"பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் அறிவியல் பாடங்களால், மாணவர்களுக்கு சலிப்புதான் ஏற்படுகிறதே தவிர, அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதில்லை" என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கூறியுள்ளார்.
டில்லியில், அசோசெம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள், தற்போது எந்த இடத்திலும் பயன்படுவதில்லை. பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ள அறிவியல் தொடர்பான விளக்கங்கள் முனபொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டவை.
தற்போது அதிலிருந்து நாம் வெகுதொலைவிற்கு முன்னேறிச் சென்று விட்டோம். தற்போதைய நடைமுறைக்கு சற்றும் ஒத்துவராத பழைய பாடத்திட்டங்களையே, கல்வி நிலையங்களில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்து வருவதாலேயே தான் மாணவர்களுக்கு எளிதில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இது மாணவர்களுக்கு, அறிவியல் மீது வெறுப்பு ஏற்படவும் வழிவகுக்கிறது.
மாற்றம் வேண்டும்
நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் கல்விமுறை சொல்லிக் கொள்ளும் படியாக, சிறப்பானதாக இல்லை. முதற்கட்டமாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் கற்பிக்கும முறையில், மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். நாட்டில், அறிவியல் மற்றும் கல்வி துறைகளுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
நாட்டின் எதிர்கால சந்ததியினரை, திறமை மிக்கவர்களாக உருவாக்குவதில், அறிவியல் மற்றும் கல்வி துறைகளுக்கு போதிய முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதை மத்திய அரசு உணர்ந்து செயல்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
குற்றச்சாட்டு
நரசிம்மராவ், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, கல்வி தொடர்பான தேசிய கொள்கைகளின் அடிப்படையில், அவருக்கு நான் கடிதம் எழுதினேன். அதில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரிவில், கல்வி துறைக்கு 6 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.
அப்போது அதை ஏற்றுக்கொண்ட நரசிம்ம ராவ், பிரதமர் ஆனவுடன், 2 சதவீதத்தை மட்டுமே, கல்விக்காக ஒதுக்கியது எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரின் ஆயுட்காலம் குறைவாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment