Sunday, 15 June 2014

education

முப்பருவ கல்வி முறை நல்லதா?



          தமிழகத்தில் பள்ளிக் கல்வித் திட்டம் சீர்கெட்டு போய் வருகிறது. அடுத்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளிவரும் போது இது வெளிப்படையாக தெரியும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். காரணம், முப்பருவ கல்வி முறையால் மாணவர்களின் எழுத்தறிவு திறன் குறைந்து போய் விட்டதுதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் முப்பருவ கல்வி முறை கொண்டு வரப்பட்டது. இதன்படி, பாடப்புத்தகங்கள் மூன்று பிரிவுகளாக பிரித்து, மூன்று பருவங்களுக்கு தரப்படுகிறது.


           காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் என்பது போய், மூன்று பருவத் தேர்வுகளாக நடத்தப்படுகிறது. அதாவது, முதல் பருவத்திற்கான தேர்வு எழுதியதுடன் அந்த பாடப்புத்தகங்களை தூக்கி வீசி விடலாம். 2ம் பருவத் தேர்வு முடிந்ததும் அந்த புத்தகங்களையும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியமில்லை. இப்படியாக, மூன்றாவது பருவத் தேர்வு எழுதும் போது அந்த பருவத்திற்கான பாடங்களை மட்டும் படிப்பதால், முதல் இரண்டு பருவங்களில் படித்ததை மாணவர்கள் சுத்தமாக மறந்து விடுகிறார்கள். இந்த முப்பருவ முறையில் கடந்த சில ஆண்டுகளாக படித்து வந்த மாணவர்களில் முதல் பேட்ச் மாணவர்கள், அடுத்த ஆண்டு ஏப்ரலில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை எழுத உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொரு பருவத்திற்கும் குறைந்த அளவிலான பாடங்களை மட்டுமே படித்து பழகி விட்டதால், மொத்தமாக ஓராண்டுக்கு உரிய பாடங்களை படித்து தேர்வு எழுதுவது அவர்களுக்கு மிகவும் சிரமமானதாகி விடும். அதனால், அவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது கடினம் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படியாவது மாணவர்களை பாஸ் செய்ய வைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளார்கள். எனவே, நன்றாக படிக்கும் மாணவர்களை இன்னும் அதிக மதிப்பெண் பெறச் செய்யலாம் என்று கவனம் செலுத்துவது குறையும். அதே சமயம், பல தனியார் மெட்ரிக் பள்ளிகளில் முப்பருவ முறையை அமல்படுத்தினாலும் மூன்றாவது பருவத்தின் போது முதல் 2 பருவப் பாடங்களையும் சேர்த்தே தேர்வு எழுத வைத்துள்ளார்கள். இந்த நிலைமை குறித்து அரசு ஆசிரியர்கள் கவலைப்படுகிறார்கள். அதே சமயம், பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள் இதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இந்நிலையில், முப்பருவ கல்வி முறையால் ஏற்படும் நல்ல விஷயங்கள் எவை, பாதிப்புகள் எவை என கல்வித் துறையினர் ஆராய வேண்டியது அவசியமாகும்.

No comments:

Post a Comment