ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட இருக்கிறது என்று மாநிலமுதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்திருக்கிறார்.
ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் ஒன்றுபட்டு கடந்த பல ஆண்டுகளாகவே தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்தன. ஹரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டி, மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா முன்வந்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக அவர் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 25 சதவீதம் அதிகரிக்கப்படும். ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 58 ஆக இருக்கிறது. அதனை 60 ஆக மாநில அரசு உயர்த்த இருக்கிறது. அதற்கு முன்பு ஓய்வுபெறும் ஊழியரிடம் 58 வயதில் ஓய்வு பெற சம்மதமா அல்லது மேலும் ஈராண்டுகளுக்குப் பணியில் நீடிக்க விருப்பமா என்று கருத்து கோரப்படும். மேலும் தற்போது 28 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்குத்தான் முழு ஓய்வூதியம் கிடைக்கிறது. இது 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட இருக்கிறது.
இவை அனைத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து அமலாகும்.6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்கிய சமயத்தில் இருந்த குறைபாடுகளைக் களைந்திட புதிய ஊதியக் குழு அமைக்கப்படும். அட்ஹாக் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் நிரந்தரப்படுத்தப்படுவார்கள். ஒப்பந்த ஊதிய முறையை முழுமையாக ஒழித்துக்கட்ட அரசு கொள்கை அளவில் தீர்மானித்திருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு முன் பணம் கொடுப்பதற்கான கொள்கை தளர்த்தப்படும்.இவ்வாறு முதல்வர் ஹூடா அறிவித்துள்ளார்
No comments:
Post a Comment