Saturday, 6 February 2016

மாநிலத்தின் கல்வித்தரம் வேதனை அளிக்கிறது !

மாநிலத்தின் கல்வித்தரம் வேதனை அளிக்கிறது !




மாநில அரசின் பாடத்திட்டம் மோசமாக உள்ளதாக மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் கூறியுள்ளது வேதனை அளிக்கிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் கல்வித்துறையில் நல்ல பல ஆலோசனைகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், சமீபத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கல்வித்துறை குறித்து மிகப்பெரிய ஆய்வை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளதென்றும், தேர்ச்சி விகிதத்தில் இந்திய சராசரியைவிட தமிழ்நாட்டின் சராசரி மிகமிக குறைவாக உள்ளதென்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும், தமிழக மாணவ, மாணவியர்கள் ஆங்கில பாடத்தில் 2 சதவீதமும், கணித பாடத்தில் 4 சதவீதமும், அறிவியல் பாடத்தில் 2 சதவீதமும், சமூக அறிவியலில் 4 சதவீதமும்என மிகமிக குறைந்த எண்ணிக்கையிலேயே சரியான விடையை அளிக்கிறார்கள் எனவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழில் பிழை இல்லாமல் வார்த்தைகளை எழுதுவதற்கு தெரியவில்லை என்றும், ஆங்கில எழுத்துக்களையே எழுத தெரியவில்லை என்றும் கல்வியாளர்கள் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.மேலும் இந்த ஆய்வு அறிக்கையில் தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பாடதிட்டங்களில் பள்ளிக்கல்வித்தரம் சிறப்பாக உள்ளதென்றும், மாநில அரசின் பாடதிட்டம்தான் மிகவும் மோசமாக உள்ளதென்று கூறியுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.தமிழகத்தில் தற்போதுள்ள பாடத்திட்ட முறைகளே தொடர்ந்தால், தமிழக மாணவ, மாணவியரின் முழுத்திறமையும் வெளிப்படாது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தான் ஆட்சிக்கு வந்த பிறகு 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி சதவீதம் அதிகம் என புள்ளிவிவரங்கள் அளிப்பதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி, அரசியல் காழ்புணர்ச்சியின்றி, சிறந்த கல்வியாளர்களும், சமூக சேவகர்களையும் கொண்ட குழுவை அமைத்து, அவர்கள் மூலம் உலக தரத்திற்கு இணையாகவும், தேசிய கல்வி திட்டத்திற்கு இணையாகவும் பாடங்களை உருவாக்கி, வருங்கால சந்ததிகளான இளைய சமுதாயத்தை அறிவுத்திறன் மிக்கவர்களாக உருவாக்க தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment