக்கள் பாராட்டினர்.

நீரின் அருமையை உணர்ந்தோம்'
இந்த பணியில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் கூறுகையில், 'தமிழ் பாடத்தில் நீர் மேலாண்மை குறித்த பகுதிகளில் எங்கள் தமிழ்ஆசிரியர் கற்றுத்தரும்போதே நீரின் அவசியத்தை உணர்ந்தோம். அவர் இந்த சிறுசேமிப்பு சீரமைப்பு திட்டத்தை தெரிவித்த போது மகிழ்வுடன் அனைவரும் பங்கேற்றோம். வீட்டில் குழாயை திறக்கும்போதே தண்ணீரை வீணாக்கக்கூடாது என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. எல்லா குளங்களையும் இதுபோல் சீரமைத்தால் நீர்வளம் பெருகும்' என்றனர்.

No comments:

Post a Comment