Monday, 2 March 2015

கையில் எழுதிப் பழகாவிட்டால் கற்கும் திறன் பாதிக்கப்படும்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்கையில் எழுதிப் பழகாவிட்டால் கற்கும் திறன் பாதிக்கப்படும்
கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித் துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்புணர்த்தியுள்ளது.
உலக அளவில் குழந்தைகள் பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் போக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக, தற்கால குழந்தைகள் கணினிகளின் விசைப்பலகைகளை பயன்படுத்தியும் டேப்லட்டுகளின் தொடுதிரை கணினிகளில் விரல்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் போக்கு அதிகரித்துவருகிறது.
இதன் காரணமாக அவர்களின் (மூளை) வளர்ச்சியும் படைப்புத்திறனும் பாதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு பாதிக்கப்படும் என்று பதில் கூறியிருக்கிறது இந்த புதிய ஆய்வின் முடிவு. குழந்தைகள் கைகளால் எழுதிக் கற்கும் நடைமுறை அவர்களின் மூளை வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை விளக்கும்படி பிபிசியின் சார்பில் மூளை வளர்ச்சி தொடர்பான நரம்பியல் நிபுணர் கரின் ஜேம்ஸிடம் கேட்கப்பட்டது.
கையெழுத்தும், கணினிவிசைப்பலகையும்
இந்த கேள்விக்குப் பதில் சொல்வதற்காக அமெரிக்காவில் இருக்கும் ப்ளூமிங்க்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜேம்ஸ் இதுவரை படிக்கத்துவங்காத குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டார்.
இந்த குழந்தைகளால் எழுத்துக்களை அடையாளம் காண முடியும் என்றாலும், அந்த எழுத்துக்களைக் கூட்டி வார்த்தை யாக உருவாக்க அவர்கள் பழகியிருக்கவில்லை.
இந்த குழந்தைகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு குழந்தைகளுக்கு இந்த எழுத்துக்களை கைகளால் எழுத பயிற்சியளிக்கப்பட்டது. மற்ற பிரிவு குழந்தைகளுக்கு கணினியின் விசைப்பலகைகள் மூலம் எழுத்துக்களை தட்டச்சு செய்யப் பழக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக இந்த குழந்தைகள் எந்த அளவுக்கு எழுத்துக்களை கற்றிருக்கிறார்கள் என்று பரிசோதிக்கப்பட்டது. இந்த குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டை கண்காணித்து பதிவு செய்யக்கூடிய மின்காந்த எதிர்வினை படப்பிடிப்பு தொழில்நுட்பமும் இந்த பரிசோதனைகளின்போது பயன் படுத்தப்பட்டது.
இதன்மூலம் குறிப்பிட்ட எழுத்துக்களை குழந்தைகள் கற்றுத் தேரும்போது அவர்களின் மூளையில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த பரிசோதனைப் பயிற்சிக்கு முன்பும், பயிற்சி முடிந்த பின்புமாக இந்த குழந்தைகளின் மூளைகள் ஸ்கேன் மூலம் படம்பிடிக்கப்பட்டன. இந்த இரண்டு குழு குழந்தைகளின் மூளைகளும் தமது செயற்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் அளவும் இதன் மூலம் கணிக்கப்பட்டது.
படிக்கும் ஆற்றலுக்கும் கையெழுத்துக்கும் தொடர்பு
குழந்தைகள் கைகளைக் கொண்டு ஒரு எழுத்தை எழுதும்போதும், கணினியின் விசைப்பலகையை பயன்படுத்தி தட்டச்சு செய்யும்போதும் மூளை வெவ்வேறாக எதிர்வினை யாற்றுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கைகளால் எழுதும் குழந்தைகளின் மூளைச் செயல்பாடானது, நன்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் மூளையின் செயல் பாட்டை ஒத்திருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டின.
ஆனால் கணினியின் விசைப்பலகையைப் பயன்படுத்தி எழுத்துக்களை தட்டச்சு செய்த குழந்தைகளின் மூளைச் செயல்பாடு அப்படி இருக்கவில்லை. குழந்தைகள் தங்களின் கைகளால் எழுதும்போது, அவர்களின் மூளைகள் அந்தச் செயலுடன் ஒத்திசைந்து எதிர்வினையாற்றுகிறது.
இதன் மூலம் குழந்தைகளின் கையால் எழுதும் பழக்கத்துக்கும், படிக்கும் பழக்கத்துக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனைகளில் எடுக்கப்பட்ட மூளைச் செயற் பாட்டின் படங்கள், குழந்தைகள் கைகளால் எழுதும்போது அவர்களின் படிக்கும் பழக்கம் கூர்மைப்படுவதைக் காட்டுகிறது. எனவே தொடர்ந்து அவர்கள் கைகளால் எழுதும்போது அவர்களின் படிக்கும் திறனும் தொடர்ந்து கூர்மைப்படுகிறது என்கிறார் ஜேம்ஸ்.
அத்துடன், கைகளால் எழுதுவதற்குத் தேவையான நேர்த்தியை குழந்தைகள் வளர்த்துக் கொள்ளும்போது, அதனால் அவர்களின் நரம்பு மண்டலச் செயற்பாடு மேம்படுவதாகவும், அதன் பயனாக அவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சியும் பல வகைகளில் அதிகரிப்பதாகவும் பேராசிரியர் ஜேம்ஸ் தெரிவித்தார்.
பள்ளிகளில் கணினிகளா?
இந்த ஆய்வின் முடிவுகள் உலக அளவில் கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையக்கூடும்.
உலகின் சில பகுதிகளில் மழலையர் பள்ளிகள் மட்டத்திலேயே கூடுதலாக கணினிகளை அறிமுகம் செய்யவேண்டும் என்கிற அவசரம் காட்டப்படுவதாகவும், இந்த ஆய்வின் முடிவுகள் அதை தாமதப்படுத்தக்கூடும் என்றும் பேராசிரியர் ஜேம்ஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

No comments:

Post a Comment