Monday, 9 March 2015

எப்போது கிடைக்கும் அனைவருக்கும் எழுத்தறிவு?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

எப்போது கிடைக்கும் அனைவருக்கும் எழுத்தறிவு?

நாம் 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது 12 % பேர்தான் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் கைநாட்டுதான்.
‘‘(மனுசன்) சந்திரன் மேல கால வைச்ச காலம்
நீ கைநாட்டு வைக்கிறது அலங்கோலம்.”
இந்தப் பாடலை 1990-களில் நீங்கள் தமிழகத்தின் கிராமங்களில் கேட்டிருக்கலாம். எழுதப் படிக்கத் தெரியாத மனிதர்கள் உருவாக்கிய இலக்கியம் அது.
இந்நிலை மெல்ல மாறியது. எழுத்தறிவு பெற்ற இந்தியர்கள் 74 % பேர் என 2011- மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிவித்துள்ளது. இது தற்போது உலக அளவில் மனிதர்களிடம் உள்ள எழுத்தறிவின் சராசரியைவிட 10 % குறைவு. இன்றைய உலகில் இந்தியாவில்தான் எழுத்தறிவு பெறாதவர்கள் அதிகம் உள்ளனர். யாரெல்லாம் படிக்காதவர்கள் என்று பார்த்தால், சமூகத்தின் சாதி அடுக்குகளில் மேலிருந்து கீழே போகப் போக எழுத்தறிவு குறைகிறது. ஆண்களைவிடப் பெண்களிடம் எழுத்தறிவு குறைகிறது என மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லோருக்கும் கல்வி
இந்தியர்கள் எல்லோரையும் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற விவாதமும் திட்டமும் 1944-ல் எழுந்தன. அதை நிறைவேற்ற ‘சார்ஜெண்ட் திட்டம்’ என்ற ஒன்று உருவானது. அதில் 1984-க்குள் மொத்த இந்தியாவையும் படிக்க வைத்துவிடலாம் என்ற கருத்து இருந்தது. “40 ஆண்டுக் காலம் மிகவும் அதிகம். அதற்குள்ளாகவே எல்லோரை யும் படிக்க வைக்க முடியும்” என சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் ஆங்கிலேய அரசை அப்போது விமர்சித்ததாகத் தகவல்கள் உள்ளன.
அதற்கு மூன்றாண்டுகள் கழித்துச் சுதந்திரம் கிடைத்து விட்டது. அதன் பிறகு, எத்தனையோ ஆண்டுகளும் கழிந்துவிட்டன. மாற்றம் வராததால் 2010-ல் ‘இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்’ வர வேண்டிய கட்டாயம் வந்தது. 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் தற்போது இந்தியாவில் 23 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். இத்தகைய குழந்தைகள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். அவர்களுக்கு இலவச ஆரம்ப கல்வியைத் தர வேண்டும் என்கிறது அந்தச் சட்டம்.
2013-க்குள் அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் இருக்க வேண்டும் என அதில் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. சட்டத்தை நிறைவேற்ற ‘சர்வ சிக்ஷ அபியான்’ (அனைவருக்கும் கல்வி இயக்கம்) எனும் தனித்திட்டமும் உருவாக்கப்பட்டது.
தேவை ஆசிரியர்
பணியில் உள்ள ஆசிரியர்களின் கல்வித் தகுதியை உயர்த்துவது, பணிக்குத் தேர்வு செய்கிற ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்துவது, 2015-க்குள் அனைத்துப் பள்ளிகளிலும் தகுதி பெற்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அந்தச் சட்டம் கூறுகிறது. ஆனால், ஆசிரியர் பயிற்சிக்கான படிப்புகள் எல்லாம் 90 % தனியார் நிறுவனங்களில் இருக்கின்றன.
தகுதியான ஆசிரியரை உருவாக்கும் பணியில் அரசின் நேரடிப் பொறுப்பு இல்லாத நிலையில், உலகத்தரமான கல்வியை எப்படி இந்தியக் குழந்தைகளுக்குத் தர முடியும் என்கிறார்கள் கல்வியை வியாபாரம் ஆக்குவதை எதிர்க்கும் செயல்பாட்டாளர்கள். இந்தியாவின் 8.3 % ஆரம்பப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். 2012-ல் 19 லட்சத்து 80 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கச் சொன்னது சட்டம். ஆனால், 14 லட்சம் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டனர். இதுவும் போதாது, இன்னமும் 9 லட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்கின்றனர் கல்வியாளர்கள்.
கல்விச் சந்தை
எல்லாக் குழந்தைகளும் பள்ளியில் சேர்வதை உத்தரவாதப்படுத்துவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி வருடந்தோறும் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் ஆரம்பித்து, பள்ளிகள், வட்டாரம், மாவட்டம், மாநிலம் வழியாக,தேசிய மட்டத்துக்குச் சென்று முடிவாகிச் செயல்பட வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், இன்னமும் மாவட்ட அளவில் உள்ள விவரங்களை வைத்து அங்கிருந்தே திட்ட ஆலோசனைகள் தொடங்கப்படுகின்றன.
மொத்தத்தில், எல்லோருக்கும் கல்வி அளிப்பதற்காக அறிவிக்கப்பட்ட சட்டமும் அதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டமும் தயங்கித் தயங்கித் தேங்கி நிற்கின்றன. இந்த நிலையால், மக்களிடையே தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தப் போக்கை நல்ல வியாபார வாய்ப்பாகக் கருதுகிற நிலையும் வளர்ந்துள்ளது. ‘சி.எல்.எஸ்.ஏ. ஆசியா - பசிபிக் மார்க்கெட்’ எனும் பத்திரிகை 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒரு சந்தையாக இந்தியாவின் கல்விச் சூழலை மதிப்பிட்டுள்ளது.
ஆறு பந்தில் 50 ரன்கள்
கல்வித் துறையின் பொருளாதாரம் என்று பார்க்கும்போது இயல்பாகவே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையின் மீது கவனம் திரும்புகிறது. “நாடு முன்னேற வலுவான அரசுப் பள்ளிகளும் கல்விமுறையும் வேண்டும். ஆனால், தனியாரிடம் கல்வியை மெல்ல ஒப்படைக்கிற பணியையே இந்த பட்ஜெட்டும் செய்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரானது” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“அடிப்படையான கல்வியில் மாற்றம் இல்லாமல் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’(மேக் இன் இந்தியா) திட்டமோ, ‘தேசியத் திறன் வளர்ச்சி’(ஸ்கில் மிஷன்) இயக்கமோ வெற்றி பெறாது. இந்தியா உலக அளவில் போட்டி போடுவதற்குத் தற்போதைய உடனடித் தேவை திறன்மிக்க உழைப்பு. அதை உருவாக்க நமக்குத் தேவை தரமான கல்வி. ஆறு பந்துகளில் 50 ரன்கள் எடுக்கிற மாதிரியான நெருக்கடியில் நாடு இருக்கிறது” என்கிறார் மனிதவள ஆலோசகரான டாக்டர் டி.கார்த்திகேயன்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கான நிதி ஒதுக்கீடு, அவற்றின் செயல்திட்டம் உள்ளிட்டவற்றில் போதுமான அளவுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை. மாவட்ட அளவிலான நிர்வாகத்துக்கு ஆண்டின் கடைசியில்தான் நிதி வந்து சேருகிறது. அதற்கு அரசாங்கங்கள் சரியான காரணங்களைச் சொல்வதில்லை. இப்போது வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட்டிலும் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதற்கான முன்முயற்சி போதுமான அளவுக்கு இல்லை. 1966-ல் கோத்தாரி கமிஷன் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6%-ஐ கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்றது. ஆனால் 4.2% தான் இன்னமும் ஒதுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 6% தேவை. தேவையானால் அதற்கு மேலும் ஒதுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்கிறது பட்ஜெட் மற்றும் ஆளுகையின் கடமைப் பொறுப்புணர்ச்சிக்கான மையம் எனும் அமைப்பு.
அரசாங்கம் அறிவித்துள்ள கட்டாய இலவச ஆரம்பக் கல்வியை ஏன் 6 வயது முதல் தொடங்க வேண்டும் என்ற கேள்வியையும் கல்விசார் தொண்டு அமைப்புகள் எழுப்புகின்றன. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் முன்பருவக் கல்வியையும் அதில் இணைக்க வேண்டும். பக்கத்து நாடான இலங்கையில் இருப்பதுபோல ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கட்டாய இலவசக் கல்வியை நம்மால் தர முடியாதா என்கின்றன கல்வி உரிமைக்காகப் போராடும் அமைப்புகள்.
தமிழகத்தின் பெருமை
தமிழகத்தில் 80 % பேர் எழுதப் படிக்கக் கற்றுவிட்டனர். பெண்கள், தலித்துகள், பழங்குடிகள் ஆகியோரிடையே படிக்காதவர்களின் சதவீதம் இந்தச் சராசரியைவிடக் குறைவாக இருந்தாலும், இந்த 80 % என்பது இந்தியாவின் சராசரியைவிட அதிகம்தான். இருந்தாலும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருக்கின்றனர்.
இந்தியாவில் எப்போது கிடைக்கும் அனைவருக்கும் எழுத்தறிவு?

பேரணி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது?

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடல் வகைக்கேற்ற உடற்பயிற்சியே உரிய பலன் தரும் உடல் வகைக்கேற்ற உடற்பயிற்சியே உரிய பலன் தரும்
ஒவ்வொரு உடலும் ஒரு தனிரகம். எனவே ஒருவரின் உடலுக்கேற்ற உடற்பயிற்சியை செய்வதே உரிய பலன் தரும். அப்படியானால் உங்கள் உடலுக்கேற்ற உடற்பயிற்சி எது? தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
உங்கள் உடல்வாகு என்பது நினைத்தமாத்திரத்தில் எடைகூடிவிடும் ரகமா? அல்லது எவ்வளவு சாப்பிட்டாலும், உடற்பயிற்சி எதுவும் செய்யாவிட்டால்கூட உங்களுக்கு உடல் எடையே கூடாத ரகமா? ஒவ்வொரு மனித உடலும் தனித்தனித் தன்மை கொண்டது. அதாவது ஒவ்வொருவரின் கைரேகையும் ஒரு விதம் என்பதைப்போல தனித்துவமானது.
ஆனாலும் மனித உடல்வாகை எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்து பொதுவான மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும். அந்த அடிப்படையில் பார்க்கும் போது உங்கள் உடலுக்கு உகந்த உடற்பயிற்சி எது என்பது, உங்கள் உடல் குறித்த உங்களின் புரிதலைப் பொறுத்தது.
இதில் பிரச்சினை என்னவென்றால் ஒருவருக்கு என்னவிதமான உடற்பயிற்சி தேவை என்று விவாதிக்கும் போது இரண்டு காரணிகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரில் நின்று முரண்படுகின்றன, என்கிறார் ஸ்பெய்னில் இருக்கும் அல்டோ ரெண்டிமிய்ண்டோ விளையாட்டு விஞ்ஞான மையத்தின் பேராசிரியர் ஜூவான் பிரான்ஸிஸ்கோ மார்க்கோ.
உடற்பயிற்சி மூலம் நீங்கள் உங்கள் உடல் வனப்பை அழகுப்படுத்த விரும்புகிறீர்களா அல்லது விளையாட்டுத் திறமையை மேம்படுத்தப் பார்க்கிறீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார் அவர்.
ஒருவரின் மரபணுக்காரணிகள் மற்றும் உடலின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மனித உடலை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள் உடலியலாளர்கள்.
எக்டோமார்ப்
இந்த ரக மனிதர் உயரமானவர், ஒல்லியானவர், முன்னோக்கி சாயும் தன்மை கொண்டவர். நீண்ட கால் களும், சதைப்பற்றில்லாத மார்புப்பகுதியும் கொண்டவர். இவர்களின் உடம்பில் பெரும்பாலும் சதை போடாது. என்கிறார் பேராசிரியர் மார்கோ.
இப்படிப்பட்ட எக்டோமார்ப் உடல்வாகு கொண்ட வர்களுக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்கும் உடல் திறன் தேவைப்படும் தடகளப்போட்டிகள் பொருத்தமான விளையாட்டுக்களாக இருக்கும். நீச்சல், சைக்கிள் போட்டிகள் போன்றவை.
இப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்களுக்கேற்ற உடற்பயிற்சியின் முக்கிய நோக்கம் உடல் வலிமையை மேம்படுத்துவதாகவும், உடல் எடையை அதிகப்படுத்தி உடற்சதையை கூட்டுவதாகவும் இருக்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் மார்கோ.
இப்படிப்பட்டவர்கள் தங்களின் உடல் மூட்டுக்களை அதிகம் அசைக்கும் விதமான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். அதன் மூலம் அவர்களின் உடலின் பெருஞ் சதைப் பகுதிகளும், சிறு சதைக் குழுமங்களும் கூடுதலாக செயற்பட்டு வலுப்பெறும் என்கிறார் அவர்.
இப்படிப்பட்டவர்கள் அதிகபட்சமாக மூச்சுப்பயிற்சி தேவைப்படும் ஏரோபிக் உடற்பயிற்சிகளை குறைவான அளவில் செய்வது நல்லது என்கிறார் அவர். காரணம் இப்படிப்பட்டவர்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகள் அதிகம் செய்தால் அவர்களின் உடல் எடை குறைவதோடு, உடல் சதை கூடுவதும் நின்றுவிடும் என்கிறார் அவர்.
எண்டோமார்ப்
இந்த ரக உடல்வாகு என்பது எக்டோமார்ப் உடல் வாகுக்கு நேர் எதிரான உடல்வாகு. இவர்களின் உயரம் குறைவாகவும், உடலின் மத்தியப்பகுதியில் அதிக சதைப்பிடிப்புடனும் இருப்பார்கள்.
இந்த ரக உடலின் உணவு செரிபடும் உள்ளி யக்கம் மெதுவாக நடப்பதால், உண்ணும் உணவின் கொழுப்புச் சத்து உடலில் செரிபடாமல் எளிதாக கொழுப்பாகவே தங்கிவிடும்.
இப்படிப்பட்டவர்கள் மிக எளிதில் எடைகூடி, உடல்பருமனாகிவிடுவார்கள்.
இப்படிப்பட்ட உடல்வாகு கொண்டவர்கள் உடல் வலிமை மட்டுமே தேவைப்படும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியும். காரணம் இவர்களின் உடலின் கூடுதலான சதைப்பிடிப்புத் தன்மை இத்தகைய விளை யாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட உதவும்.
இப்படிப்பட்ட உடல்வாகுடையவர்களுக்கு மூச்சுக்குழல் கட்டமைப்பை வலுவாக்கும் வகையான உடற்பயிற்சிகளே நன்மை பயக்கும்.  இப்படிப்பட்டவர்கள் முதலில் சாதாரண ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு பிறகு அனேரோபிக் உடற்பயிற்சிகள் எனப்படும் அதிதீவிர உடற்பயிற்சிகளை வேகமாக செய்யவேண்டும்.
இதன் மூலம் இவர்களின் மூட்டுக்கள் வேகமாக செயற்படும். எக்டோமார்ப் உடல் வாகுடையவர்கள் எளிமையான உடற்பயிற்சிகளை, கூடுதல் இடைவெளிவிட்டு செய்யவேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக, எண்டோமார்ப் உடல்வாகுடையவர்கள் கூடுதல் வேகத்துடன், கடினமான உடற்பயிற்சிகளை செய்வதே நல்லது, என்கிறார் பேராசிரியர் மார்கோ.
மெசோமார்ப்
உடல்வாகு அடிப்படையில் பார்த்தால் இவர்கள் தாம் மிகவும் சாதகமான அம்சங்களைக்கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் எந்த பெரிய முயற்சியும் செய்யாமலே தடகள விளையாட்டு வீரருக்கு உண்டான உடல்வாகுடன் தோன்றுவார்கள். மெசோமார்ப் உடல்வாகுடையவர்கள் இயற்கையிலேயே விளையாட்டு வீரர்கள். இவர்கள் எதைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்வார்கள்", என்கிறார் மார்கோ.
கால்பந்து விளையாட்டு வீரர்கள் நினைத்த மாத்திரத்தில் திடீரென பேட்ல் எனப்படும் உள்ளரங்கு டென்னிஸ் விளை யாட்டை ஆடத்துவங்குவார்கள். அதையும் சிறப்பாக ஆடு வார்கள்.
அவர்களால் கூடைப்பந்து விளையாட்டைக்கூட சிறப் பாக ஆட முடியும். நீடித்து தாக்குப்பிடிக்கும் விளை யாட்டுக் களானாலும் சரி, வேகமாக ஓடும் ஓட்டப் பந்தயமானாலும் சரி அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்கிறார் மார்கோ.


Monday, 2 March 2015

கையில் எழுதிப் பழகாவிட்டால் கற்கும் திறன் பாதிக்கப்படும்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்கையில் எழுதிப் பழகாவிட்டால் கற்கும் திறன் பாதிக்கப்படும்
கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித் துள்ளது. கைகளால் எழுதுவதற்கு பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் மேலதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை அவர்களின் படிக்கும் திறனை பாதிப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்புணர்த்தியுள்ளது.
உலக அளவில் குழந்தைகள் பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் போக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக, தற்கால குழந்தைகள் கணினிகளின் விசைப்பலகைகளை பயன்படுத்தியும் டேப்லட்டுகளின் தொடுதிரை கணினிகளில் விரல்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் போக்கு அதிகரித்துவருகிறது.
இதன் காரணமாக அவர்களின் (மூளை) வளர்ச்சியும் படைப்புத்திறனும் பாதிக்கப்படுமா என்கிற கேள்விக்கு பாதிக்கப்படும் என்று பதில் கூறியிருக்கிறது இந்த புதிய ஆய்வின் முடிவு. குழந்தைகள் கைகளால் எழுதிக் கற்கும் நடைமுறை அவர்களின் மூளை வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை விளக்கும்படி பிபிசியின் சார்பில் மூளை வளர்ச்சி தொடர்பான நரம்பியல் நிபுணர் கரின் ஜேம்ஸிடம் கேட்கப்பட்டது.
கையெழுத்தும், கணினிவிசைப்பலகையும்
இந்த கேள்விக்குப் பதில் சொல்வதற்காக அமெரிக்காவில் இருக்கும் ப்ளூமிங்க்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜேம்ஸ் இதுவரை படிக்கத்துவங்காத குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டார்.
இந்த குழந்தைகளால் எழுத்துக்களை அடையாளம் காண முடியும் என்றாலும், அந்த எழுத்துக்களைக் கூட்டி வார்த்தை யாக உருவாக்க அவர்கள் பழகியிருக்கவில்லை.
இந்த குழந்தைகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு குழந்தைகளுக்கு இந்த எழுத்துக்களை கைகளால் எழுத பயிற்சியளிக்கப்பட்டது. மற்ற பிரிவு குழந்தைகளுக்கு கணினியின் விசைப்பலகைகள் மூலம் எழுத்துக்களை தட்டச்சு செய்யப் பழக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக இந்த குழந்தைகள் எந்த அளவுக்கு எழுத்துக்களை கற்றிருக்கிறார்கள் என்று பரிசோதிக்கப்பட்டது. இந்த குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டை கண்காணித்து பதிவு செய்யக்கூடிய மின்காந்த எதிர்வினை படப்பிடிப்பு தொழில்நுட்பமும் இந்த பரிசோதனைகளின்போது பயன் படுத்தப்பட்டது.
இதன்மூலம் குறிப்பிட்ட எழுத்துக்களை குழந்தைகள் கற்றுத் தேரும்போது அவர்களின் மூளையில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த பரிசோதனைப் பயிற்சிக்கு முன்பும், பயிற்சி முடிந்த பின்புமாக இந்த குழந்தைகளின் மூளைகள் ஸ்கேன் மூலம் படம்பிடிக்கப்பட்டன. இந்த இரண்டு குழு குழந்தைகளின் மூளைகளும் தமது செயற்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் அளவும் இதன் மூலம் கணிக்கப்பட்டது.
படிக்கும் ஆற்றலுக்கும் கையெழுத்துக்கும் தொடர்பு
குழந்தைகள் கைகளைக் கொண்டு ஒரு எழுத்தை எழுதும்போதும், கணினியின் விசைப்பலகையை பயன்படுத்தி தட்டச்சு செய்யும்போதும் மூளை வெவ்வேறாக எதிர்வினை யாற்றுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கைகளால் எழுதும் குழந்தைகளின் மூளைச் செயல்பாடானது, நன்கு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் மூளையின் செயல் பாட்டை ஒத்திருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டின.
ஆனால் கணினியின் விசைப்பலகையைப் பயன்படுத்தி எழுத்துக்களை தட்டச்சு செய்த குழந்தைகளின் மூளைச் செயல்பாடு அப்படி இருக்கவில்லை. குழந்தைகள் தங்களின் கைகளால் எழுதும்போது, அவர்களின் மூளைகள் அந்தச் செயலுடன் ஒத்திசைந்து எதிர்வினையாற்றுகிறது.
இதன் மூலம் குழந்தைகளின் கையால் எழுதும் பழக்கத்துக்கும், படிக்கும் பழக்கத்துக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனைகளில் எடுக்கப்பட்ட மூளைச் செயற் பாட்டின் படங்கள், குழந்தைகள் கைகளால் எழுதும்போது அவர்களின் படிக்கும் பழக்கம் கூர்மைப்படுவதைக் காட்டுகிறது. எனவே தொடர்ந்து அவர்கள் கைகளால் எழுதும்போது அவர்களின் படிக்கும் திறனும் தொடர்ந்து கூர்மைப்படுகிறது என்கிறார் ஜேம்ஸ்.
அத்துடன், கைகளால் எழுதுவதற்குத் தேவையான நேர்த்தியை குழந்தைகள் வளர்த்துக் கொள்ளும்போது, அதனால் அவர்களின் நரம்பு மண்டலச் செயற்பாடு மேம்படுவதாகவும், அதன் பயனாக அவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சியும் பல வகைகளில் அதிகரிப்பதாகவும் பேராசிரியர் ஜேம்ஸ் தெரிவித்தார்.
பள்ளிகளில் கணினிகளா?
இந்த ஆய்வின் முடிவுகள் உலக அளவில் கல்விக் கொள்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையக்கூடும்.
உலகின் சில பகுதிகளில் மழலையர் பள்ளிகள் மட்டத்திலேயே கூடுதலாக கணினிகளை அறிமுகம் செய்யவேண்டும் என்கிற அவசரம் காட்டப்படுவதாகவும், இந்த ஆய்வின் முடிவுகள் அதை தாமதப்படுத்தக்கூடும் என்றும் பேராசிரியர் ஜேம்ஸ் நம்பிக்கை வெளியிட்டார்.

535 தொடக்க பள்ளிகள் மூடப்படலாம் என்று அச்சம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

535 தொடக்க பள்ளிகள் மூடப்படலாம் என்று அச்சம்

          மாணவர்கள் வருகை குறைவால் ஆசிரியர்களுக்கு... நெருக்கடி : 535 தொடக்க பள்ளிகள் மூடப்படலாம் என்று அச்சம்

           பெங்களூரு:கர்நாடகாவில், 535 தொடக்க பள்ளிகளில், மாணவ, மாணவியர் வருகை இல்லை. எனவே, இப்பள்ளி ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு அரசு நியமித்துள்ளது. எதிர்வரும் நாட்களில், இப்பள்ளிகள் மூடப்படலாம் என்ற அச்சம், பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. 
         கர்நாடக மாநிலத்தில், 9,503 அரசு தொடக்கப் பள்ளிகளில், 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். இப்பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல், ஓரிரு ஆசிரியர்களை மட்டும் விட்டு விட்டு, மற்றவர்களை பக்கத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, அரசு நியமிக்கிறது. இது, ஆசிரியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

நடப்பு, 2014 -- 15ம் ஆண்டில், 'டிஸ்டிரிக்ட் இன்பர்மேஷன் ஆப் எஜுகேஷன்' ஆய்வில், இத்தகவல் பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளது.

பெங்களூரில், 211 அரசு தொடக்கப் பள்ளிகள், 11 நிதியுதவி பெறும் பள்ளிகள், 137 நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளில், 20க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
மாவட்டம் வாரியாக கணக்கெடுத்தால், ஹாசனில், 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, 992 ஆகும். அதேபோன்று, கதக்கில், 27 அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர்.

அரசு பள்ளிகளுக்கு, மாணவர்களை ஈர்க்கவும், பள்ளியை விட்டு சென்றவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரவும், அரசு பெரும்பாலான திட்டங்களை வகுத்துள்ளது. ஆனால், இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. கடந்தாண்டு, 675 ஆக இருந்த மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, இந்தாண்டு, 535 ஆக குறைந்துள்ளது, சற்று ஆறுதலான விஷயமாகும். 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும், 600 ஆக உயர்ந்துள்ளது.கடந்தாண்டு, 8,903 ஆக இருந்த இப்பள்ளிகளின் எண்ணிக்கை, இம்முறை, 9,503 ஆக அதிகரித்து உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, பெரும்பாலான தனியார் பள்ளிகளிலும் கூட, 20க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.

ஆனால், இவைகளின் எண்ணிக்கை, அரசு பள்ளிகள் போன்று பெரியளவில் இல்லை. அரசு நிதியுதவி பெறும், 15 பள்ளிகள், நிதியுதவி பெறாத, 138 தனியார் பள்ளிகளில், ஒரு மாணவரும் இல்லாததால், அப்பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. மாணவர்கள் இல்லாததால் பள்ளிகள் மூடப்படுவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.