தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
பள்ளிக் கல்வித்துறையின்
பல்வேறு திட்ட செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ1,627 கோடியை செலவிடாமல் பள்ளிக் கல்வித்துறை திருப்பி அனுப்பியதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காகவும் பல்வேறு பணிகளுக்காகவும் அனுமதிக்கப்பட்ட மானியங்கள், ஒதுக்கப்பட்ட நிதியை அந்தந்த துறைகள் முறையாக செலவிட்டுள்ளனவா என்று சரிபார்க்க இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைதுறையின் சார்பில் மாநில நிதிநிலை மீதான தணிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. இதன்படி கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் மாதத்துடன் முடிந்த ஆண்டுக்கான கணக்கு தணிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் பள்ளிக் கல்வித்துறையில் செலவிடப்பட்ட நிதியை தணிக்கை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு ஆண்டில்வருவாயில் அனுமதிக்கப்பட்ட மானியத்தில் அனைவருக்கும் கல்வித்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.894 கோடி, இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.437 கோடி, சிறப்புக்கூறு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கல்வி திட்டத்தை ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.296 கோடி ஆகியவற்றை உபயோகிக்கவில்லை. அதனால் மேற்கண்ட ரூ.1627 கோடி நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 52 ஆயிரம் பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. நல்ல குடிநீர் வசதி இல்லை. மேலும், நல்ல வகுப்பறைகள் இல்லை. போதிய ஆசிரியர்கள் இல்லை என்று பல்வேறு குறைகளுடன் பள்ளிகள் செயல்படுகின்றன. இது தவிர அறிவியல் பாட வகுப்புக்கான அறிவியல் கருவிகள், சோதனைக் கூடங்கள், கணினி, உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. மேலும் பல்வேறு பள்ளிகளில் உறுதியான வகுப்பறைகள் இல்லை, மேற்கூரை சரியில்லாத பள்ளிகளும் இருக்கின்றன.
இது குறித்து பல்வேறு சமூக நல ஆர்வாலர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு சுட்டிக் காட்டி வருகின்றனர். ஆனால், பள்ளிக் கல்வித்துறைக்கு நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்று காரணம் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.28 ஆயிரத்து 757 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு நிதி ஒதுக்கியும், பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகளை முன்னாள் பள்ளி மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சமூக ஆர்வலர்கள் தாங்களாக முன்வந்து பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவித்து அதன்படி பள்ளிகளில்சில வசதிகளை செய்து வருகின்றனர்.
மேற்கண்ட தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட திரும்ப ஒப்படைத்த தொகையான ரூ.1,627 கோடியில் அரசுப் பள்ளிகளில் மட்டும், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், நல்ல சூழல் உள்ள வகுப்பறைகள், கணினி வசதியுடன் கூடிய வகுப்பறைகள் ஏற்படுத்தலாம். மேலும் நல்ல கட்டிடங்களை கட்டி தனியார் பள்ளிகளுக்கு இணையான வசதிகளுடன் கூடிய பள்ளிகளை ஏற்படுத்த முடியும். ஆனால், அதற்கான நல்ல திட்டமிடல் பள்ளிக் கல்வித்துறையில் இல்லை என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு படித்து முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்னும் சில இடங்களில் லேப்டாப் வழங்கப்படவில்லை. அதனால் அந்த மாணவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையைநவீனமாக்க உரிய திட்டமிடல் வேண்டும். அப்படி செய்ய மேற்கண்ட நிதியை சரியாக பயன்படுத்தினால் பள்ளிக் கல்வி நன்றாக இருக்கும்.
மேற்கண்ட திருப்பி அனுப்பிய நிதியில் அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளில் குளிர் சாதன வசதிகள்கூட ஏற்படுத்த முடியும். அதற்கு முறையான திட்டமிடல்வேண்டும் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment