Friday, 4 April 2014

விவாத மேடை


Posted: 01 Apr 2014 07:28 PM PDT

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள "கன்டின்யுவஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் வால்யுவேஷன்' (சி.சி.இ.) மதிப்பீட்டு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது சரியா?'

By dn
First Published : 02 April 2014 02:16 AM IST
உண்மையான மதிப்பீடு
சி.சி.இ. மதிப்பீட்டு முறை என்பது ஒரு மாணவனின் கற்றல் அளவுகளை தொடர்ச்சியாகவும், துல்லியமாகவும் மதிப்பீடு செய்து அளிக்கப்படும் மதிப்பெண்கள் ஆகும். இதுதான் உண்மையான மதிப்பீடு. வருடக் கடைசியில் தேர்வு என்ற பெயரில் ஒரே முறை மாணவனது தகுதியை அளவிடுதல் சரியாகாது. வருடம் முழுவதும் நல்ல தேர்ச்சியை பெற்றவன்கூட ஆண்டுத் தேர்வில் சில காரணங்களால் சரியான மதிப்பெண் பெற முடியாமல் போய்விடலாம். அதற்காக அவன் தகுதியை குறைத்து மதிப்பிடுவதும் அவனுக்கு உயர்கல்வி மறுக்கப்படுவதும் சரியான அணுகுமுறை அல்ல. சி.சி.இ. மதிப்பீட்டு முறையே சரியான மதிப்பீட்டு முறை.
கலைப்பித்தன், கடலூர்.

அடிப்படை வசதி
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆயினும் அதனை செயல்படுத்துவதற்கு முன்பு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்றுள்ளனவா என்பதை அறிவது அவசியம். ஏனெனில் மாணவர்களிடையே திறனை மேம்படுத்த ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் பல்திறன் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் அவசியம். அவற்றை மேம்படுத்தாமல் மதிப்பீடு செய்யும் முறையை மட்டும் செயல்படுத்துவது என்பது சரியல்ல.
துளிர், மதுரை.

நோக்கம்
இது சரியான முடிவு. ஏனெனில் ஒரு மாணவனின் செயல்பாட்டுத்திறன் ஆண்டு இறுதித் தேர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்காமல் ஆண்டு முழுவதற்குமான அவனுடைய செயல்பாட்டுத்திறன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் மாணவனின் செயல்பாடு, புரிந்து கொள்ளும் திறன், ஆளுமைத் திறன் போன்றவை மேம்பட வாய்ப்பிருக்கிறது. இதுவரை தேர்வு நேரத்தில் மட்டுமே படித்த மாணவர்கள் இனி வருடம் முழுவதும் பாடங்களை படிப்பார்கள். கல்வித் திட்டத்தின் நோக்கம் மாணவர்களை முழுமையாகச் சென்றடையும்.
எஸ். குமரவேல், அம்மையப்பன்.

ஏமாற்றம்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள சி.சி.இ. மதிப்பீட்டு முறை ஒரு மாயை. மாணவனின் கல்வித் திறனை இம்முறையில் அறிவதென்பது இயலாதது. இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுபோல் ஆகும். இம்முறையினை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகவே முடியும். மாணவர்களிடத்திலும் தன்முனைப்பு குன்றி தளர்ச்சியும்,அலட்சியப் போக்கும் மேலோங்கும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

நல்ல முறை
ஒரு மாணவனின் தகுதியை அவன் வருட முடிவில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடுவது சரியல்ல. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கும்போது, மாணவனின் முழுத்திறமையையும் அளவிட முடியும். மாணவன் பெறும் மதிப்பெண்கள் கிரேடு அடிப்படையிலும் வழங்கப்படுவதால், மதிப்பெண் முறையில் ஏற்படும் மனப் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும். இது மிகவும் நல்ல முறை.
டி. சேகரன், மதுரை.

பயனுள்ள முறை
விரிவான மற்றும் தொடர் மதிப்பீடு சமச்சீர் முப்பருவ கல்விமுறையில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. அதனடிப்படையில் வளரறி மதிப்பீடு 1 (ஊஅ 1), வளரறி மதிப்பீடு 2 (ஊஅ 2), தொகுத்தறி மதிப்பீடு (நஅ), என்னால் முடியும், நானே செய்வேன் (ஐ ஸ்ரீஹய், ஐ ஜ்ண்ப்ப் க்ர்), செயல் திட்டம் (டழ்ர்த்ங்ஸ்ரீற் ரர்ழ்ந்), மாணவர் திரள் பதிவேடு (இன்ம்ன்ப்ஹற்ண்ஸ்ங்) போன்ற செயல்பாடுகளோடு, தரநிலை (எழ்ஹக்ங்) முறையில் மதீப்பீடு செய்யப்படுகிறது. இம்முறையில் பதிவேடுகள் பராமரித்தல் கூடுதல் பணிப்பளுவே தவிர, மற்றபடி பயனுள்ள முறையாகும்.
வீ. இராமலிங்கம், முத்துப்பேட்டை.

கடிவாளம்
இம்முறையை மற்ற பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டாம். கிராமப்புற பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் நடைமுறையில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை வளர்க்க இன்றைய கல்வித் திட்டத்திலேயே பல்வேறு நல்ல முறைகள் உள்ளன. அவற்றை செம்மையாக நடைமுறைப்படுத்தினாலே போதுமானது. இம்முறை, மாணவர்களின் சிந்தனைக்கு கடிவாளம் போட்டது போலாகும்.
முருகு சிற்றரசன், திருமுட்டம்.

சரியானதே
ஆண்டு முழுவதும் ஒரே புத்தகம். பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு புத்தகச் சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். காலாண்டு, அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவர் ஏதோ காரணத்தினால் ஆண்டு இறுதித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் தோல்வியை அடைந்தவராவார். எனவே, தொடர் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பீடு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்தல் சரியானதே. வரவேற்கத்தகுந்ததே. சி.சி.இ. மதிப்பீட்டு முறை அமலாக்கல் பள்ளிக் கல்வித்துறையின் சீரிய பணியாகும்.
மு. கிருட்டிணசுவாமி, வேலூர்.

ஆளுமைத்திறன்
சி.சி.இ. என்னும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை என்பது ஒழுங்குமுறை, செயல்திறன், ஆளுமை வளர்ச்சி என உடல், மனம் சார்ந்த அனைத்து கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடும் முறையாகும். இந்த மதிப்பீட்டு முறையானது தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித் துறையால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவன் பரந்து பட்ட அறிவு பெற இம்முறை உதவுகிறது. இந்த மதிப்பீட்டு முறை மாணவனை ஆளுமைத் திறன் மிக்கவனாக மாற்ற உதவுவதனால் அனைத்து பள்ளிகளிலும் இம்முறையை செயல்படுத்தலாம்.
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

தேர்வு தேவை
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அமலில் உள்ள சி.சி.இ. மதிப்பீட்டு முறையை மற்ற பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவெடுத்திருப்பது சரியே. ஆனால் இப்போதுள்ளபடி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகளை நிறுத்திவிடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும் 8ஆம் வகுப்பு முடிவில் வருவாய் மாவட்ட அளவிலும் 5ஆம் வகுப்பு முடிவில் கல்வி மாவட்ட அளவிலும் கல்வித்துறை பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு இருப்பதால்தான் மாணவர்கள் படிக்கிறார்கள். இல்லாவிட்டால் படிக்க மாட்டார்கள்.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.

பொருந்தாது
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நகரங்களில் இருப்பவை. அதில் பயிலும் மாணவர்களும் நகரங்களில் வாழ்பவர்கள். கணினி அவர்களுக்கு விளையாட்டுக் கருவி. பெற்றோர்களும் உறவினர்களும் கல்வியில் மேம்பட்டவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் தரமும் சிறப்பானவை. இவற்றையெல்லாம் கிராமப் புறங்களில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எதிர்பார்க்க முடியாது. எனவே சி.சி.இ. எனப்படும் தொடர் மதிப்பீட்டு முறை நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
செ. சத்தியசீலன், கிழவன் ஏரி.

கவலை இல்லை
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மதிப்பீட்டு முறை சரி. மதிப்பீடு செய்யும் பொழுது மாணவ, மாணவியர்கள் செய்யும் சிறு சிறு பிழைகள் அப்போதைக்கு அப்போதே திருத்தப்படுகிறது. எனவே இது ஒரு சிறந்த முறையே. இதனால் இறுதித் தேர்வு நடக்கின்றபோது விழுந்து விழுந்து படிப்பது தவிர்க்கப்படுகிறது. செமஸ்ட்டர் தேர்வுமுறை நடத்தப்படுவதும் இதற்காகத்தான். சில பாடங்களைப் படித்துத் தேர்வு எழுதிவிட்டால் அந்தப் பாடங்களைப் பற்றிய கவலை இல்லை.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.

முழு பதிவேடு
சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வழங்கும் பள்ளி சார்ந்த மதிப்பீட்டு சான்றிதழ் மாணவரின் கல்வித்திறன், செயற்பாடு, விளையாட்டு, உடல்நலம், தனித்த மற்றும் சமூகப் பண்புகள், உயர் குணங்கள், நுண்கலைத்திறன் ஆகியவற்றை தனித்தனியே கண்காணித்து, மதிப்பிடுகின்றது. முதல் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அட்டையுடன் வழங்கப்படும் இச்சான்றிதழ் ஒரு மாணவரைப் பற்றிய முழுமையான பதிவேடாகும். சி.சி.இ. முறையை அதன் நோக்கங்களைப் புரிந்து மிகச்சரியாக பின்பற்றினால், ஒரு மாணவனை செழுமையாக உருவாக்க முடியும்.மதிப்பெண்களுக்கான மாணவரை தயாரிக்காமல் ஆளுமைமிக்க மாணவரை உருவாக்க சி.சி.இ. முறை உதவும்.
டி.எஸ். இராஜேஸ்வரி, தூத்துக்குடி

Wednesday, 2 April 2014

நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

 
            அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சு.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தொடக்கப்பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு நவோதயா பள்ளிக்கூடங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. அதற்கு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
          இந்த எதிர்ப்பின் காரணமாக கர்நாடகாவில் 1,029 பள்ளிக்கூடங்களை மூடும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுபோல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் பணி நியமனம் செய்யக்கூடாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

Wednesday, 26 March 2014

கற்றல் திறனை சோதிக்க தேசிய அளவில் தேர்வு; ஏப்ரல் 10-ல் தொடக்கம்.

கற்றல் திறனை சோதிக்க தேசிய அளவில் தேர்வு; ஏப்ரல் 10-ல் தொடக்கம்.

மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் வகையில், தமிழகத்தில், ஐந்தாம் வகுப்பு மாணர்களுக்குரிய தேசிய அடைவுத்திறன், ஏப்ரல் 10,11, 15,16 ஆகிய தேதிகளில் நடத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் திட்டமிட்டுள்ளது.

பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக, தேசிய அளவில், அடைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், ஐந்தாம் வகுப்பு, மாணவர்கள் கற்றலில், அடைந்த திறன் குறித்து, தமிழ், கணிதம், சூழ்நிலையியல், பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு மாணவர், இரண்டு பாடத்தில் தேர்வெழுத வேண்டும். அதுமட்டுமன்றி, பள்ளி, ஆசிரியர்,மாணவர் விபரங்களையும், அதற்கு என வழங்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 15 மாவட்டங்களில், 275 பள்ளிகளில் இந்த அடைவுத்திறன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், ஏப்ரல் 10,11,15,16 ஆகிய தேதிகளில்,நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Saturday, 22 March 2014

Friday, 21 March 2014

பொது அறிவு-அறிவியல் பிரிவு

பொது அறிவு-அறிவியல் பிரிவு

இந்தியாவின் சொந்த ‘ஜி.பி.எஸ்’ திட்டம்

            அதென்ன ஜி.பி.எஸ் என்று கேட்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா 24 செயற்கைக்கோள்களை வானில் செலுத்தியது.  இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவையே ஜி. பி.எஸ் (Global Positioning System) என குறிப்பிடப்படுகிறது.  மேற்கொண்டு ஜி.பி.எஸ் பற்றி  விளக்க முற்பட்டால் அது நீண்டு கொண்டே போகும். 
                                
                                                  
பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிற அமெரிக்க ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் (சிவந்த புள்ளிகள்)
 இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்காவில் மட்டுமன்றி உலகில் பல நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் போதும். இவற்றின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்வது தான் முக்கியம்.

 தமிழகத்தில் உள்ள ஒரு லாரி நிறுவனத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். எந்த ஒரு நேரத்திலும் இவை இந்தியாவில் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன என்பதை லாரி நிறுவனத் தலைமையகத்தில் ஒரு திரையில் புள்ளிகள் வடிவில் காண முடியும். இதற்கு ஜி.பி. எஸ் செயற்கைக்கோள்கள் உதவும். சென்னை போன்ற ஒரு பெரு நகரில் ஓடுகின்ற பஸ்கள் எந்தெந்த இடத்தில் உள்ளன என்பதையும்  இதே போலக் க்ண்டறிய முடியும்.
                  

காருக்குள் டிரைவர் சீட் எதிரே மேப் காட்டும் திரை
ஹைதராபாத் நகருக்கு ஒருவர் காரில் செல்கிறார். அவரது காரில் ஜி.பி.எஸ் தொடர்பு வசதிகள் உள்ளன. ஹைதராபாத்தின் விரிவான மேப்பைக் காட்டும் சில்லு ஒன்றை அவர் காரில் உள்ள கருவியில் செலுத்துகிறார். அவர் ஹைதராபாத்தில் வழி தெரியாமல்  அலைய வேண்டியதில்லை. காரில் உள்ள திரையில் தெரியும் மேப்பைப் பயன்படுத்தி எந்த இடத்துக்கும்  செல்ல முடியும். பாகப் பிரிவினையா? நிலங்களை சரியாகப் பங்கிட்டளிக்க இந்த செயற்கைக்கோள்கள் உதவும்.

   மலைப் பாதையில் நடந்து செல்கின்ற ஒருவர் வழி தவறிவிட்டால் அவர் தம்மிடமுள்ள்ள ஜி.பி.எஸ் கருவி மூலம் தாம் இருக்கின்ற இடத்தை அறிந்து கொள்ள இயலும். பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் இடுப்பில் ஜி.பி.எஸ் தொடரபுக் கருவியை செருகி விட்டால் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள இயலும். ஒரு நாயின் கழுத்தில் ஜி.பி எஸ் கருவி இருந்தால் அந்த நாய் தொலைந்து போனாலும் கண்டுபிடித்து விடலாம். ஜி.பி எஸ் செயற்கைக்கோள்களுக்கு இப்படி எவ்வளவோ பயன்கள் உள்ளன்.
   .  
  ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்களுக்கு வேறு முக்கியமான பயன்பாடும் உண்டு. போர்க் காலத்தில் எதிரிகளின் நிலைகளைக் குறி பார்த்துத் தாக்கவும் அவை உதவும். சொல்லப் போனால் அமெரிக்க ராணுவம் போர்க் காரியத்துக்காகத் தான் ஜி.பி.எஸ் ஏற்பாட்டை உருவாக்கியது.

இராக் மீது அமெரிக்கா நடத்திய போரின் போது அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இராக் அருகே உள்ள கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு போர்க் கப்பலிலிருந்து செலுத்தப்பட்ட குரூயிஸ் ஏவுகணை ஒன்று இராக்கின் தலைநகரான பாக்தாத் நகரில் இராக்கிய உள்துறைக் கட்டடத்தை மட்டும் குறி பார்த்துத் தாக்கி நிர்மூலம் செய்தது. ஏவுகணைக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்?ஜி.பி.எஸ் செயற்கைக் கோள்கள் இதற்கு உதவின. சரி,அமெரிக்க ஜி.பி.எஸ் செயற்கைக் கோள்களுக்கு எது எந்தக் கட்டடம் என்பது எப்படித் தெரியும்.?                                         
                                          

டம்மி வெடிகுண்டு ஒன்றுக்குள் GPS வழி செலுத்தும் கருவியைப் பொருத்துகிறார்கள்.
  
தேசப் படங்களைக் காட்டும் அட்லஸ் புத்தகத்தில் எந்த ஒரு தேசத்தின் படமாக இருந்தாலும் அதில் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் கோடுகள் போடப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். வடக்கு தெற்காக உள்ளவை தீர்க்க ரேகைகள் (Longitude). கிழக்கு மேற்காக உள்ளவை அட்ச ரேகைகள் (Latitude)

.  . இக்கோடுகள் மேப்புகளில் உள்ளனவே தவிர பூமி மீதுஇப்படிக் கோடுகள் கிடையாது. எனினும் பூமியில் எந்த ஓர்இடத்தையும் துல்லியமாக அறிய  இக்கோடுகள் உதவியாகஉள்ளன.
 காந்தி நகரில் மூன்றாவது பிரதான சாலையும் ஐந்தாவ்து குறுக்குத் தெருவும் சந்திக்கின்ற இடத்தின் முனையில் உள்ள பெட்டிக் கடை என்று அடையாளம் கூறுகிறோம். அட்சரேகையும் தீர்க்க ரேகையும் இப்படித் தான் இந்த இரண்டு ரேகைகளும் (கோடுகள்) சந்திக்கிற ஓர் இடத்தை அவை குறிக்கின்றன.
         

பூமியின் மீதாக அட்ச ரேகைகள் ,மற்றும்  தீர்க்க ரேகைகள்உள்ளதாக நாம் வைத்துக் கொண்டுள்ளோம். பல முக்கியபணிகளுக்கு இவை உதவுகின்றன
  உதாரணமாக தமிழகத்தில் உள்ள  உடுமலைப்பேட்டை 10.36 (வடக்கு) அட்சரேகையும் 77.17 (கிழக்கு) தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. உடுமலைப்பேட்டைக்கு சற்று வடக்கே உள்ள ஒரு கிராமத்தின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் வேறு விதமாக இருக்கும். மிகத் துல்லியமாகக் கணக்கிட்டால் அக்கிராமத்தின் பஜார் தெருவில் உள்ள பாத்திரக்கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் ஒரு விதமாகவும் பாத்திரக் கடைக்கு இரண்டு கடை தள்ளி அமைந்த ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகள் வேறு விதமாகவும் இருக்கும்
.
 அக்கிராமத்தின் மிகத் துல்லியமான மேப்புகள் இருந்தால் பாத்திரக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் ஜவுளிக் கடையின் அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளையும் மிகச் சரியாகக் கண்டறிய முடியும்.

  பூமியைச் சுற்றிச் சுற்றி வருகின்ற விசேஷ வகை செயற்கைக்கோள்கள் மூலம் பூமியின் எந்தப் பகுதியையும் மேலிருந்தபடி படம் பிடித்து மிகத் துல்லியமான மேப்புகளைத் தயாரித்து விட முடியும்.
பாக்தாத் நகரின் மிகத் துல்லியமான மேப்புகள் அமெரிக்காவிடம் இருந்த காரணத்தால் தான் அமெரிக்க குரூயிஸ் ஏவுகணையால் குறிப்பிட்ட கட்டடத்தை மட்டும் தாக்கி அழிக்க முடிந்தது. இப்படியான ஏவுகணைகளின் கம்ப்யூட்டர்களில் மேப்புகள் தகுந்த வடிவில் இடம் பெறும். குறிப்பிட்ட தீர்க்க ரேகையும் குறிப்பிட்ட அட்சரேகையும் சந்திக்கிற இடத்தைத் தாக்கும் வகையில் ஏவுகணையில் ஆணை இடம் பெற்றிருக்கும். அது இடத்தைக் குறி தவறாமல் தாக்குவதற்கு ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஓயாது அனுப்பும் சிக்னல்கள் உதவுகின்றன். இந்த செயற்கைக்கோள்களிலிருந்து வெறும் சிக்னல்களும் துல்லியமான நேரமும் தொடர்ந்து வெளிப்பட்டிருக்கும். இவை தான் பூமியில் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன
                  

இராக் மீதான் போரின் போது அமெரிககப் போர்க் கப்பலிலிருந்து சீறிக் கிளம்பும் குரூயிஸ் ஏவுகணை
 மேலே சொல்லப்பட்ட விவரத்திலிருந்து மிகத் துல்லியமான மேப்புகள் மிகவும் முக்கியமானவை என்பதைப் புரிந்து கொண்டிருக்கலாம். அமெரிககாவிடம் இப்படியான மேப்புகளைத் தயாரிப்பதற்கான செயற்கைக்கோள்கள் உள்ளன என்ப்து குறிப்பிடத்தக்கது.
மேப்புகள் துல்லிய்மாக இல்லாவிடில் பிரச்சினைதான். ஒரு சமயம் கோசாவா போரின் போது அமெரிக்கா செலுத்திய ஏவுகணை தவறுதலாக சீனத் தூத்ரகக் க்ட்டடத்தைத் தாக்கியது. பழைய மேப்பைப் பயன்படுத்தியதால் இப்படி தவறு ஏற்பட்டதாக சீனாவிடம் அமெரிக்க விளக்கம் அளித்ததால் விஷயம் பெரிதாகவில்லை
.
இந்தியாவிடமும் இத்தகைய செயற்கைக்கோள்கள் உள்ளன. இந்தியா 2005 ஆம் ஆண்டில் மேப்புகளைத் தயாரிப்பதற்கென கார்ட்டோசாட்-1 செயற்கைக்கோளை ஏவியது. அதைத் தொடர்ந்து மேலும் இவ்வகையான மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. மேலும் துல்லியமான மேப்புகளைத் தயாரிக்க இந்த ஆண்டில் ஐந்தாவது கார்ட்டோசாட் செலுத்தப்பட இருக்கிறது. இவை உலகில் எந்த ஓர் பகுதியையும் படம் பிடித்து மேப் தயாரிக்க வல்லவை.
                          
                                              
இந்தியாவின் கார்ட்டோசாட் செயற்கைக்கோள். இது பூமியை வடக்கு-தெற்காகச் சுற்றி வந்தபடி படங்களை எடுப்பதாகும்
 இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவின் ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்களின் சிக்னல்களை உலகில் எந்த ஒரு நாடும் பயன்படுத்தலாம். தகுந்த தொடர்புக் கருவிகளைக் கொண்டு இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பயன்பாடுகளை மேற்கொள்ளலாம்
.
ஆனால் ஒன்று. ஜி.பி.எஸ் ஏற்பாடு முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். அமெரிக்கா நினைத்தால் உலகில் குறிப்பிடட பிராந்தியத்தில் சிக்னல்கள் கிடைக்காதபடி செய்ய முடியும். அல்லது தவறான சிக்னல்கள் கிடைக்குமாறு செய்ய முடியும். இராக் போரின் போது அமெரிக்கா இவ்விதம் செய்தது.

 ஆகவே தான் ரஷியா பல செயற்கைக்கோள்களைச் செலுத்தி இப்போது சொந்தமாக ஜி.பி.எஸ் மாதிரியிலான ஏற்பாட்டை செய்து கொண்டுள்ளது. அதன் பெயர் கிளோனாஸ். சீனா,ஜப்பான், ஐரோப்பிய யூனிய்ன் ஆகியவையும் இப்ப்டி சொந்த‘ஜி.பி.எஸ் “ ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவும் இதே போல சொந்த ஏற்பாட்டைச் செய்து கொள்வதில் ஈடுபட்டுள்ளது. அதன் முதல்படியாகத் தான் இதற்கான முதலாவது செயற்கைக்கோள்கடந்த ஆண்டு  ஜூலை முதல் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து  உயரே செலுத்தப்பட்டது. ஆறு மாதங்களுக்குஒன்று வீதம் மொத்தம் ஏழு செயறகைக்கோள்கள் உயரே செலுத்தப்படும். இவை அமெரிக்காவின் ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் போலவே செயல்படும்.

 ஆனால் இதில் முக்கிய வித்தியாசம் உண்டு. அமெரிக்காவின் ஜி.பி.எஸ் ஏற்பாடு உலகம் தழுவியதாகும். ரஷியா, சீனா ஆகியவற்றின் ஜி.பி.எஸ் மாதிரியான ஏற்பாடுகளும் இதே போல உலகம் தழுவியவை.
ஆனால் இந்தியாவின் சொந்த “ஜி.பி.எஸ்” மாதிரியான ஏற்பாடு பிராந்திய அளவிலானது. அதாவது இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாம். தவிர இந்திய எல்லையிலிருந்து சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள பிராந்தியத்தில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். அதன்படி சவூதி அரேபியாவின் ஒரு பகுதி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான்,மேற்காசிய நாடுகள், நேபாளம், மத்திய ஆசிய நாடுகள்,சீனாவின் கணிசமான பகுதி, மியான்மார் மலேசியா, பல தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்
.
     அமெரிக்க ஜி.பி.எஸ் மாதிரியில் இந்தியா மேற்கொண்டுள்ள திட்டமானது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழான ஏழு செயற்கைக்கோள்களும் அமெரிக்க ஜி.பி.எஸ் போலவே  மக்கள் பயன்பாட்டுக்கென ஒரு வித சிக்னல்களை அனுப்பும். தவிர, ராணுவ காரியத்துக்கென வேறு வித சிக்னல்களை அனுப்பும். இந்தியா அந்த வகையில்  எதிரி நாட்டின் ராணுவ இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்குவதற்குத் திறன் பெற்றதாகி விடும்.

   கார்ட்டோசாட் செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா ஏற்கெனவே மிகத் துல்லியமான மேப்புகளைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தியாவிடம் பிரம்மோஸ், நிர்பய் போன்ற திறன் மிக்க குரூஸ் ரக ஏவுகணைகள் உள்ளன்..   ஜி.பி.எஸ் மாதிரியிலான செயற்கைக்கோள்கள் தான் பாக்கியாக இருந்தது. 2016 வாக்கில் இந்த ஏழு செயற்கைக்கோள்களும் செயல்படத் தொடங்கியதும் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான திறனைப் பெற்றதாகி விடும்.

  மக்களுக்கான பயனபாட்டைப் பொருத்தவரையில் இந்தியா மேற்படி ஏழு செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ளும் வசதி படைத்த தகுந்த கருவிகளை விரைவில் உருவாக்கும்.. அப்போது பொது மக்கள், லாரி உரிமையாளர்கள், பஸ் நிறுவனங்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆகியோர் பலன் பெறுவர்
  .
 எதிரி நாட்டுடன் ஒரு போர் மூண்டால் இந்தியாவின் இந்த் ஏழு செயற்கைக்கோள்களும் எதிரியின் முதுகெலும்பை முறிப்பதில் முக்கிய பங்காற்றும்.  அதே நேரத்தில் இவைமக்களின் பல்வேறு உபயோகங்களுக்கென புரட்சிகரமான புதியதொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துபவையாகவும் இருக்கும்.அந்த வகையில் இந்தியாவின் இத்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூல் - சி.பி.எஸ் .சி பள்ளிகள்

முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூல் - சி.பி.எஸ் .சி பள்ளிகள்

           தமிழகம் முழுவதும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ்இயங்கி வரும் பள்ளிகளில், 2014 - 15ம் ஆண்டு மாணவர் சேர்க்கை, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
 
         முன்னணி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், முதல் வகுப்பிற்கு, 1.25 லட்சம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தடுக்க வேண்டிய, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளும், கட்டண நிர்ணய குழு அலுவலர்களும், வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை:

          தமிழகத்தில், 450 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும்,வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது. 'ஏப்ரல், மே மாதங்களில் தான், மாணவர் சேர்க்கை பணிகளை செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளபோதும், அதைப்பற்றி கவலைப்படாமல், மாணவர் சேர்க்கை நடக்கிறது. சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள, பெரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு கட்டணமாக, 1.25 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இதற்கு அடுத்த நிலையில் உள்ள பள்ளிகளில், 80 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பல பள்ளிகளில், உரிய ரசீது கொடுக்காமல், துண்டு சீட்டில், கட்டண விவரங்களை எழுதிகொடுத்து, பணத்தை கட்ட சொல்கின்றனர். ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு கூட, புத்தக கட்டணமாக, 16 ஆயிரம் ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. 'சிறிய வகுப்பிற்கு, இவ்வளவு கட்டணமா?'என, பெற்றோர், வாய் பிளக்கின்றனர். ஆனாலும், வேறு வழியில்லாமல், புலம்பியபடி, கட்டணங்களை செலுத்துகின்றனர்.

நியாயமான கட்டணங்கள்:

           சி.பி.எஸ்.இ., பள்ளிகளின், இந்த வசூல் வேட்டையைத் தடுக்க, சென்னையில் உள்ள, சி.பி.எஸ்.இ., தென் மண்டல அதிகாரிகளோ அல்லது, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவோ, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின், அதிக வசூல் வேட்டையை தடுத்து நிறுத்தவும், நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்கவும்,கட்டண நிர்ணய குழுவிற்கு, அதிகாரம் உள்ளது.இக்குழு, ஏற்கனவே பல, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, கல்வி கட்டணங்களை நிர்ணயித்து உள்ளது. அதிக கட்டணம் வசூல் தொடர்பாக, பெற்றோரிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில், கடந்த காலங்களில் விசாரணை நடத்தி, 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான கட்டணங்களை, பெற்றோருக்கு, திருப்பித் தர நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், குறிப்பிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள், கண்டும், காணாமல் உள்ளனர்.கட்டண நிர்ணய குழு அலுவலக வட்டாரம் கூறுகையில், 'முன்கூட்டியே, மாணவர் சேர்க்கைநடப்பதை, எங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அதை, அரசு தான் செய்ய வேண்டும். ஆனால், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து, பெற்றோர், ஆதாரங்களுடன், எங்களிடம் புகார் தரலாம். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்' என, தெரிவித்தது.சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம், கட்டண நிர்ணய குழுவிற்கு இல்லை என, தெரிவித்து, சிலர், சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் இருந்தாலும், கட்டண நிர்ணய காலம் முடிந்த, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, 2016ம் கல்வி ஆண்டு வரை, புதிய கட்டணம் நிர்ணயித்து, குழு அறிவித்து உள்ளது.

புகார் அளிக்கலாம்:

            சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, பெற்றோர், புகார் அளிக்க வேண்டிய அலுவலகங்கள்:

1. நீதிபதி சிங்காரவேலு, தலைவர், தனியார்பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு, டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6.
2. சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அலுவலகம், எண்: 3, பழைய எண்: 1630, 16வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு, சென்னை - 40, தொலைபேசி: 044-2616 2213,14, பேக்ஸ்: 044-2616 2212

Wednesday, 19 March 2014

எப்படிக் கற்பது ஆங்கிலம்?

எப்படிக் கற்பது ஆங்கிலம்?


ஆங்கிலத்தின் தேவையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் புதிதாக எழுதத் தேவையில்லை. ஆங்கிலம் இன்று நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார, கலாச்சார அடையாளம். இந்த நிலை இக்கால உலகப் பொருளாதார அமைப்பின் விளைவு. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் மொழி. அதைக் கற்க வேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், அதை எப்படிக் கற்க / கற்பிக்க வேண்டும்?
நடக்கப் படி… பின் ஓடப் படி!
மொழி இல்லாமல் கல்வி பெற முடியாது; அறிவு பெற முடியாது. அனுபவத்தின் மூலம் அறிவு பெறவும் மொழி தேவை. இந்த மொழி, தெரிந்த மொழியாக இருந்தால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த முடியும். தெரியாத மொழியில், தெரியாத அறிவைப் பெற விரும்புவது கண்ணைக் கட்டிக்கொண்டு நடக்கப் பழகுவது போன்றது. ‘‘வீட்டில் பயின்ற தாய்மொழியின் மூலம் பள்ளியில் கல்வி கற்பதே முறையானது’’ என்று கல்வியாளர்கள் சொல்வதற்கு இந்த இயற்கை விதி ஒரு காரணம். ஆங்கிலத்தின் மூலம் கல்வி பெற வேண்டும் என்றால், முதலில் ஆங்கிலத்தை மொழியாகப் படியுங்கள் என்று அவர்கள் சொல்வதற்கும் இது ஒரு காரணம். முதல் மொழியை முறையாகச் சில ஆண்டுகள் படித்துப் பெறும் மொழியின் பயன்பாட்டுத் திறன்களை இரண்டாவது மொழிக்கு மாற்றம் செய்யலாம். நடக்கப் படித்த பின் ஓடப் படிப்பது எளிது.
ஆனால், இன்று இந்தியாவில் கல்விக்கொள்கை இந்த இயற்கை விதியைத் தலைகீழாகப் பிடிக்கிறது. மொழிவழிக் கல்வி என்பதற்குப் பதில் கல்விவழி மொழி என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அதாவது, பாடங்களைப் படிப்பதன் மூலம் மொழியைப் படிப்போம் என்று சொல்கிறது. இதன் விளைவு, கல்வி என்பதே ஆங்கிலத்தைப் படிப்பதற்காகத்தான் என்னும் நிலை.
இதனால், இரண்டு, மூன்று தலைமுறைகளாக ஆங்கிலம் படித்த குடும்பங்களைத் தவிர, மற்ற குடும்பத்துப் பிள்ளைகள் கல்வியையும் சரியாகப் பெறுவதில்லை; ஆங்கிலத்தையும் நன்றாக அறிந்துகொள்வதில்லை. கல்விக்கும் மொழிக்கும் உள்ள
உறவைத் தலைகீழாகப் பார்க்கும் எண்ணத்தோடு ஒரு வகையில் தொடர்புடையதுதான் ‘தமிழ்வழிக் கல்வி என்பது தமிழை வளர்ப்பதற்காக' என்ற கருத்தும். தமிழின் வளர்ச்சி இக்கல்வியின் விளைவாக நிகழலாம்; அதுவே, இதன் நோக்கமாக அமையக் கூடாது. தமிழ்வழிக் கல்வியின் நோக்கம் தரமுள்ள கல்வியைத் தருவது. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.
நடைமுறை எது?
அரைகுறை ஆங்கிலம் இல்லாவிட்டால் தரமான கல்வியறிவும்கூட சந்தையில் விலைபோகாது என்பது நடைமுறை உண்மை. இது, ஆங்கிலத்தை ஒரு மொழியாக, அதில் நல்ல திறன் பெறும் அளவுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்னும் கொள்கையை முன்னிறுத்துகிறது. இது முடியும்.
சீன மொழியை நன்றாகக் கற்க விரும்பும் ஒருவர், எல்லாப் பாடங்களையும் சீன மொழியின் மூலம் படிப்பதால் அந்த மொழியைக் கற்பேன் என்று சொல்வதில்லை. தமிழிலும் ஆங்கிலத்திலும் திறன்படப் பேசவும் எழுதவும் வல்ல அண்ணா, ராஜாஜி போன்ற பழைய தலைமுறையினர் பலர் பள்ளிக்கல்வியைத் தமிழ் மூலமே பெற்றவர்கள்; ஆங்கிலத்தை மொழியாகக் கற்றவர்கள். பழைய தலைமுறை விஞ்ஞானிகளும் அப்படியே.
கல்வியியலில் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்படும் ஒரு ஆராய்ச்சி முடிவு, தாய்மொழியின் வழி முதல்நிலைக் கல்வி பெறுவது தன்னிச்சையாகவும் புதுவழியில் சிந்திப்பதற்கும் ஏற்றது என்பது; தன்னைப் பற்றியும் தன் மொழியைப் பற்றியும் வரும் கழிவிரக்கத்தைத் தவிர்க்கும் ஒன்று என்பது. இக்கல்வி மனவளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் அடிப்படை. சமூகம், மனிதன் தொடர்பான ஆய்வில் பல ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகள் அபூர்வம். ஆகவே, இந்த முடிவு முக்கியமான ஒன்று.
காற்று வீசும் திசையில்…
இருப்பினும், இன்றைய தமிழ்நாட்டில் பொதுமக்களில் - கற்றவர்களும் கல்லாதவர்களும் - பெரும்பான்மையினர் இதை ஏற்றுக்கொள்வதில்லை. கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் தங்கள் பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், பொருளாதார உலகம் வேறுவகையில் நடப்பதே. இதை மக்களால் மாற்ற முடியாததால், காற்று வீசும் திசையிலேயே தங்கள் வாழ்க்கை வண்டியை ஓட்டுகிறார்கள்.
நிரூபணமான ஆய்வு உண்மைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் போக்கில் போவது புதிது அல்ல. புகைபிடிப்பதால் புற்றுநோய் வரலாம் என்பது நிரூபணமான விஷயம் என்றாலும், வேறு காரணங்களுக்காகப் புகைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களால் லாபம் பெறுவதற்காக சிகரெட் தயாரித்து விற்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. கல்வி வியாபாரிகளும் ஆங்கிலவழிக் கல்வி தரும் பள்ளிகளை இதே காரணத்துக்காக நடத்துகிறார்கள்.
மக்கள் விரும்புவதைத் தருவது
மக்கள் விரும்புவதைத் தருவதுதான் இன்றைய அரசியல். இது, சந்தை வியாபாரத்தைப் போல. இலவசப் பொருள்கள் தருவதிலிருந்து ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளைத் தருவதுவரை இதுதான். குறைந்த விலைக்கு உயர்ந்த கல்வி என்பது சமாதானப்படுத்திக்கொள்ளும் குரல். மக்கள் தங்கள் வாக்குகளைக் கொடுத்து இந்தக் கல்வியை வாங்குகிறார்கள். பின், தங்கள் சக்திக்கு மீறிச் செலவும் செய்கிறார்கள்.
கொடுக்கும் விலை
ஆங்கில அறிவு காலத்தின் கட்டாயம் என்பது கல்வியாளர்களும் பொதுமக்களும் உணரும் ஒன்று. இந்த அறிவை உயர்ந்த முறையில் எப்படிப் பெறுவது என்பதில்தான் கருத்து வேறுபாடு. ஆங்கிலத்தை முதல் வகுப்பிலிருந்து எல்லாப் பாடங்களிலும் படிப்பதே ஆங்கில அறிவு பெற வழி என்பது பரவலாக இருக்கும் கருத்து. அதாவது, அதிகக் காலமும் அதிகச் சூழ்நிலைகளிலும் இரண்டாவது மொழியைக் கற்க வேண்டும் என்ற கொள்கை. இது எல்லோருக்கும் பொருந்தும் உண்மை அல்ல. உண்மையாக இருந்தாலும், இதற்குக் கொடுக்கும் விலையை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மனப்பாடம் செய்வதே கற்பது என்று நம்புவது, மொழியிலும் பாடத்திலும் திறன் குறைவது, ஆங்கிலத்தில் இருந்தால் அபத்தமும் சரியாகத் தோன்றுவது முதலியனவும் நாம் கொடுக்கும் விலையில் அடங்கும்.
ஒரு மொழியாகக் கற்று ஆங்கிலத்தில் நல்ல திறன் பெற முடியும் என்றும், தமிழில் முதலில் பெறும் மொழியின் பொதுத்திறன்களை ஆங்கிலத்துக்கு மாற்ற முடியும் என்றும் செய்துகாட்டினால், மொழிக்கல்வி பற்றிய தங்கள் தவறான, ஆதாரம் இல்லாத எண்ணத்தை மக்கள்
மாற்றிக்கொள்ளலாம். இதைச் செய்துகாட்டும் பள்ளிகளை அரசும் லாபநோக்கற்ற தனியார் நிறுவனங்களும் நடத்திக்காட்ட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தையும் தமிழையும் கற்றுக்கொடுக்கும் முறையில் அடிப்படையான மாற்றங்கள் செய்ய வேண்டும். மக்கள் எண்ணத்தில் இதன் பலன் பிரதிபலிக்க ஒரு தலைமுறை ஆகலாம் என்பதால், இந்த விஷயத்தில் நமக்குப் பொறுமையும் தேவை!
இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர்.

போராட்டத்தால் சம்பளம் பிடித்தம் ஆசிரியர்கள் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும்

Monday, 10 March 2014

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - நாகப்பட்டினம் மாவட்டம்





--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை


--
பார்வை :www.testfnagai.blogspot.com

www.facebook.com/nagai.koottani
அன்புடன்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நாகப்பட்டினம் மாவட்டக்கிளை

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா

RTI - Letter

          த.அ.உ.சட்டம் - 2005 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா? அரசுக் கடிதம்