Thursday, 10 April 2014

தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறோம்?

  
1
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின் வாக்கு தமிழகத்தில் திரும்பத் திரும்பத் தண்ணீரைப் பற்றிப் பேசக் கூடியவர்களால் சொல்லப்படுகிறது. அவர் சொல்வது நல்ல நீரைப் பற்றி, உப்பு நீரைப் பற்றி அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், நல்ல நீரைப் பற்றிய விவரங்கள் நமக்கு அதிகம் தெரியாது.
உலகில் இருக்கும் தண்ணீரில் 97.5% கடல் தண்ணீர். மீதமுள்ள 2.5% நல்ல தண்ணீரில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேல் ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளிலும், இமயமலை போன்ற பனிமலைகளிலும் உறைந்துகிடைக்கிறது. மீதமுள்ள பங்கில் பெரும் பகுதி நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர். கிடைக்கும் தண்ணீரில் 0.26% மட்டுமே ஏரிகளிலும் குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் ஆறுகளிலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
தண்ணீரில் ஏற்றத்தாழ்வு
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்போலத் தண்ணீர் கிடைப்பதிலும் உலகில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இருப்பவர்களில் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 1.5 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் கிடைக்கிறது! ஆனால், குவைத்தில் இருக்கும் நல்ல தண்ணீர் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 10 கனமீட்டர் தேறினால் அதிசயம். இந்தியாவைப் பொறுத்த அளவில் நமக்குக் கிடைக்கும் தண்ணீர் தலைக்கு சுமார் 2,200 கனமீட்டர்கள்.
சீனர்களுக்கும் 2,250 கனமீட்டர்கள் கிடைக்கிறது. கிடைப்பது குடிநீருக்கு மட்டுமல்ல. பாசனத்துக்கு, குளிப்பதற்கு, தொழிற்சாலைகளுக்கு, நமக்கு உணவாகப்போகும் மிருகங்களுக்கு - இவை எல்லாவற்றுக்கும்தான்.
இன்று உலகின் மக்கள்தொகை சுமார் 700 கோடி. இது 2050-க்குள் 900 கோடிக்கும் மேல் உயர்ந்துவிடும். உலகில் உணவு உற்பத்தி ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாது. காரணம், விளைநிலங்களின் தட்டுப்பாடு அல்ல. தண்ணீர்த் தட்டுப்பாடு. 2050-ல் தண்ணீர் அப்போதைய தேவையை விட 27% குறைவாகக் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தட்டுப்பாடு இருக்காது.
வளரும் நாடுகளில்தான் தட்டுப்பாடு. அடிமேல் அடி அவர்கள் மீதுதான் விழும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டால் அது எல்லை நிலங்களுக்காக இருக்காது; தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் முரண்களுக்காக இருக்கலாம்.
இந்தியாவின் நிலை
தண்ணீர்த் தட்டுப்பாடு என்றால் என்ன என்பதை ஐ.நா. சபை நிர்ணயம் செய்திருக்கிறது. வருடத்துக்குத் தலைக்கு 1,700 கனமீட்டர்களுக்கு மேல் தண்ணீர் இருக்கும் நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு அறவே இல்லை என்று சொல்லலாம். 1,700 கனமீட்டரிலிருந்து 1,000 கனமீட்டர்கள் கிடைக்கும் நாடுகளில் மக்கள் தண்ணீர் குறைபாட்டை உணர்வார்கள். ஆனால், கடுமையான தட்டுப்பாடு 1,000 கனமீட்டர்களுக்கும் குறைவாகக் கிடைக்கும் இடங்களில்தான் நிகழ்கிறது.
முழுவதுமாகப் பார்த்தால், இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை என்று சொல்லலாம். ஆனால், நமக்குக் கிடைக்கும் தண்ணீரில் சுமார் 90% விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், கிடைக்கும் தண்ணீரை நாம் திறமையாகப் பயன்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கடலில் கலக்கும் நீரின் அளவு மிக அதிகம். இந்திய நதிகள் உலக நதிகளின் நீர் அளவில் 4% மட்டுமே சுமக்கின்றன.
ஆனால், அவை சுமக்கும் வண்டலின் அளவு 35% சதவீதத்துக்கும் மேல்! இதனாலேயே நதிகளின் ஆழம் குறைந்து கரைகள் உடைபட்டு வெள்ளங்கள் ஏற்படுகின்றன. பல சமயங்களில் யாருக்கும் பயனின்றி தண்ணீர் அழிவையே ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் நிலை
சென்ற வாரம் சென்னையில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “தண்ணீர்த் தட்டுப்பாடு உண்டா?” என்று கேட்டேன். “கிடையவே கிடையாது” என்றார். “காசு கொடுத்தால் டேங்கரில் தண்ணீர் வந்துவிடும்.” “மாதம் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?” “இரண்டாயிரம் இருக்கும்.” மாதம் இரண்டாயிரம் தண்ணீருக்காகச் செலவுசெய்யும் வசதிபடைத்தவர்கள் தமிழகத்தில் அதிகம் இருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தக் கேள்விக்குச் சரியான விடை இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் 750 கன மீட்டர்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது என்று தமிழக அரசின் ஆவணம் ஒன்று கூறுகிறது. தட்டுப்பாடு நிலை என்று ஐ.நா. சபை நிர்ணயித்த 1,000 கனமீட்டர்களை விட இது 25% குறைவு. பாலைவனப் பிரதேசம் என்று சொல்லக்கூடிய ராஜஸ்தானில் தலைக்கு 780 கனமீட்டர்கள் கிடைக்கிறது. நமது நிலைமை பாலைவனத்தைவிட மோசம். கிடைக்கும் நீரில் 45 சதவீதத்துக்கும் மேல் நிலத்தடி நீர்.
நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் சுமார் 30 சதவீதத்துக்கு நாம் அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கிறோம். அண்டை மாநிலங்களிலும் உபரி நீர் அதிகம் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஏற்கெனவே நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் 95 சதவீதத்தையும், நிலத்துக்குக் கீழ் கிடைக்கும் நீரில் 80 சதவீதத்தையும் வருடந்தோறும் பயன்படுத்திக்கொண்டுவருகிறோம். இதில் 75% சதவீதம் விவசாயத்துக்குப் பயன்படுகிறது.
வழி என்ன?
தமிழகம் நகரமயமாகும்போது தண்ணீரின் தேவையும் அதிகமாகிறது. விவசாயத்துக்கு உபயோகிக்கப்படும் நீரின் அளவு குறைந்தாலும், நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அண்டை மாநிலங்கள் முன்னேறும்போது அவர்களது தேவைகளும் அதிகரிக்கும். எனவே, நாம் தண்ணீருக்கு மற்றைய வழிகளைத் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.
விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவை உற்பத்திக்கு ஊறு ஏற்படாமல் குறைக்க வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, அரிசி உற்பத்திக்கு ஒரு கிலோவுக்கு 5,000 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை 50 சதவீதத்தைக் குறைத்து உற்பத்தியையும் அதிகரிக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி.
நதிகளை இணைப்பது ஒரு வழி. போகாத ஊருக்குப் போகும் வழி. அப்படியே இணைக்கப்பட்டாலும், நாம் நாட்டின் கடைக்கோடியில் இருப்பதால், எல்லோருக்கும் போக மிச்சம் இருப்பதுதான் வந்துசேரும் அபாயம் இருக்கிறது. மிச்சமே இல்லாதும் போகலாம்.
மற்றொன்று, கடல் நீரை நல்ல நீராக்கும் வழி. இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு, இதைப் பெரிய அளவில் செய்வது சாத்தியம் அல்ல. பணம் அதிகமாகச் செலவாகும். மேலும், இந்த முறையினால் ஏற்படும் கழிவுகளை அகற்றுவது மிகவும் கடினமான காரியம்.
எனவே, இருக்கும் நீர் ஆதாரங்களை அழியாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அதைவிட அவசியம். வருமுன் காக்கத் தவறினால், சென்னை போன்ற நகரங்களில் வாடகையை விட தண்ணீருக்கு அதிகம் பணம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகலாம். தட்டுப்பாடு ஏற்பட்டால் துன்பப்படப்போகிறவர்கள் கீழ்த்தட்டு மக்களே.
- பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர், 
பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, 
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

No comments:

Post a Comment