தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
எப்போது கிடைக்கும் அனைவருக்கும் எழுத்தறிவு?
நாம் 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது 12 % பேர்தான் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் கைநாட்டுதான்.
‘‘(மனுசன்) சந்திரன் மேல கால வைச்ச காலம்
நீ கைநாட்டு வைக்கிறது அலங்கோலம்.”
இந்தப் பாடலை 1990-களில் நீங்கள் தமிழகத்தின் கிராமங்களில் கேட்டிருக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்கள் உருவாக்கிய இலக்கியம் அது.
இந்நிலை மெல்ல மாறியது. எழுத்தறிவு பெற்ற இந்தியர்கள் 74 % பேர் என 2011- மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிவித்துள்ளது. இது தற்போது உலக அளவில் மனிதர்களிடம் உள்ள எழுத்தறிவின் சராசரியைவிட 10 % குறைவு. இன்றைய உலகில் இந்தியாவில்தான் எழுத்தறிவு பெறாதவர்கள் அதிகம் உள்ளனர். யாரெல்லாம் படிக்காதவர்கள் என்று பார்த்தால், சமூகத்தின் சாதி அடுக்குகளில் மேலிருந்து கீழே போகப் போக எழுத்தறிவு குறைகிறது. ஆண்களைவிடப் பெண்களிடம் எழுத்தறிவு குறைகிறது என மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லோருக்கும் கல்வி
இந்தியர்கள் எல்லோரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற விவாதமும் திட்டமும் 1944-ல் எழுந்தன. அதை நிறைவேற்ற ‘சார்ஜெண்ட் திட்டம்’ என்ற ஒன்று உருவானது. அதில் 1984-க்குள் மொத்த இந்தியாவையும் படிக்க வைத்துவிடலாம் என்ற கருத்து இருந்தது. “40 ஆண்டுக் காலம் மிகவும் அதிகம். அதற்குள்ளாகவே எல்லோரை யும் படிக்க வைக்க முடியும்” என சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் ஆங்கிலேய அரசை அப்போது விமர்சித்ததாகத் தகவல்கள் உள்ளன.
அதற்கு மூன்றாண்டுகள் கழித்துச் சுதந்திரம் கிடைத்து விட்டது. அதன் பிறகு, எத்தனையோ ஆண்டுகளும் கழிந்துவிட்டன. மாற்றம் வராததால் 2010-ல் ‘இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்’ வர வேண்டிய கட்டாயம் வந்தது. 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் தற்போது இந்தியாவில் 23 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். இத்தகைய குழந்தைகள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். அவர்களுக்கு இலவச ஆரம்ப கல்வியைத் தர வேண்டும் என்கிறது அந்தச் சட்டம்.
2013-க்குள் அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் இருக்க வேண்டும் என அதில் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. சட்டத்தை நிறைவேற்ற ‘சர்வ சிக்ஷ அபியான்’ (அனைவருக்கும் கல்வி இயக்கம்) எனும் தனித்திட்டமும் உருவாக்கப்பட்டது.
தேவை ஆசிரியர்
பணியில் உள்ள ஆசிரியர்களின் கல்வித் தகுதியை உயர்த்துவது, பணிக்குத் தேர்வு செய்கிற ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்துவது, 2015-க்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தகுதி பெற்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அந்தச் சட்டம் கூறுகிறது. ஆனால், ஆசிரியர் பயிற்சிக்கான படிப்புகள் எல்லாம் 90 % தனியார் நிறுவனங்களில் இருக்கின்றன.
தகுதியான ஆசிரியரை உருவாக்கும் பணியில் அரசின் நேரடிப் பொறுப்பு இல்லாத நிலையில், உலகத்தரமான கல்வியை எப்படி இந்தியக் குழந்தைகளுக்குத் தர முடியும் என்கிறார்கள் கல்வியை வியாபாரம் ஆக்குவதை எதிர்க்கும் செயல்பாட்டாளர்கள். இந்தியாவின் 8.3 % ஆரம்பப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். 2012-ல் 19 லட்சத்து 80 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கச் சொன்னது சட்டம். ஆனால், 14 லட்சம் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டனர். இதுவும் போதாது, இன்னமும் 9 லட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்கின்றனர் கல்வியாளர்கள்.
கல்விச் சந்தை
எல்லாக் குழந்தைகளும் பள்ளியில் சேர்வதை உத்தரவாதப்படுத்துவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி வருடந்தோறும் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் ஆரம்பித்து, பள்ளிகள், வட்டாரம், மாவட்டம், மாநிலம் வழியாக,தேசிய மட்டத்துக்குச் சென்று முடிவாகிச் செயல்பட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், இன்னமும் மாவட்ட அளவில் உள்ள விவரங்களை வைத்து அங்கிருந்தே திட்ட ஆலோசனைகள் தொடங்கப்படுகின்றன.
மொத்தத்தில், எல்லோருக்கும் கல்வி அளிப்பதற்காக அறிவிக்கப்பட்ட சட்டமும் அதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டமும் தயங்கித் தயங்கித் தேங்கி நிற்கின்றன. இந்த நிலையால், மக்களிடையே தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தப் போக்கை நல்ல வியாபார வாய்ப்பாகக் கருதுகிற நிலையும் வளர்ந்துள்ளது. ‘சி.எல்.எஸ்.ஏ. ஆசியா - பசிபிக் மார்க்கெட்’ எனும் பத்திரிகை 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு சந்தையாக இந்தியாவின் கல்விச் சூழலை மதிப்பிட்டுள்ளது.
ஆறு பந்தில் 50 ரன்கள்
கல்வித் துறையின் பொருளாதாரம் என்று பார்க்கும்போது இயல்பாகவே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையின் மீது கவனம் திரும்புகிறது. “நாடு முன்னேற வலுவான அரசுப் பள்ளிகளும் கல்விமுறையும் வேண்டும். ஆனால், தனியாரிடம் கல்வியை மெல்ல ஒப்படைக்கிற பணியையே இந்த பட்ஜெட்டும் செய்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரானது” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“அடிப்படையான கல்வியில் மாற்றம் இல்லாமல் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’(மேக் இன் இந்தியா) திட்டமோ, ‘தேசியத் திறன் வளர்ச்சி’(ஸ்கில் மிஷன்) இயக்கமோ வெற்றி பெறாது. இந்தியா உலக அளவில் போட்டி போடுவதற்குத் தற்போதைய உடனடித் தேவை திறன்மிக்க உழைப்பு. அதை உருவாக்க நமக்குத் தேவை தரமான கல்வி. ஆறு பந்துகளில் 50 ரன்கள் எடுக்கிற மாதிரியான நெருக்கடியில் நாடு இருக்கிறது” என்கிறார் மனிதவள ஆலோசகரான டாக்டர் டி.கார்த்திகேயன்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கான நிதி ஒதுக்கீடு, அவற்றின் செயல்திட்டம் உள்ளிட்டவற்றில் போதுமான அளவுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை. மாவட்ட அளவிலான நிர்வாகத்துக்கு ஆண்டின் கடைசியில்தான் நிதி வந்து சேருகிறது. அதற்கு அரசாங்கங்கள் சரியான காரணங்களைச் சொல்வதில்லை. இப்போது வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டிலும் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதற்கான முன்முயற்சி போதுமான அளவுக்கு இல்லை. 1966-ல் கோத்தாரி கமிஷன் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6%-ஐ கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்றது. ஆனால் 4.2% தான் இன்னமும் ஒதுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 6% தேவை. தேவையானால் அதற்கு மேலும் ஒதுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறது பட்ஜெட் மற்றும் ஆளுகையின் கடமைப் பொறுப்புணர்ச்சிக்கான மையம் எனும் அமைப்பு.
அரசாங்கம் அறிவித்துள்ள கட்டாய இலவச ஆரம்பக் கல்வியை ஏன் 6 வயது முதல் தொடங்க வேண்டும் என்ற கேள்வியையும் கல்விசார் தொண்டு அமைப்புகள் எழுப்புகின்றன. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் முன்பருவக் கல்வியையும் அதில் இணைக்க வேண்டும். பக்கத்து நாடான இலங்கையில் இருப்பதுபோல ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கட்டாய இலவசக் கல்வியை நம்மால் தர முடியாதா என்கின்றன கல்வி உரிமைக்காகப் போராடும் அமைப்புகள்.
தமிழகத்தின் பெருமை
தமிழகத்தில் 80 % பேர் எழுதப் படிக்கக் கற்றுவிட்டனர். பெண்கள், தலித்துகள், பழங்குடிகள் ஆகியோரிடையே படிக்காதவர்களின் சதவீதம் இந்தச் சராசரியைவிடக் குறைவாக இருந்தாலும், இந்த 80 % என்பது இந்தியாவின் சராசரியைவிட அதிகம்தான். இருந்தாலும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கின்றனர்.
இந்தியாவில் எப்போது கிடைக்கும் அனைவருக்கும் எழுத்தறிவு?
No comments:
Post a Comment