மாணவர்களை தயார்படுத்த, சி.இ.ஓ., - டி.இ.ஓ., போன்ற கல்வித் துறை அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட பயிற்சி அளிக்கப் படுகிறது. புதிய கல்வி ஆண்டில், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும். அதனால், அவர்களுக்கு பயிற்சி அளித்து, பின், மாணவர்களுக்கு கற்பித்தல் முறைகளை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, சி.இ.ஓ., எனப்படும், முதன்மை கல்வி அதிகாரி மற்றும் டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கோடை கொண்டாட்ட ஆளுமை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மே, 3 முதல், 6 வரை, மதுரையில் சிறப்பு புத்தாக்க பயிற்சி நடக்கிறது. இதில், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணன், டாக்டர் அமுதா ஹரி, ஒடிசா அரசின் கூடுதல் தலைமை செயலர், ஆர்.பாலகிருஷ்ணன், பேராசிரியர், ச.மாடசாமி, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இந்த மூன்று நாள் பயிற்சியில் அதிகாரிகளுக்கு, அறுசுவை விருந்து, கலந்துரையாடல், விவாதம், நகைச்சுவை சொற்பொழிவு, சிலம்பம், கராத்தே, புத்தாக்க விளையாட்டுகள் போன்றவை இடம் பெற உள்ளன. பயிற்சி நிறைவு விழாவில், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
ஜூனில், புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, மாணவர்களை நெறிப்படுத்த, ஆசிரியர்களும், அதிகாரிகளும் புத்துணர்ச்சியுடன் தயாராக வேண்டும். 'நீட்' போன்ற பல போட்டி தேர்வுகளை, மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதற்கேற்ப, ஆசிரியர்களுக்கு ஆளுமை திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment