தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லும் பள்ளிகள் அது தொடர்பாக எழுத்துப் பூர்வமான தகவலை மாவட்ட நீதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் மூலம் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கல்வித்துறை விதித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுலா செல்லும் இடங்கள் பாடத்திட்டத்திற்கு தொடர்புடையதாக இருப்பதுடன், அந்த சுற்றுலாவால் மாணவர்களுக்கு பயன் கிடைக்க வேண்டும். மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்துப்பூர்வமாக அனுமதி கடிதம் கொடுத்தால் மட்டுமே அந்த மாணவரை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் சுற்றுலாவின் பொழுது சட்ட, திட்டங்களுக்கு கட்டு்ப்படுவதாக மாணவரும், அவர் தம் பெற்றோரும் கடிதம் வழங்க வேண்டும். பள்ளியின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர் சுற்றுலா செல்வது தொடர்பாக உரிய அனுமதியை உயர் அதிகாரிகளிடம் பெற வேண்டும்.
அணைக்கட்டுப் பகுதிகள், மின் உற்பத்தித் தளங்கள், கடல் பகுதிகள், பொது இடங்களுக்குச் சுற்றுலா செல்ல வேண்டியிருந்தால் மாவட்ட நீதிபதி அல்லது அதற்கு இணையான அதிகாரிகளுக்கு எழுத்துப் பூர்வமான தகவலை கண்டிப்பாக அனுப்ப வேண்டும். சுற்றுலாவை மூத்த ஆசிரியர் வழிநடத்துவதுடன், மாணவிகள் சுற்றுலாவில் பங்கு கொண்டால் மூத்த பெண் ஆசிரியைகள் வழிநடத்த வேண்டும்.
மேலும், சுற்றுலாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவரின் முழு விபரமும்( பெற்றோர் விபரம், முகவரி, கைபேசி எண் உள்ளிட்டவை) வழிநடத்தும் ஆசிரியர்கள் வைத்திருக்க வேண்டும். சுற்றுலாவின் பொழுது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதை சமாளிக்கும் பொறுப்பையும் பள்ளியின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர் ஏற்கவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment