Thursday, 30 November 2023

ARIVOM கடுகு ரகசியமும்... ஏவுகணையும்...!

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்



IMG_20231129_110344_wm

நாம் பயன்படுத்தும் கடுகுக்குள் சற்று ஈரப்பதம் இருக்கும். எண்ணெயில் கடுகை இட்டுத் தாளிக்கும்போது, கடுகு சூடேறி அதற்குள் இருக்கும் நீர் ஆவியாகும்.கடுகின் தோலை பிய்த்துக்கொண்டு நீராவி வெளியே வருவதால் கடுகு வெடிக்கிறது. 


நமக்கு கேட்கும் `பட்... பட்...' என்கிற சத்தமும்கூட, ஆவியாகி வெளியே வரும் நீர், எண்ணெயில் படுவதால்தான் உருவாகிறது. சூடான எண்ணெயில் நீர்த்துளிகள் படும்போது சத்தம் வரும் அல்லவா, அதுபோலத்தான்.ஆனால், எல்லா கடுகும் பாத்திரத்தைவிட்டு வெளிநடப்பு செய்வதில்லை. ஒன்றிரண்டு கடுகுகள் வெடித்தாலும், அவை பாதியாக பிய்ந்து போவதில்லை. உருண்டையாகத்தான் இருக்கின்றன. ஆக, கடுகுக்குள் இருந்த நீராவி வெளியே வரும்போது, கடுகை மொத்தமாகச் சிதைத்து விடுவதில்லை. ஒரு சிறு துவாரத்தை இட்டுக்கொண்டு நீராவி வெளியேறுகிறது.எனவே, எந்த கடுகு எவ்வளவு பெரிய துவாரம் இட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே கடுகு வெளியேறித் தப்பிக்குமா, இல்லை நம் உணவுத் தட்டுக்கு வருமா? என்பது முடிவாகிறது.கடுகில் ஏற்படும் துவாரம் சற்றுப் பெரிதாக இருந்தால், விரைவில் நீராவி வெளியேறிவிடும், கடுகால் பறக்க முடியாது. ஆனால், நுண்ணிய துவாரமாக இருந்தால், நீராவி சிறிது சிறிதாக வெளியேறும்.


 அப்படி வெளியேறும் நீராவியால் தனக்கு கிடைக்கும் உந்துவிசை மூலம் முன்னேறி கடுகு மேலே பறக்கும். கடுகுக்குள் இருக்கும் நீராவி முழுவதும் வெளியேறிவிட்டால், கடுகுக்கு மேற்கொண்டு உந்துவிசை கிடைக்காது. அப்போது கடுகு கீழே விழுந்துவிடும். இவ்வளவு சாகசம் செய்யும் ஒரு கடுகின் எடை மிக மிக குறைவானதுதான்.சின்னச்சிறு கடுகுக்கும், வானைத் தொடும் ஏவுகணைக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஓர் ஏவுகணை மேலே செல்ல வேண்டுமென்றால், எரிபொருள் தேவை. ஏவுகணை ஏவப்படும்போது எரிபொருள் எரிக்கப்படும். அப்போது வெளியாகும் வாயுக்களால் அழுத்தம் உண்டாகி, அதன்மூலம் கிடைக்கும் உந்துவிசையை பயன்படுத்தி ஏவுகணை முன்னேறிப் போகிறது. 


ஆக, சூடான எண்ணெயில் பட்டதும் வெடித்துப் பறக்கும் கடுகும், ஏவுகணையும் ஒரே வகையைச் சேர்ந்தவைதாம். இதுதான் கடுகுக்குள் உள்ளே இருக்கும் ரகசியம். இன்னும் சொல்வதென்றால் குட்டிக் குட்டி உருண்டை வடிவ ஏவுகணைகளைத்தான் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், என்று கடுகை நினைத்து பெருமிதமும் கொள்ளலாம்.

No comments:

Post a Comment