நம்மில் பலரும் ஐ.பி.எல். 20 - 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நமக்குப் பிடித்த அணி எந்த இடத்தில் இருக்கிறது என்று கடந்த ஒன்றரை மாதமாகத் தினமும் ஆர்வத்துடன் பார்த்திருப்போம். ஆனால், இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு நாளாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சத்துகளை வரிசைப்படுத்திப் பார்த்திருப்போமா? அப்படிப் பார்த்திருந்தால் முறையான, சத்தான உணவைத்தான் சாப்பிடுகிறோமா என்ற கேள்வி நிச்சயம் தோன்றியிருக்கும்.
‘தினமும் வீட்டுச் சாப்பாடுதானே சாப்பிடறேன்... எனக்கெல்லாம் என்ன பிரச்சினை வரப் போகுது?’ என்று சொல்லும் போக்கு பரவலாகி விட்டது. அதெல்லாம் சரி, நம் வீட்டில் தயாரிக்கப்படும் உணவில் சேர்க்கப் படும் பொருட்களின் தரம் என்ன? அவை எப்படிப்பட்ட முறையில் உற்பத்தி யாகின்றன என்று நமக்குத் தெரியுமா?
உணவில் விஷம்
நாம் தினமும் சாப்பிடும் உணவுப் பொருட்களில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் மிச்ச, சொச்சங்கள் இருக்கின்றன. அவை நம் உடலில் சிறிதுசிறிதாகச் சேர்ந்து, காலப்போக்கில் பல பிரச்சினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்துகின்றன.
பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட உரங்கள், நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ளன. தாய்ப்பாலில்கூடக் கலந்துவிட்ட டி.டி.டி., குழந்தைகளிடம் மூளை வளர்ச்சி மற்றும் பிறவிக் குறைபாடுகளை உருவாக்கும் எண்டோசல்பான் போன்ற பூச்சிக்கொல்லிகள் இன்னமும் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.
அது மட்டுமல்லாமல், வேளாண் பொருட்கள் உற்பத்தி ஆகிக் கடைக்கு வந்து சேர்வதற்குள் தேவையற்ற செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பல நேரம் கார்பைடு கல் வைத்தே மாம்பழம் பழுக்க வைக்கப்படுகிறது. இதனால் நாக்கில் ஜிவுஜிவுத் தன்மை, மரத்துப்போதல், நரம்பு கோளாறு போன்றவை ஏற்படலாம்.
ஆனால், இயற்கை வேளாண் பொருட்களில் இந்த ரசாயனங்கள் எவையும் கிடையாது. செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படாமல் தயாரிக்கப்படும் பொருட்களே இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்கள்.
சரி ரசாயன எச்சங்கள் இல்லாமல், இயற்கை முறையில் தயாரான அந்தப் பொருட்களை வாங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இயற்கை மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் எனக்குக் கிடைக்குமா? கிடைக்கும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் ஆர்கானிக் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இந்தப் பசுமை அங்காடிகள் தற்போது பிரபலமாகி வருகின்றன.
ஆர்கானிக் என்றால்?
ஆர்கானிக் பொருட்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள் கணக்கற்று இருந்தாலும், பலரும் அவற்றை வாங்கத் தயங்குவதற்குக் காரணம் விலை.
"ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகியுள்ளது, செரிமானக் குறைபாடுகள் சரியாகியுள்ளன. ஆனால், 4 வருடங்களாக இவற்றை வாங்கி வந்தாலும், விலை கொஞ்சம் அதிகமா இருக்கிறதால முழுமையா ஆர்கானிக் பொருட்களுக்கு மாற முடியவில்லை" என்கிறார் பசுமை அங்காடி ஒன்றின் வாடிக்கை யாளரான இந்துமதி மோகன்.
விலை குறைவாக இருக்க முடியாதா? இயற்கை வேளாண் பொருட்களுக்கு மார்கெட்ல அதிக மான தேவை வரும்போது, விலையும் குறையும். ஊட்டச்சத்தில்லாத உணவு தரும் பின்விளைவுகளை உணர்ந்தவர்களுக்குத்தான் இதன் அருமை புரியும் என்கிறார் சென்னை ‘ரீஸ்டோர்’ பசுமை அங்காடியின் மேலாளர் ரவிக்குமார்.
நோய்களுக்குப் பைபை!
அதேநேரம் ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது பழமையானது என்றோ, வயதானவர்களுக்கான, நோயாளிகளுக்கான உணவு என்றோ நினைக்கும் மனப்பான்மையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். நோய்கள் வந்தபின் பசுமை அங்காடிகளைத் தேடி ஓடுவது காலம் கடந்த ஞானம்.
ரசாயன உணவுப் பொருட்களால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும்? “ரசாயன எச்சம் கொண்ட உண வைச் சாப்பிடுவதால் நம் உடம்பில் ஸ்டீராய்ட்ஸ் போன்றவை அதிகம் சேர்கின்றன. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வும், உடல்நலப் பரிசோதனையில் தேர்ச்சி பெறவும் ஆர்கானிக் உணவு வகைகள்தான் கொடுக்கப் படுகின்றன” என்கிறார் நியூ சீட்ஸ் கடையின் உரிமையாளரும் பிசியோ தெரபிஸ்ட்டுமான வெற்றிச்செல்வன்.
அத்துடன் புற்றுநோய், நீரிழிவு நோய், உடல் பருமன் (obesity) போன்ற பின்விளைவுகளுக்கு, ரசாயன உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உட்கொள்வதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
சுவை புதுசு
எல்லாம் சரி, ஆர்கானிக் பொருட் களைப் பயன்படுத்துங்கள் என்று சொன்ன வுடன், ஆபிஸ்ல லஞ்சுக்குக் கூழ் குடிக்கச் சொல்றீங்களா என்று கேள்வி வரும்.
“அப்படியெல்லாம் யோசிக்க வேண்டியதில்ல. தினமும் நாங்க சாப்பிடும் சோளம், கம்பு, ராகி ஃபிளேக்ஸ்கூட ஆர்கானிக்தான். ஆர்கானிக் ஜூஸ்கூடக் கிடைக்குது. சத்தில்லாத ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிடுற எங்களோட ஹெல்த்தை பாதுகாக்க, ஆர்கானிக் பொருட்கள்தான் உதவியா இருக்கு” என்று உற்சாகமாகக் கூறுகிறார் மென்பொருள் பொறியாளர் ப்ரியா.
கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களில் கூழ் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லை. கம்பு இட்லி, கேழ்வரகு உப்புமா, பச்சைப்பயறு சட்னி என்று பல சுவையான உணவு வகைகளைச் சாப்பிட்டுச் சுவை நரம்புகளுக்கு உற்சாகம் தரலாம். தானியங்களைக் கொண்டு பிரபல உணவு வகைகளைச் செய்யும் முறைகள் பிரபலமாகி வருகின்றன.
இத்தனைக்குப் பிறகும் ஆர்கானிக் உணவு முறை நம் உடலுக்கு மட்டுமில்லாமல், இயற்கைக்கும் ஆரோக்கியமானது. அப்புறம் ஏன் யோசித்துக்கொண்டே இருக்க வேண்டும்?
No comments:
Post a Comment