Wednesday, 5 November 2014

இணையவழி முறையால் உரிய காலத்தில் ஊதியம் பெற முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

இணையவழி முறையால் உரிய காலத்தில் ஊதியம் பெற முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி







         அரசுத் துறைகளைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள், தங்களின் மாத ஊதியத்தை உரிய காலத்தில் பெற முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு கருவூலக் கணக்கு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைவழி (ஆன்லைன்) முறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



          இந்த முறை, சோதனை அடிப்படையிலோ அல்லது அதை அறிமுகப்படுத்துவதற்கான உரிய உத்தரவுகளோ இதுவரை பிறப்பிடப்படவில்லை எனவும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த மாதத்தில் பல அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இதுவரை (நவ.4) ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.


              ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கான பட்டியலைச் சேகரித்து அவற்றைப் பரிசீலிக்கும் பணிகளை மாவட்ட கருவூலக் கணக்குத் துறை மேற்கொண்டு வருகிறது. கருவூலத் துறையில் கணினிகள் பயன்பாட்டுக்கு வந்த நேரத்தில், ஊதியத்துக்கான பட்டியலை அப்படியே தட்டச்சு செய்து அதை


குறுந்தகட்டிலும், நகல் எடுத்தும் மாவட்ட கருவூலக் கணக்குத் துறையில் சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இந்தப் பணியை ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள நிர்வாக அலுவலர் மேற்கொண்டு வந்தார்.


இணையவழி முறை புகுத்தப்பட்டது: கருவூலக் கணக்குத் துறையில் இணையவழி முறை புகுத்தப்பட்ட பிறகே பிரச்னை தொடங்கியது. அதாவது, எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல் வெறும் கணினியில் மட்டுமே புகுத்தப்பட்ட இணையவழி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.


எப்படி பதிவு செய்ய வேண்டும், தவறு ஏற்பட்டால் அதைத் திருத்துவது எப்படி என்பன உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு அலுவலகத்தில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அதிகாரிகள், தாங்களாக யோசித்து இந்த இணையவழி முறையைக் கையாள வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர்.


இதுகுறித்து, திருச்சியைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியது: ஒரு அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பதவியிடங்கள் இருந்தால், ஊதியப் பட்டியல் தயாரிக்கும்போது ஒரு குறிப்பிட்ட பதவியிடத்துக்குப் பதிலாக வேறொரு பதவியைத் தவறாகக் குறிப்பிட்டால் அதை அந்த அதிகாரியே திருத்த முடியாது. இதைத் திருத்துவதற்கு மாவட்ட கருவூலக் கணக்குத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அவர்கள் சென்னையில் உள்ள இணையவழி பராமரிப்புப் பிரிவுக்கு அப்படியே அனுப்பி அவர்களது பதிலைப் பெறுவர். அந்த பதில், ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அதிகாரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு ஒவ்வொரு தவறுக்கும் மின்னஞ்சல் மூலம் கேள்வி கேட்டு பதிலைப் பெற்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.


உத்தரவு வரவில்லை: இணையவழி முறையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கருவூலக் கணக்குத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் ஊதியப் பட்டியல் தயாரிக்கும் அலுவலர்கள், அதிகாரிகள் யாருக்கும் அதுபோன்ற பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.


மேலும், இணையவழி முறையைப் பயன்படுத்த வேண்டும் எனவும், அதை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாகவும் அரசின் உத்தரவுகள் எதுவும் வரவில்லை. ஒவ்வொரு மாதமும் ஊதியப் பட்டியலை 15 முதல் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட கருவூலக் கணக்குத் துறையிடம் அளிக்க வேண்டும்.


ஆனால், இணையவழி முறை காரணமாக, ஒவ்வொரு மாதமும் தாமதம் ஏற்பட்டு ஊதியப் பட்டியலை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும், இணையதள இணைப்பு இல்லாத சிறு அரசு அலுவலகங்களைச் சேர்ந்த அலுவலர்கள், இணையதள மையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனால், இந்த நவம்பர் மாதத்தில் இதுவரைகூட (4-ஆம் தேதி) சில அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் உள்ளது.


உரிய பயிற்சி அவசியம்: இணையவழி முறையை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பாக, அரசு அலுவலகங்களில் ஊதியப் பட்டியலைத் தயாரிக்கும் அலுவலர்களுக்கு அதுகுறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் அனைத்து இடங்களில் நடைமுறைப்படுத்தாமல் பகுதி பகுதியாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் அலுவலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

No comments:

Post a Comment