| |||
சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிய கலக்கல் கிராமம் |
'உன்னால் முடியும் தம்பி'..., 1988-ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை பலரும் மறந்திருக்க முடியாது. கே. பாலச்சந்தர் தீட்டியிருந்த இந்த திரையோவியத்தைப் பார்த்தவர்கள், 'ம்... இதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்பட்டு வரும். நிஜத்துல... அதுவும் நம்ம ஊருல... இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை' என்றுதான் முணுமுணுத்திருப் பார்கள்.
ஆனால், சினிமாவில் கற்பனையாக சாதித்துக் காட்டிய விஷயங்களையும் தாண்டி, பல்வேறு சாதனைகளை நிஜத்தில் ஒரு கிராமம் சாதித்துக் கொண்டிருக்கிறது என்றால்... அது ஆச்சர்யமான விஷயம் தானே!
திரைப்படத்தில் 'உதயமூர்த்தி' என்ற பாத்திரத்தில் வரும் கமல்ஹாசன், ஏகத்துக்கும் போராடி ஒரு கிராமத்தை உன்னத கிராமமாக மாற்றி வைப்பார். இங்கே நிஜத்திலும் ஒரு உதயமூர்த்தி தோன்ற... விவசாயம், கால்நடை வளர்ப்பு, கல்வி என்று அனைத்து விஷயங்களிலும் அசத் தலாக எழுந்து நிற்கிறது அந்தக் கிராமம். முக்கியமாக, அதன் சாதனை யே... நீர்ப்பாசன மேலாண்மைதான்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டத் தலைநகரான அஹமத் நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவில், தக்காண பீடபூமி யின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்தின் பெயர் ஹிவரே பஸார். இங்கே, வருடத்துக்கு 40 செ.மீ. மழை பெய்தாலே... அதிகம். வறட்சி, 1972-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக குடிசை போட்டு கும்மியடிக்க ஆரம்பித்துவிடவே, விவசாயத்துக்கு வழியில் லாமல் போய்விட்டது. மனிதர்களுக்கு மட்டு மல்ல... கால்நடைகளுக்கும் உணவுப் பஞ்சம். குடிநீர் பிரச்னையும் சேர்ந்து கொள்ள... 'உள்ளூர் நரக வாழ்க்கைக்கு... நகரத்து நரக வாழ்க்கையே மேல்...' என்றபடி கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர ஆரம்பித்தனர். எஞ்சியவர்கள்... சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட குற்றத் தொழில்களில் ஈடுபட... ஊருக்குள் குடியும், குற்றமும் அதிகரித் தது. உச்சக்கட்டமாக, 82-ம் ஆண்டில் குடிபோதை யில் ஒரு கொலையும் நடந்துவிட, சுற்று வட்டாரத்தில் கிராமத்தின் பெயர் ஒட்டுமொத் தமாகக் கெட்டுக் குட்டிச்சுவராகியது.
இப்படி படுபாதாளத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்தக் கிராமம்தான் சிலிர்த் தெழுந்து இந்தியாவையே... ஏன்? உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!
கடந்த 15 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 20 மடங்கு உயர்ந்திருக்கிறது. படிப்பறிவு 30% என்பதிலிருந்து 90% என்று பல மைல் தூரம் தாண்டியிருக்கிறது. விவசாயம் ஏகத்துக்கும் கொழிக்க ஆரம்பிக்க... பால் உற்பத்தி பல மடங்கு பெருகிவிட்டது. இத்தனையையும் கௌரவிக்கும் விதத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 'தேசிய நீர் விருது' இந்தக் கிராமத்துக்கு தேடி வந்திருக்கிறது.
'மொத்தமாக முடிந்தே போய்விட்டது' என்ற பலராலும் நினைக்கப்பட்ட ஹிவரே பஸார், இப்படி ரகளையாக எழுந்து நின்று சாதனைகள் படைத்துக் கொண்டிருக்க காரணமான கதாநாயகன்... பொபட்ராவ் பவார்!
கிரிக்கெட்டில் தோல்வி... கிராமத்தில் வெற்றி!
பல குடும்பங்களைப் போலவே, கிராமத்தின் மோசமான சூழல் காரணமாக குடிபெயர்ந்த குடும்பங்களில் ஒன்றுதான் பொபட் ராவின் குடும்பம். அஹமத்நகரில் குடியேறி, அங்கேயே படிப்பை தொடர்ந்தவர், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இடம் பிடித்தார். ரஞ்சி கோப்பை போட் டிகளில் விளையாடும் அளவுக்குப் புகழ்பெற்றதால், ஹிவரே பஸார் மக்களின் பார்வை இவர் மீது படிந்தது. அவரைத் தேடி வந்த மக்கள், 'ஊராட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டு, நம் கிராமத்தை செழிப்பாக்க வேண் டும்' என்று அழைத்திருக்கின்றனர். அது... 1989-ம் ஆண்டு, ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட்டின் முடிவுச் சுற்றில் அவருடைய அணி தோல்வி யைத் தழுவியிருந்த நேரம்.
எம்.காம். படிப்பை முடித்திருந் தவர், ஏதாவது ஒரு வேலைக்குப் போகலாம் என்றுதான் சிந்தனையில் இருந்திருக் கிறார். ஆனால், கிராமத்தினரின் அழைப்பு அவரை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. கிராமத்தின் நிலை மிகமிக மோசமாக இருந்தாலும், எப்போதுமே சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்.
துளிகூட நம்பிக்கையில்லாது ஏனோ, தானோ வென்று நாட்களை நகர்த்திக் கொண்டிருந்த மக்களின் எண்ணங்களைச் சீரமைக்கும் வேலையை முதலில் தொடங்கினார். முதல்கட் டமாக மக்களின் பார்வையை அவர் திருப்பியது... ஊரிலிருக்கும் பள்ளிக்கூடத்தின் மீதுதான். 'கடமையே' என்று வந்து, சென்று கொண்டிருந்த பொறுப்பற்ற ஆசிரியர்களுக்கு எதிரான போராட்டத்தை முதலில் கையில் எடுத்தார். ஊர் மக்களே பள்ளியை இழுத்துப் பூட்டும் அளவுக்கு கனன்ற போராட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு, பொருத்தமான ஆசிரியர் கள் நியமிக்கும் வரை ஓயவில்லை.
இப்போராட்டத்துக்காக இரண்டு மாதங்கள் வரை உறுதி குலையாது ஓரணியாக அவருடன் நின்றனர் மக்கள். இதிலிருந்தே மக்களை ஒன்றி ணைக்கும் கலையை முழுமையாக அறிந்து கொண்ட பவார், கொஞ்சம் கொஞ்சமாக கிராமம் முழுக்க மரம் நடும் பணியில் மக்களை இறக்கி விட்டார். அடுத்தக் கட்டமாக, நீர் சேகரிப்பு முறைகளை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டவர், அந்தப் பணியை கையில் எடுத்தார்.
பச்சை ஆடை போர்த்திய மலை!
மகாராஷ்டிர மாநில அரசு, மாதிரி கிராமங் களை உருவாக்கும் வகையில் 'ஆதர்ஷ் கிராம் யோஜனா' எனும் திட்டத்தை அப்போது அறிவித்திருந்தது. மாநிலம் முழுக்க 300 கிராமங் களை, மாதிரி கிராமங்களாக உருவாக்குவதுதான் அரசின் திட்டம். இதை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள திட்டமிட்ட பொபட்ராவ், கிராம சபையைக் கூட்டி, 1994-ம் ஆண்டில் 'யஷ்வந்த்' என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். ஊரைச் சுற்றியிருக்கும் மலைக் குன்றுகளிலிருந்து வழியும் நீரைச் சேகரிக்கச் சுற்றுக் கால்வாய்கள், கண் காணிப்புத் தொட்டிகள், ஊற்றுக் கிணறுகள், குளங்கள், ஏரிகள் என மளமளவென பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கின. சுற்று வட்டாரத் திலிருந்து சமூக சேவை நிறுவனங்களும் தங்களின் ஆதரவுக் கரங்களை நீட்டின. ஆரம்பத்தில் சந்தேகக் கண் கொண்டு பார்த்த வனத்துறையும் கூட, ஒரு கட்டத்தில் களமிறங்கியது.
இப்படி நல்லெண்ணம் கொண்டோரெல்லாம் கைகோக்க... மொட்டைக் குன்றுகள் எல்லாம் இன்று பச்சை ஆடை போர்த்தி பளபளக்கின்றன. காட்டுநிலம் 70 ஹெக்டேராக உயர்ந்திருக்கிறது. விவசாயமோ... வெளுத்துக் கட்டுகிறது. கண்ணுக் கெட்டும் தூரம் வரை ஊர் முழுக்க பசுமை பாய் விரித்தது போல காட்சியளிக்கிறது. சுற்றியிருக்கும் குன்றுகள் மற்றும் புதர்களில் பறவைகளும் விலங்குகளும் பெருகத் தொடங்கிவிட்டன. தென்னாப்பிரிக்காவிலிருந்து கூட பறவைகள் இடம் பெயர்ந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
புல்வெளிகள் அதிகரித்திருந்தாலும், மண் அரிப்பைத் தடுப்பதற்காக மேய்ச்சல் தடை செய்யப்பட்டுள்ளது. புல் அறுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஒரு நாளைக்கு, ஒரு கட்டுப்புல் வீதம் அறுத்துச் செல்ல, ஓர் ஆண்டுக்கு நூறு ரூபாய் கட்டணத்தை ஊராட்சிக்குச் செலுத்த வேண்டும். புல் உற்பத்தி அதிகரிக்கவே, ஊராட் சியின் உத்தரவாதத்தோடு வங்கிக் கடன்கள் மூலம் மாடுகள் வாங்கப்பட்டு, தினசரி 4,000 லிட்டருக்கும் அதிகமாக பால் பொங்கத் தொடங்கிவிட்டது!
சாராயம் போனது... விவசாயம் வந்தது!
குறைந்த முதலீட்டில், அதிக பால் உற்பத்தி செய்தவர் என்பதற்காக மாநில அரசின் விருது பெற்றிருக்கிறார் மாருதி கோபால் தாங்கே. அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, "பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் வெறும் விவசாயக் கூலி. ஒரு துண்டு நிலம் கூட கிடையாது. மாடுகளும் இல்லை. வங்கிக் கடனை வைத்து, மூன்று மாடுகளை வாங்கினேன். இன்று, என்னிடம் 20 மாடுகள் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் பால் கறந்து விற்பனை செய்கிறேன். மூன்று ஏக்கர் நிலம் வாங்கியிருக் கிறேன். புது வீடும் கட்டி, குடி புகுந்து விட்டேன். விவசாயத்துக்கு அடுத்தபடியாக வருமானம் கொழிக்கும் தொழிலாக இது மாறிவிட்டது'' என்று தெம்பு தரும் வார்த்தைகளால் பூரித்தபடி சொன்னார்.
நிதி பட்ஜெட் கேள்விப்பட்டிருப்பீர்கள்... ஆனால், நீர் பட்ஜெட்? அதை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் போட்டு வருகிறது ஹிவரே பஸார். ஒவ்வொரு ஆண்டும் ஊரில் தேங்கியி ருக்கும் நீரின் அளவைக் கணக்கெடுத்து, எந்தெந்தத் தேவைக்கு, எவ்வளவு பயன்படுத்தலாம் என்று பட்ஜெட் தயாரிக்கிறது ஊராட்சி.
நீர் அதிகமாகத் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர் வகைகளை பயிரிடக்கூடாது (சொட்டுநீர் அல்லது தெளிப்புநீர்ப் பாசனம் மூலம் பயிரிடலாம்). மரங்களை வெட்டக்கூடாது 60 அடி ஆழத்துக்கும் அதிகமான ஆழ கிணறுகளைத் தோண்டக்கூடாது. குடிநீரைத் தவிர்த்து வேறெந்த காரணத்துக்காகவும் ஆழ்குழாய் கிணறுகளைப் பயன்படுத்தக் கூடாது... இப்படி அடுக்கடுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. சிக்கனமும், சேமிப்பும் தொடர்ந்து கடைபிடிக்கப் படவே... ஆண்டு தோறும் நீரின் இருப்பு பெருகிக் கொண்டிருக்கிறது (2007-ம் ஆண்டில் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது போக, 146.5 கோடி லிட்டர் நீர் உபரியாக மிஞ்சியது).
அடுத்த தலைமுறைக்கும்...!
அடுத்த தலைமுறைக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வேலைகளையும் பவார் விட்டு வைக்கவில்லை. ஆரம்ப பள்ளியிலிருந்தே நீர் சேகரிப்பு முறைகள் பற்றி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமத்தில் வசந்தகால வாழ்க்கை திரும்பி வந்தது மட்டுமல்லாமல்... மக்களிடையே நட்பு உணர்வு, ஒற்றுமை உணர்வு ஆகியவற்றையும் அதிகரிக்கச் செய்துவிட்டது அந்த வறட்சி. ஆம், இப்போதெல்லாம் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது அங்கே எளிதாகிவிட்டது. குடும்பக்கட்டுப்பாடு மட்டுமல்ல... திருமணத்துக்கு முன்பாக எய்ட்ஸ் பரிசோதனை கூட ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.
இத்தனைக்கும் காரணமாக இருக்கும் பவார், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஊராட்சித் தலைவராக நீடிக்கிறார். அதுமட்டு மா...? முசோரியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரி, மாநில அரசின் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றில் கிராம முன்னேற்றம் பற்றி பாடம் எடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். நீர் சேகரிப்பு முறைகள் பற்றி பயிற்சியளிக்க வெளிநாடுகளுக்கும் கூட பயணம் பயணிக்கிறார். பவாருக்கும், அவருடைய கிராமத் துக்கும் தேசிய அளவில் பல்வேறு விருதுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 113 நாடுகளிலிருந்து மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் அந்தக் கிராமத்தைத் தேடிவந்து அதிசயித்துத் திரும்பியுள்ளனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களி லிருந்தும் கிராம வளர்ச்சி பற்றிய பயிற்சிக்காக ஹிவரே பஸார் கிராமத்துக்கு வரிசையாக மக்கள் பிரதிநிதிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
எதிர்ப்புகள் இல்லாமலா?
எந்த நல்ல முயற்சியும் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் ஈடேறிவிடுமா என்ன...? பவாரின் முயற்சிக்கும் அப்படி எதிர்ப்புகள் முளைக்கத்தான் செய்தன. "94-ம் ஆண்டு, 'ஆதர்ஷ் கிராம் யோஜனா' மூலம் மரம் நடுவது, சுற்றுக் கால்வாய்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி மூலமாக செய்யத் திட்டமிட்டோம். காரணமே இல்லாமல் சுமார் 20 பேர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்தனைபேரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். நல்ல விஷயங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்களே என்று கோபம் வந்தாலும், 'உங்களின் விருப்பம் இல்லாமல் எதையும் செய்யப் போவதில்லை' என்று பணிகளைக் கிடப்பில் போட்டேன். ஓர் ஆண்டு உருண்ட நிலையில், 'சிரவண விழா' (நம்ம ஊர் மாட்டுப் பொங்கல் போல) அன்று மாடுகளுடன் அனுமான் கோயில் முன்பாக ஊரே திரண்டது. அப்போது, 'ஏற்கெனவே தீர்மானம் செய்தபடி மரம் மற்றும் கால்வாய் விஷயங்களை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும். அதற்கு இப்போது உறுதிமொழி கொடுத்தால்தான் இங்கிருந்து நகர்வோம்' என்று ஊரே அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதைப் பார்த்ததுமே, ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் மொத்தமாக அடங்கிப்போனார்கள். இதையடுத்து, வேலைகளைத் துவங்கினேன். முன்பு எதிர்த் தவர்களே, எந்தப் பணியாக இருந்தாலும் இப்போது முதல் ஆளாக வந்து நிற்கிறார்கள்'' என்று சிரித்தபடியே சொன்ன பவார்,
"பொதுப்பணி எனும்போது, எல்லோருடைய சம்மதமும் அவசியம். இதை வைத்து ஊருக்குள் பிளவு வந்துடக்கூடாது என்பதுதான் எனக்கு முக்கியம். அதனால்தான் ஓர் ஆண்டு வரை காத்திருந்தேன். மக்கள் ஒன்றிணைந்து கைகோக்காவிட்டால், இது எதுவுமே சாத்தியப் பட்டிருக்காது'' என்று வெகு அடக்கமாகச் சொல்கிறார்!
'காந்தியின் கனவை நனவாக்குவோம்' என்று அவரின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று செய்தி ஊடகங்களில் முழ நீள விளம்பரத்தை தருவதைத் மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கும் அரசாங்கங்கள்தான் இந்தியா வின் பல மாநிலங்களிலும் நீடித்து கொண்டிருக் கின்றன. இதற்கு நடுவே, கிராமங்களின் தன்னி றைவு, ஒற்றுமையில்தான் இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது ஹிவரே பஸார்.
இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் ஓராயிரம் ஹிவரே பஸார்கள் உதிக்கட்டும்!
தொடர்புக்கு: பொபட்ராவ் பவார், அலைபேசி: 094207-52525
நீர் சேகரிப்புத் தொழில்நுட்பங்கள்!
நீர் சேகரிப்பு முறைகளைப் பற்றி ஊருக்குள் இருக்கும் குழந்தையிடம் கேட்டால்கூட தெளிவாக விவரித்துவிடும். அந்த அளவுக்கு இந்த விஷயத்தில் ஊரே அத்துப்படியாக இருக்கிறது. இதைப்பற்றி நம்மிடம் பேசினார் வார்டு உறுப்பினர்களில் ஒரு வரான மோகன். , "மொட்டைத் தலையில் தண்ணீரை ஊற்றினால், சீக்கிரம் வடிந்துவிடும். இதுவே தலை முழுவதும் முடி இருந்தால், அத்தனை சீக்கிரமாக தண்ணீர் வடியாது. இதுதான் சுற்றுக் கால்வாய் களுக்கான (continuous contour trench) அடிப்படை. மலையைச் சுற்றிலும் தொடர்ச்சியாக வட்ட வடிவில் கால்வாய்களைத் தோண்டி, அங்கே மரங்களை வைத்திருக்கிறோம். மேலிருந்து கீழ் வரை இப்படிப்பட்ட கால் வாய்கள் இருப்பதால், தண்ணீர் சீக்கிரமாக வடியாமல் தடுக்கப்படும். அத்தோடு, மண் அரிப்பும் தடுக் கப்பட்டு, மலையின் மீது மரங்கள் வளர ஏதுவாக அமைந்துவிடும்.கள்ளி மாதிரியான செடிகளை (உயிர் வாழ் வடிகட்டிகள் Living filters) வரிசையாக நடுவதன் மூலம் மண் அரிப்பைத் தடுப்பதோடு, தண்ணீரின் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியும். இதற்காகவே சிறிய அளவிலான கல்லணைகள் (Loose Boulder dam) மலையின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன. கீழ்ப்பகுதியில் மண்மடைகள் (Earthern bunds) கட்டியிருக்கிறோம். மலையை விட்டு இறங்கிய தண்ணீர், உடனடியாக சமவெளியில் ஓடிவிடாமல் தடுப் பதற்காக இந்த ஏற்பாடு. இங்கேயும் கூட மரங்களை நடுவதன் மூலம் தண்ணீரின் வேகத்தைக் குறைத் துள்ளோம். உச்சியிலிருந்து சமவெளி வரை இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்தியிருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதோடு, அதிக எண்ணிக்கையில் மரங்களும் பெருகி, காடாக மாறிவிட்டது. இதன் மூலம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படியே மழை இல்லாவிட்டாலும்கூட, இருக்கின்ற நீரை வைத்தே எந்தப் பிரச்னையும் இல்லாமல் விவசாயத்தை செய்து கொண்டிருக்கலாம்" என்றார் உற்சாகமாக. "இதுபோன்ற நீர் சேகரிப்பு முறைகள் எல்லா இடங்களிலும் சாத்தியமா?" என்ற கேள்விக்கு, "தாராளமாக..." என்று பாய்ந்து வந்து பதில் தந்த பவார், "சம்பந்தபட்ட இடத்தின் புவியியல் அமைப்புக்கு ஏற்றது போல சிற்சில மாற்றங்களுடன் இந்தியா முழுக்கவே இந்த தொழில் நுடபங்களைப் பயன்படுத்தி தண்ணீரைச் சேகரிக்க முடியும்" -குரலில் உறுதி தெறிக்கச் சொன்னார். |
"அரசியலா.... வேண்டவே வேண்டாம்!"
அஹமத்நகர் பகுதியில் படுபிரபல மாகிவிட்டார் பவார். இதை வைத்தே, சட்டமன்றம், நாடாளுமன்றம் என்று காலூன்றிவிடலாம். ஆனால், அதை யெல்லாம் அலட்சியமாக தவிர்த்து விடுகிறார் பவார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் கட்சி) ஆகிவற்றின் சார்பில் 2004-ம் ஆண்டு தேர்தலின்போது, நாடாளு மன்ற வேட்பாளராக அறிவிக்கத் தயார் என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால், அதை இவர் ஏற்றுக் கொள்ளவில்லையாம்."அரசியல் நடத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்கிறார் தெள்ளத் தெளிவாக! |
சமுதாய விவசாயம்!
ஊருக்குள் எல்லோருமே பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டதால் விவசாயக் கூலி வேலைகளுக்கு இங்கு ஆட்கள் பற்றாக்குறை. வெளியிலிருந்து 200 பேருக்கும் மேல் வந்தாலும் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை. இதைச் சமாளிக்க என்ன வழி என்று யோசித்திருக்கிறார்கள். கடைசியில், 'ஒருவர் அருகிலி ருக்கும் மற்றொருவர் நிலத்தில் பரஸ்பரம் உதவி செய்வது' என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கவுரவம்... அது... இது என்று தயங்காமல், வேலை செய்வது என்பது ஊருக்குள் இயல்பான விஷயமாகிவிட்டது."அமுல் நிறுவனம் போல தனியானதொரு முத்திரையுடன் காய்கறி, பால் ஆகியவற்றை விற்பனை செய்வது பற்றி மாநில அரசுடன் பேசி வருகிறேன். கூடிய சீக்கிரத்தில் அதை ஆரம்பித்து விடுவோம். அதேபோல கிராமம் முழுக்கவே இயற்கை விவசாயம் செய்யத் தீர்மானித்துள்ளோம். இப்போதைக்கு முழுமையாக மாறிவிடவில்லை. என்றாலும், தனியானதொரு முத்திரையுடன் வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது, அத்தனையும் இயற்கையாக உற்பத்தி செய்த பொருட்களாகத்தான் இருக்கும்'' என்று அடித்துச் சொல்கிறார் பவார். |
சாராயத்துக்குத் தடை!
சுற்றுவட்டாரத்தில் ஒரு காலத்தில் சாராயம் என்றாலே.. அது 'ஹிவரே பஸார் சரக்கு' தான் என்று புகழ் பெற்றி ருந்தது. இன்றோ.... சாராயம் காயச்ச, குடிக்க எதற்குமே ஊருக்குள் அனுமதியில்லை. சாராயத் தொழிலை கைவிட்ட வர்களில் ஒருவரான சப்பாஜி நாராயண கிரி, "ஊராட்சி சிபாரிசு செய்ததனால் வங்கிக் கடன் கொடுத்தார்கள். இப்போது, தக்காளி, உருளைக் கிழங்கு என்று என்னுடைய நிலத்தில் விவசாயம் செழிக்கிறது. கூடவே, எருமை மாடுகள் மூன்று வைத்து பால் வியாபாரமும் செய்கிறேன். வாழ்க்கை முன்பை விட சந்தோஷமாக போய்க் கொண்டி ருக்கிறது" என்கிறார் மகிழ்ச்சி பொங்க. |
கலக்கல் கிராமம் சில குறிப்புகள்!
ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் முதல் தேதி ஜில்லா பரிஷத் தலைமை செயல் அலுவலர் முன்பாக கிராமத்தின் வரவு செலவைத் தாக்கல் செய்கிறார், பவார். கிராமம் முழுக்க கலந்துகொள்ளூம் இந்தக் கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் எழுந்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.நிலமில்லாதோர் பட்டியலில் மொத்தம் ஆறு பேர்தான் இடம் பிடித்துள்ளனர். அதேசமயம், வீடில்லாதவர்கள் என்று யாருமே கிடையாது! முன்பு வறுமைக் கோட்டுக்குக் கீழிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 168. இன்று மூன்றே மூன்று குடும்பங்கள்தான் அந்தக் கோட்டுக்கு கீழே இருக்கின்றன. ஊருக்குள் இருப்பது ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம்தான். என்றாலும், அவர்களுக்கென சிறிய அளவிலான ஒரு மசூதியை ஊராட்சியே கட்டித் தந்துள்ளது. |
கட்டாய ஹெச்.ஐ.வி. பரிசோதனை!
'திருமணத்துக்கு முன்பாக ஹெச்.ஜ.வி. பரிசோதனையைக் கட்டாயமாக்கினால் என்ன?' என்று உலக அளவில் இப்போது ஆலோசனை நடக்கிறது. ஆனால், 2002-ம் ஆண்டிலேயே சத்தமில்லாமல் அதை ஆரம்பித்துவிட்டது ஹிவரே பஸார். இப்படியரு திட்டம் உருவானது பற்றி பேசிய பவார், ''பதினொண்ணாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 'எனக்கு, வீட்டில் கல்யாண ஏற்பாடு நடக்கிறது. ஆனால், மாப்பிள்ளையின் நடத்தையில் எனக்கு திருப்தி இல்லை. நம் கிராமம் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்திய அளவில் புகழ் பெற்றிருக்கிறது. பல்வேறு சாதனைகள்தான் இத்தகையதொரு பெயரை நம் கிராமத்துக்கு பெற்றுத் தந்திருக்கிறது. அதேபோல, திருமணத்துக்கு முன்னதாக ஹெச்.ஐ.வி. சோதனை கட்டாயம் என்பதை நம் ஊரில் ஏன் அமல்படுத்தினால், நம் புகழ் மேலும் பரவுமே?' என்று கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இந்தக் கடிதத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. அந்தப் பெண்ணின் பெரியம்மா மகளின் கணவன், திருமணமான ஆறு மாதத்திலேயே இறந்துபோய்விட்டான். ஹெச்.ஜ.வி. காரணமாகத்தான் இறப்பு ஏற்பட்டது என்பது அப்போதுதான் தெரிந்தது. அந்தப் பொண்ணுக்கும்... அவளின் குழந்தைக்கும் கூட ஹெச்.ஐ.வி. தாக்குதல் இருக்கிறது. இதுபோல நம் வாழ்க்கையும் ஆகிவிடக்கூடாது என்ற காரணத் தாலும்தான் அப்படியரு கடிதத்தை எழுதியிருந்தார் அந்தப் பெண்.இதையடுத்து, கல்லூரிகளில் படிக்கும் என் கிராமத்து மாணவர்களை அழைத்துப் பேசினேன். எல்லோரும் ஒரே குரலாக, 'ஹெச்.ஐ.வி. சோதனை கட்டாயம் என்பதை அமல்படுத்தலாம்' என்றனர். பிறகு, ஊராட்சிக் கூட்டத்தில் இதைப் பேசி, அறிவிப்பு வெளியிட்டோம். இந்த முயற்சி நடைமுறைக்கு வந்ததும், அமெரிக்காவின் முக்கிய பத்திரிகையான 'வாஷிங்டன் போஸ்ட்' இதைப் பற்றி செய்தி வெளியிட்டது'' என்று சொன்னார். தற்போது, மஹாராஷ்டிரா முழுக்கவே இதை அமல்படுத்தும் யோசனையில் இருக்கிறது மாநில அரசு. |
'பைக்'குக்குத் தடா... சைக்கிளுக்கு ஜே!
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பெட்ரோல் விலை அளவில்லாமல் எகிற ஆரம்பித்தது. இதையடுத்து, ஊர் மக்களைக் கூட்டி விவாதித்த பவார், கிராம எல்லைக்குள் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார். இதனால், உள்ளூருக்குள் இப்போது மிதிவண்டிகளின் பயன்பாடு அதிகரித் துள்ளது. "பணம் மிச்சமாவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையுமே..." என்கிறார் பவார்! |
No comments:
Post a Comment