Wednesday, 31 July 2019

ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும்: தபால்துறை அறிவிப்பு

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரத்து
செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறை தேர்வில், முதல் வினாத்தாள் தேர்வு இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில்  மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அந்தந்த மாநில மொழிகளில் முதல் தாள் தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தேர்வை  தமிழில் நடத்த வலியுத்தினர். இதனிடையே, தபால்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு நாடு முழுவதும் கடந்த14-ம் தேதி  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டன.
அஞ்சல்துறை தேர்வை இந்தியில் நடத்தியதை கண்டித்து மாநிலங்களவையில் திமுக உள்ளட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த 15-ம் தேதி எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல,கடந்த 16-ம் தேதி காலை முதல் அதிமுக உறுப்பினர்கள் தொடர்  போராட்டம் நடத்தினர். அதிமுக உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் அவை ஆரம்பித்த நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட  அனைத்து கட்சி  எம்.பி..க்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், தமிழகத்தில் தபால்துறை தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே  நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் இந்திய போட்டித்தேர்வு, ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் இந்தமுறை மறுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் தேர்வு எழுதிய  பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, இந்த புதிய முறையை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோன்று, அதிமுக எம்.பிக்களும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், தமிழக எம்.பி.க்கள் தொடர்  அமளியில் ஈடுபட்டதையடுத்து, தமிழகத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாக ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். மாநில மொழிகளை மதிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.  எனவே தமிழக அரசின் கோரிக்கையையும், தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு ஞாயறு அன்று நடந்த தேர்வை ரத்து செய்ததோடு, அஞ்சல்துறை தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில்  நடத்தப்படுமென தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டதால் இதனை எதிர்த்து தி.மு.க எம்எல்ஏ எழிலரசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய  பிரசாத் அமர்வில் நடைபெற்று வந்தது. அப்போது, தபால் துறைத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் தேர்வு  எழுதலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தபால் துறை தேர்வை மாநில மொழிகளிலும் எழுத  அனுமதிக்கும் புதிய அறிவிப்பாணையின் நகலைத் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தி.மு.க எம்.எல்.ஏ தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட தபால்துறை தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் மற்ற மாநில மொழிகள், ஹிந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment