Friday 4 April 2014

விவாத மேடை


Posted: 01 Apr 2014 07:28 PM PDT

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள "கன்டின்யுவஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் வால்யுவேஷன்' (சி.சி.இ.) மதிப்பீட்டு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது சரியா?'

By dn
First Published : 02 April 2014 02:16 AM IST
உண்மையான மதிப்பீடு
சி.சி.இ. மதிப்பீட்டு முறை என்பது ஒரு மாணவனின் கற்றல் அளவுகளை தொடர்ச்சியாகவும், துல்லியமாகவும் மதிப்பீடு செய்து அளிக்கப்படும் மதிப்பெண்கள் ஆகும். இதுதான் உண்மையான மதிப்பீடு. வருடக் கடைசியில் தேர்வு என்ற பெயரில் ஒரே முறை மாணவனது தகுதியை அளவிடுதல் சரியாகாது. வருடம் முழுவதும் நல்ல தேர்ச்சியை பெற்றவன்கூட ஆண்டுத் தேர்வில் சில காரணங்களால் சரியான மதிப்பெண் பெற முடியாமல் போய்விடலாம். அதற்காக அவன் தகுதியை குறைத்து மதிப்பிடுவதும் அவனுக்கு உயர்கல்வி மறுக்கப்படுவதும் சரியான அணுகுமுறை அல்ல. சி.சி.இ. மதிப்பீட்டு முறையே சரியான மதிப்பீட்டு முறை.
கலைப்பித்தன், கடலூர்.

அடிப்படை வசதி
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆயினும் அதனை செயல்படுத்துவதற்கு முன்பு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்றுள்ளனவா என்பதை அறிவது அவசியம். ஏனெனில் மாணவர்களிடையே திறனை மேம்படுத்த ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பல்திறன் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் அவசியம். அவற்றை மேம்படுத்தாமல் மதிப்பீடு செய்யும் முறையை மட்டும் செயல்படுத்துவது என்பது சரியல்ல.
துளிர், மதுரை.

நோக்கம்
இது சரியான முடிவு. ஏனெனில் ஒரு மாணவனின் செயல்பாட்டுத்திறன் ஆண்டு இறுதித் தேர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்காமல் ஆண்டு முழுவதற்குமான அவனுடைய செயல்பாட்டுத்திறன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் மாணவனின் செயல்பாடு, புரிந்து கொள்ளும் திறன், ஆளுமைத் திறன் போன்றவை மேம்பட வாய்ப்பிருக்கிறது. இதுவரை தேர்வு நேரத்தில் மட்டுமே படித்த மாணவர்கள் இனி வருடம் முழுவதும் பாடங்களை படிப்பார்கள். கல்வித் திட்டத்தின் நோக்கம் மாணவர்களை முழுமையாகச் சென்றடையும்.
எஸ். குமரவேல், அம்மையப்பன்.

ஏமாற்றம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள சி.சி.இ. மதிப்பீட்டு முறை ஒரு மாயை. மாணவனின் கல்வித் திறனை இம்முறையில் அறிவதென்பது இயலாதது. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுபோல் ஆகும். இம்முறையினை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகவே முடியும். மாணவர்களிடத்திலும் தன்முனைப்பு குன்றி தளர்ச்சியும்,அலட்சியப் போக்கும் மேலோங்கும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

நல்ல முறை
ஒரு மாணவனின் தகுதியை அவன் வருட முடிவில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடுவது சரியல்ல. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கும்போது, மாணவனின் முழுத்திறமையையும் அளவிட முடியும். மாணவன் பெறும் மதிப்பெண்கள் கிரேடு அடிப்படையிலும் வழங்கப்படுவதால், மதிப்பெண் முறையில் ஏற்படும் மனப் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும். இது மிகவும் நல்ல முறை.
டி. சேகரன், மதுரை.

பயனுள்ள முறை
விரிவான மற்றும் தொடர் மதிப்பீடு சமச்சீர் முப்பருவ கல்விமுறையில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. அதனடிப்படையில் வளரறி மதிப்பீடு 1 (ஊஅ 1), வளரறி மதிப்பீடு 2 (ஊஅ 2), தொகுத்தறி மதிப்பீடு (நஅ), என்னால் முடியும், நானே செய்வேன் (ஐ ஸ்ரீஹய், ஐ ஜ்ண்ப்ப் க்ர்), செயல் திட்டம் (டழ்ர்த்ங்ஸ்ரீற் ரர்ழ்ந்), மாணவர் திரள் பதிவேடு (இன்ம்ன்ப்ஹற்ண்ஸ்ங்) போன்ற செயல்பாடுகளோடு, தரநிலை (எழ்ஹக்ங்) முறையில் மதீப்பீடு செய்யப்படுகிறது. இம்முறையில் பதிவேடுகள் பராமரித்தல் கூடுதல் பணிப்பளுவே தவிர, மற்றபடி பயனுள்ள முறையாகும்.
வீ. இராமலிங்கம், முத்துப்பேட்டை.

கடிவாளம்
இம்முறையை மற்ற பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டாம். கிராமப்புற பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் நடைமுறையில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை வளர்க்க இன்றைய கல்வித் திட்டத்திலேயே பல்வேறு நல்ல முறைகள் உள்ளன. அவற்றை செம்மையாக நடைமுறைப்படுத்தினாலே போதுமானது. இம்முறை, மாணவர்களின் சிந்தனைக்கு கடிவாளம் போட்டது போலாகும்.
முருகு சிற்றரசன், திருமுட்டம்.

சரியானதே
ஆண்டு முழுவதும் ஒரே புத்தகம். பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு புத்தகச் சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். காலாண்டு, அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவர் ஏதோ காரணத்தினால் ஆண்டு இறுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் தோல்வியை அடைந்தவராவார். எனவே, தொடர் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பீடு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்தல் சரியானதே. வரவேற்கத்தகுந்ததே. சி.சி.இ. மதிப்பீட்டு முறை அமலாக்கல் பள்ளிக் கல்வித்துறையின் சீரிய பணியாகும்.
மு. கிருட்டிணசுவாமி, வேலூர்.

ஆளுமைத்திறன்
சி.சி.இ. என்னும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை என்பது ஒழுங்குமுறை, செயல்திறன், ஆளுமை வளர்ச்சி என உடல், மனம் சார்ந்த அனைத்து கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடும் முறையாகும். இந்த மதிப்பீட்டு முறையானது தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித் துறையால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவன் பரந்து பட்ட அறிவு பெற இம்முறை உதவுகிறது. இந்த மதிப்பீட்டு முறை மாணவனை ஆளுமைத் திறன் மிக்கவனாக மாற்ற உதவுவதனால் அனைத்து பள்ளிகளிலும் இம்முறையை செயல்படுத்தலாம்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

தேர்வு தேவை
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள சி.சி.இ. மதிப்பீட்டு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது சரியே. ஆனால் இப்போதுள்ளபடி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகளை நிறுத்திவிடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும் 8ஆம் வகுப்பு முடிவில் வருவாய் மாவட்ட அளவிலும் 5ஆம் வகுப்பு முடிவில் கல்வி மாவட்ட அளவிலும் கல்வித்துறை பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு இருப்பதால்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். இல்லாவிட்டால் படிக்க மாட்டார்கள்.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

பொருந்தாது
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நகரங்களில் இருப்பவை. அதில் பயிலும் மாணவர்களும் நகரங்களில் வாழ்பவர்கள். கணினி அவர்களுக்கு விளையாட்டுக் கருவி. பெற்றோர்களும் உறவினர்களும் கல்வியில் மேம்பட்டவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் தரமும் சிறப்பானவை. இவற்றையெல்லாம் கிராமப் புறங்களில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எதிர்பார்க்க முடியாது. எனவே சி.சி.இ. எனப்படும் தொடர் மதிப்பீட்டு முறை நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
செ. சத்தியசீலன், கிழவன் ஏரி.

கவலை இல்லை
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மதிப்பீட்டு முறை சரி. மதிப்பீடு செய்யும் பொழுது மாணவ, மாணவியர்கள் செய்யும் சிறு சிறு பிழைகள் அப்போதைக்கு அப்போதே திருத்தப்படுகிறது. எனவே இது ஒரு சிறந்த முறையே. இதனால் இறுதித் தேர்வு நடக்கின்றபோது விழுந்து விழுந்து படிப்பது தவிர்க்கப்படுகிறது. செமஸ்ட்டர் தேர்வுமுறை நடத்தப்படுவதும் இதற்காகத்தான். சில பாடங்களைப் படித்துத் தேர்வு எழுதிவிட்டால் அந்தப் பாடங்களைப் பற்றிய கவலை இல்லை.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.

முழு பதிவேடு
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வழங்கும் பள்ளி சார்ந்த மதிப்பீட்டு சான்றிதழ் மாணவரின் கல்வித்திறன், செயற்பாடு, விளையாட்டு, உடல்நலம், தனித்த மற்றும் சமூகப் பண்புகள், உயர் குணங்கள், நுண்கலைத்திறன் ஆகியவற்றை தனித்தனியே கண்காணித்து, மதிப்பிடுகின்றது. முதல் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அட்டையுடன் வழங்கப்படும் இச்சான்றிதழ் ஒரு மாணவரைப் பற்றிய முழுமையான பதிவேடாகும். சி.சி.இ. முறையை அதன் நோக்கங்களைப் புரிந்து மிகச்சரியாக பின்பற்றினால், ஒரு மாணவனை செழுமையாக உருவாக்க முடியும்.மதிப்பெண்களுக்கான மாணவரை தயாரிக்காமல் ஆளுமைமிக்க மாணவரை உருவாக்க சி.சி.இ. முறை உதவும்.
டி.எஸ். இராஜேஸ்வரி, தூத்துக்குடி

No comments:

Post a Comment