தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
சமீபத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்குப் பத்து நாள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி இதுவரை தமிழுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. தமிழ்தானே! என்கிற ஏளனம்தான் இன்றுவரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி அடையாததற்குக் காரணம்.
ஏன்? மாணவர்களுக்குப் பேசுதல், எழுதுதல், வாசித்தல் போன்றவற்றில் அடிப்படை அறிவோ, பயிற்சியோ இல்லை என்பதுதான் உண்மை. ஒரு மாணவனை அழைத்து, அவனைக் குறிப்பிட்ட தலைப்பில் பேசவோ, எழுதவோ சொன்னால்தான் , அவனுடைய மொழியாளுமை எவ்வளவு அதலபாதாளத்தில் உள்ளது என்பது தெரியவரும். ஆக ஒரு மாணவனின் தாய்மொழி ஆளுமை சிறப்பாக இருந்தால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியும். பொதுவாகவே, பத்தாம் வகுப்பில் கடந்த சில வருடங்களாகத் தமிழில்தான் தோல்வி விகிதம் அதிகமாக அமைந்து வருகிறது. ( மற்ற பாடங்களிலும் மொழிப் பிழையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒரு மாணவன் எல்லா பாடத்திலும் தேர்ச்சி அடைவது சிரமம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்) இதற்குக் காரணம் என்ன?
எழுதுதல், பேசுதல், வாசித்தல் போன்றவற்றில் ஒரு மாணவனின் அடைவைச் சோதி்க்கவும், குறைபாடுகளை நீக்கவுமான வழிமுறைகளைக் கண்டறியவும், மாணவனின் மொழியாளுமையை வளர்க்கவும் இப்பயிற்சி தமிழாசிரியர்களுக்குத் தேவைப்படுகிறது. கீழ்க்கண்ட காரணங்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
1. எழுதுதல், பேசுதல், வாசித்தலில் உள்ள அடிப்படைகளைப் பற்றி விவாதித்தல், வரைவு தயாரித்தல், செயற்படுத்தும் வழி முறைகளைக் கண்டறிதல், அடைவு அறிதல்.
2. கற்றல் குறைவான மாணவர்களுக்கு ஏற்படும் உடல், மன அளவிலான மாற்றத்தினை அறிதல், நீக்குதல் பற்றிய உரையாடல்.
3. வாசிக்கவும் எழுதுவதற்குமான சிறிய சிறிய செயல்பாடுகளை உருவாக்குதல்.
4. மாணவனின் படைப்பாற்றல் திறனை உருவாக்கும் பொதுவெளிக்கு (தொலைக்காட்சி, பத்திரிகை, போட்டிகள்) மாணவர்களைத் தயார்படுத்தும் வழிமுறைகளை ஆராய்தல்.
5. தகவல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி (ஐ.சி.டி) மாணவனின் அறிவு வளர்ச்சியை உருவாக்க, அதற்கான வழிமுறைகளைப் பற்றி உரையாடுதல்
6. கற்பித்தலில் உள்ள சிறிய சிறிய உத்திகள், அதை வழிப்படுத்தும் முறைகள் பற்றி பாடப்பொருள் (எ.கா. உரைநடை நடத்துவது எப்படி) தலைப்பில் புதிய கருத்தகளைத் தொகுத்தல்.
7. ஒரு மாணவன் தேர்ச்சி அடைய தேவையான பயிற்சித்தாள்களை உருவாக்குதல் பற்றிய உரையாடல் அமைத்தல்.
8. ஒரு மாணவனை உற்சாகப்படுத்தக்கூடிய உடல், மனப் பயிற்சிகளைக் கண்டடைதல். (யோகா, யோக முத்திரைகள்,
9. மாணவர்களுக்காக மாணவர்களை வைத்துக் கற்பித்தல் கருவிகளை உருவாக்கும் வழி முறைகளைக் கண்டறிதல் (ஆடியோ, விடியோ)
10. இலவச கற்பித்தல் மென்பொருள் சாதனங்களை (ஆன்ட்ராய்ட், ஸ்மார்ட்போன் உட்பட) பற்றிய உரையாடலின் வழி, மாணவர்களுக்குத் தேவையான கற்பித்தல் கருவிகளை உருவாக்குவதைப் பற்றிய சிந்தனை
மேற்கண்ட கருத்துப் பகிர்வுக்காகவும், பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்கு முன்பாக, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புவரையுள்ள மாணவர்களின் மொழி ஆளுமை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு , தமிழாசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி அளித்தால் நலம்.
எதிர்பார்ப்புடன்,
ரா. தாமோதரன், அ.மே.நி.பள்ளி, மெலட்டூர் 614 301 தஞ்சாவூர் மாவட்டம்.
No comments:
Post a Comment