நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலில் இருக்கும் வானவில் பள்ளி மிகவும் வித்தியாசமானது. மரங்கள், அருகிலேயே வயல், குளங்கள் என்று அற்புதமான சூழலில் அமைந்திருக்கிறது. மாணவர்கள், கற்றல் சுமையே தெரியாமல் மகிழ்ச்சியோடு படிக்கின்றனர். ஆசிரியர்களை அண்ணன், அக்கா என்றுதான் அழைக்கிறார்கள். இது உண்டு உறைவிடப் பள்ளி.
இங்கே படிக்கும் மாணவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் மற்றும் நரிக்குறவர்கள் வீட்டுக் குழந்தைகள். பெற்றோர்களில் ஒரு சிலரைத் தவிர யாருமே கல்வி கற்காதவர்கள்.
''எங்க அப்பா, அம்மா படிக்காததுக்கும் சேர்த்து நாங்க படிப்போம்'' என்கிற இவர்கள், விளையாட்டோடு கற்று வருகின்றனர்.
''மாட்டுப் பொங்கல் அன்று மாட்டின் கழுத்தில் நெட்டிமாலை போடுவாங்க. அந்த மாலையில் இருந்த ஒரு நெட்டியில், சூப்பரான மனித பொம்மை செய்திருக்கிறான், நான்காம் வகுப்புப் படிக்கும் பாபு'' என்று பெருமையோடு சொல்கிறார் ஆசிரியை கௌதமி.
இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் என்கிற வித்தியாசம் கிடையாது. எல்லோரும் சமம்தான். மதியம் சாப்பிடும்போது, மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆசிரியை மீனாட்சியின் தட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு பொரியலை, மாணவி அஞ்சலைதேவி எடுத்துச் சாப்பிடுகிறாள்.
''தெய்வானை என்கிற மாணவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா... இங்கு தளிர், துளிர் வகுப்புகளும் உண்டு. அந்த சின்னக் குழந்தைகளும் இங்கேதான் தங்கிப் படிக்கிறாங்க. அதில், ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்லாதபோது, தெய்வானை அந்தக் குழந்தையை ஒரு அம்மா போல கவனிச்சுக்கிட்டா'' என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் ஆசிரியை வாசுகி.
''என் வகுப்பில் ஒரு பையன் படிக்கிறான். அவனை ஆடு, மாடு மேய்க்க அப்பா வித்துட்டார். அவனை விற்ற இடத்தில் சரியாகச் சாப்பாடு போடாமல் கொடுமை செய்திருக்காங்க. எப்படியோ... அங்கே இருந்து ஓடி வந்துட்டான். இப்போ இங்கே, படிப்பில் பிரமாதப்படுத்துறான்'' என்கிறார் ஆசிரியை மீனாட்சி.
ஆசிரியர்கள் ஷாலினி, யாஸ்மின் பர்வீன், சந்திரன், சுரேந்தர் ஆகியோர் தங்கள் மாணவர்களைப் பற்றி வித்தியாசமான அனுபவங்களைச் சொல்கிறார்கள். ''இங்கே வேலை செய்வது, மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது'' என்கிறார்கள்.
வகுப்பறைகளில் விதவிதமான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ''அங்கிள், இது நான் வரைஞ்சது...'' ''இது என்னோடது...'' என்று உற்சாகத்துடன் தங்கள் படைப்புகளைக் காட்டுகிறார்கள்.
வானவில் பள்ளியை நடத்தும் பிரேமா ரேவதி ஓர் எழுத்தாளர், நாடங்களில் நடிப்பவர். ''சுனாமியின் பாதிப்பில் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கலாம் என்றுதான் இங்கே வந்தேன். பல நடைமுறை சிக்கல்களைத் தாண்டித்தான் இந்தப் பள்ளியை நடத்துகிறோம். முதல் தலைமுறையாகப் படிக்க வந்திருக்கும் இந்தக் குழந்தைகள், வருங்காலத்தில் எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும்'' என்கிறார்.
''அக்கா... என்னை சிவா தள்ளிவிட்டுட்டான்'' என்று ஒரு குட்டிப் பெண் சொல்ல, அவளைச் சமாதானப்படுத்தியவாறு அழைத்துச் செல்கிறார் பிரேமா ரேவதி.
அந்தப் பசுமையான சூழலில் ஆட்டம் ஆடியவாறு, பாட்டுப் பாடியவாறு, பாடங்களைப் படிக்கும் மாணவர்களின் குரல், உற்சாகமாக காற்றில் ஒலிக்கிறது.
No comments:
Post a Comment