Advertisement
பதிவு செய்த நாள்16
ஆக
2014
23:29
இன்றைய மாணவர்களால் முறையாகத் தமிழில் பேச முடியவில்லை; பிழையின்றி எழுதத் தெரியவில்லை. ஊடகங்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்த கலவைத் தமிழையே பயன்படுத்துகின்றன என, கண்டனக்குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது. இத்தகைய குறைகளை மிகைப்படுத்துவதைத் தவிர்த்து, இந்நிலையை மாற்றியமைக்க தமிழ் கல்வியாளர்கள், ஆக்கபூர்மான பணியில் ஈடுபட வேண்டும்.
தமிழ் வழியாகக் கல்வி பயின்றால், பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் பணிபுரிய முடியாது என்னும் புனைந்துரையையும், தமிழில் இளங்கலை, முதுகலை கற்றவர்களால் ஆசிரியப் பணியினை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்னும் பரப்புரையையும் பொய்யுரையாக்க வேண்டியது, தமிழ்க் கல்வியாளர்களின் கட்டாயக் கடமை.தாய்மொழிவழிக் கல்வியின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமையால், ஆங்கிலவழிக் கல்வியின் மீது பெரிதும் நாட்டம் கொண்டுள்ளோம். நம் கல்வித் திட்டத்தில் மொழிக்கல்விக்கு முதன்மை இடம் அளிக்காததால், நாட்டின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது. பல ஆண்டுகள் தமிழைக் கற்றாலும், மாணவர்கள் படித்தவற்றின் உட்பொருளை உணர முடியாமலும், புதியன படைக்கும் திறன் இல்லாமலும், கருத்துக்களை வெளியிடும் திறன் இல்லாமலும் இருக்கின்றனர்.இந்நிலையில், தமிழ்வழியாகக் கற்பிக்கப்படும் பிறபாடங்களின் நுண்பொருளை மாணவர்களால் எவ்வாறு உணர முடியும்?
மொழிக்கல்வியில் நம் பாடத்திட்டத்தில் முதன்மை இடம் பெறுவது இலக்கணக் கல்வி. இலக்கணம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்தப் பெற்ற மொழியின் அமைப்பை விவரிக்கக் கூடியது என்பதால், அது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிறது.
மொழியலகுகளில் ஏற்பட்டுள்ள முறையான மாற்றங்களை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளாமையால், இன்றைய மாணவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழியின் அமைப்பை விவரிக்கும் இலக்கணத்தைக் கற்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு, இன்றைய பயன்பாட்டுத் தமிழில் பேசவும், எழுதவும் ஆற்றல் கிடைக்காமல் போய்விடுகிறது.மொழி கற்பித்தலுக்கும், இலக்கியம் கற்பித்தலுக்கும் இடையேயுள்ள வேறுபாடு கூட, கல்வியாளர்கள் மத்தியில் வரையறை செய்யப் பெறவில்லை. இலக்கியக் கல்வியையே மொழிக்கல்வியாகக் கருதும் போக்கு, கட்டாயம் மாற்றம் பெற வேண்டும்.மொழிக் கல்வி பற்றிய தவறான எண்ணம், பாடத்திட்டம், கற்பித்தல் ஆகியவற்றில் காணப்பெறும் நிறைவின்மை காரணமாக, மொழிக்கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது.
மாணவர்களிடம் மொழிக்கல்வியில் பெரிதும் ஆர்வம் குன்றியிருப்பதற்குப் பாடத்திட்டமே அடிப்படைக் காரணமாக அமைகிறது.நம் பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதே அன்றி, பெரிதும் மாற்றியமைக்கப் பெறவில்லை. இது வாழ்க்கைக்குத் தொடர்பின்றி, ஆசிரியர்களை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. இது, மொழித்திறன்களை வளர்ப்பதைக் காட்டிலும், மொழி வரலாற்றைத் திணிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது.
மருத்துவம், தொழில் நுட்பவியல் போன்வற்றைப் பயிலவிருக்கும் மாணவர்களுக்கு மேனிலை வகுப்புகள் வரை மட்டுமே மொழிக்கல்வி பெற வாய்ப்புள்ளதால், பள்ளியிலேயே அனைத்து மொழித்திறன்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.இளங்கலை, முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் மொழிபெயர்ப்பு, மொழி கற்பித்தல், கணினி மொழியியல், மானுடவியல், மொழி அறிவியல், பண்பாட்டியல் போன்ற பாடங்களையும் அறிமுகம் செய்து, அனைத்துத் துறைகளிலும் பணிபுரியக் கூடிய வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும்.மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை உருவாக்கும் ஆங்கில மொழிக் கருத்துப் பரிமாற்றக் கல்வியும், கணினிப் பயன்பாட்டுக் கல்வியும் பாடத்திட்டத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும். ஆங்கிலக் கருத்துப் பரிமாற்றத்திறன் பெற்றால் தான், நம் இலக்கண, இலக்கியக் கோட்பாடுகளை உலகறியச் செய்தல் இயலும்.
உலகின் முதல் மொழி அறிவியல் ேபராசான் என்று கருதப்படும் தொல்காப்பியரின் மொழி விளக்க மரபும், இலக்கணக் கோட்பாடும் மேலை நாடுகளைச் சென்றடையவில்லை என்பது வருந்தற்குரியது.கல்வி என்பது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக; வாழ்க்கையைச் சீர்குலைத்துப் பொருள் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டது அல்ல கல்வி என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், பாடத்திட்டமும், பாடங்களும் அமைய வேண்டும்.கற்ற கல்வியை மதிப்பீடு செய்வதே, தேர்வின் நோக்கம். கற்ற பாடம் முழுவதையும் மதிப்பீடு செய்யாமல், மனப்பாட ஆற்றலின் அடிப்படையில் நடத்தப்பெறும் நம் தேர்வுமுறை, மாணவர்களின் மொழித்திறனில் குறைபாட்டை உருவாக்கி, அவர்களைக் காயப்படுத்துகிறது. 1330 குறளை ஒப்புவிக்கும் மாணவனால், புதிதாக ஒரு திருக்குறளை உருவாக்க முடியவில்லை.மாணவர்களால் தமிழ் ஒலிகளை முறையாக ஒலிக்கத் தெரியவில்லை என்று கூறுவதைக் காட்டிலும், இவர்களுக்குத் தொடக்க நிலையில் முறையான ஒலிப்புப் பயிற்சி வழங்குவதே ஏற்புடையது.
இத்தகைய பயிற்சி அளிக்கும் அனுபவம் ஆசிரியர்களிடம் இல்லை. தொடக்க நிலையில் மொழி ஆசிரியர்களால் பள்ளியில் மொழிக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை.மொழிக்கல்வியின் குறைபாட்டிற்கு மக்களின் மனநிலை அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. அன்று வடமொழிக்கு, மொழி முதன்மை கொடுத்தோம். இன்று ஆங்கிலத்திற்குக் கொடுக்கிறோம்.ஆங்கிலம் பேசுகிறவர்களை அறிவாளிகளாகக் கருதும் நாடுகளில் ஒன்றான நம் நாட்டில், ஆங்கிலேயன் நம்மிடமிருந்து கடன் பெற்று மாற்றியமைத்த சொற்களை மீண்டும் அவனிடமிருந்து கடன் பெற்றுப் பயன்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகிறோம்.தமிழ் மொழியமைப்பில் காணப்படும் சீர்மையின்மையைக் களைந்து, கணினிப் பயன்பாடு, மின்னணுவியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவையான அலகுகளை, தமிழில் தமிழ்க் கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். இந்நிலையில் தமிழியற்கல்வி புதிய வரலாறு படைக்கும்.
இ-மெயில்: laserbala@gmail.com
- பேராசிரியர் ஏ. ஆதித்தன்
-மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
|
Tuesday, 26 August 2014
தமிழ்வழிக் கல்வியை சாத்தியமாக்க வழி என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment