தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு
தனியார் பள்ளிகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு அறிமுக வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்பு) 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு இடங்களுக்கு மே 18 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாநிலம் முழுவதும் இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கு பெற்றோர் இடையே போதிய வரவேற்பில்லாமல் உள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் கூட மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும்
தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 3,550 மெட்ரிக் பள்ளிகளில் 58,619 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 23,428 (40 சதவீதம்) மாணவர்களே இந்த ஒதுக்கீட்டில் சேர்ந்தனர்.
கடந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் மூன்று மாதங்களில் வழங்கப்படும் என தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் ஏற்கெனவே உறுதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment