Tuesday, 29 April 2014

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று....

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று....

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்”   

         என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்தவர் பாவலரான பாரதிதாசன் அவர்கள்.

         ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள்

            பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
 
         பாரதிதாசன் அவர்கள்  தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேரநேர்ந்தது.. புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் கற்றார்... பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார்

           புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
சுப்புரத்தினம் பாரதிதாசனாக மாறுதல்...

         தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

       அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்தனர்.
படைப்புகள்
        எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
 
        ‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
முக்கியமான ஒரு சில நிகழ்வுகள்

          பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது  மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

      அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக ‘தங்கக் கிளி பரிசு’ வழங்கப்பட்டது...

         அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ ம் வழங்கப்பட்டது...
           எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு முதன் முறையாக பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்து முதன் முதலாக பாவேந்தர் பாரதிதாசன் விருதாக  ரூ. 10,000 தொகையும் , 4 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டபோது முதன்முதலாக இப்பரிசைப் பெற்றவர் பாவேந்தரின் சீடர் 'சுரதா' அவர்கள் தான்..

       கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு வழங்கிய 'பாரதிதாசன் விருதை' முதன் முறையாகப் பெற்றவரும் பாவேந்தரின் சீடர் 'சுரதா' அவர்கள் தான்.

            தமிழக அரசு பாவேந்தரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, பாவேந்தரின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது. பாவேந்தரின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சம் வழங்கியது.

No comments:

Post a Comment