Thursday, 17 July 2014

பத்து மாணவர்களுக்கு குறைவான தொடக்க பள்ளிகள் : இழுத்து மூட அரசு யோசனை


           அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு, புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், 'லேப்-டாப்,' 'பஸ்பாஸ்' என 14 வகையான இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வித்துறைக்காக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.
 
          இருந்தும், அரசு துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது, மிக சொற்பமாகவே உள்ளது.பெரும்பாலான பள்ளிகளில், ஒரு சில மாணவர்களே சேர்ந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் நாகுல்பட்டி துவக்க பள்ளியில், முதல் வகுப்பில் மாணவர்களே இல்லை. இரண்டாம் வகுப்பில் ஒருவரும், நான்காம் வகுப்பில் ஒருவரும், ஐந்தாம் வகுப்பில் இருவர் என மொத்தம் நான்கு மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
 
           இதற்கு, இரண்டு ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் என அரசு பணம், ஆண்டுக்கு சில லட்சம் சம்பளமாக விரயமாகிறது. இதேபோல்தான், ஆர்.வெள்ளோடு ஊராட்சி அய்யம்பட்டி துவக்கப்பள்ளியில் மூன்று மாணவர்களும், உ.தாதனூரில் ஆறு பேரும், ஆர்.கே.தாதனூர் ஆறு பேரும் மட்டுமே மாணவர்கள் உள்ளனர். இதே போல்தான், மாவட்ட, மாநில அளவிலும் நீடிக்கிறது.இதற்கு காரணம், முறையான கல்வி முறை இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ளது. இது மட்டுமின்றி, பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி மோகமும் காரணமாகிறது. வரைமுறை இல்லாமல், போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாத நிலையில், ஆங்கில நர்சரி பள்ளிகள் துவங்க அரசு அனுமதி அளிக்கிறது. அரசு பள்ளிகள் குறைய இதுவும் ஒரு காரணமாககும்.இதனால், நடப்பு கல்வி ஆண்டில், தமிழக அளவில், இதே எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள, ஆயிரத்து 268 பள்ளிகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பள்ளிகளில் உள்ள மாணவர்களை, அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். வரும் காலங்களிலாவது, முறையான பாட வகுப்புகளை நடைமுறைபடுத்தி, மாணவர் சேர்க்கையை கூடுதலாக்க அரசு நிர்வாகம் முன்வர வேண்டும். இல்லையேல். அடுத்தடுத்து இதேபோல் பள்ளிகள் மூடப்படும் நிலை தான் தமிழகத்தில் ஏற்படும்.

No comments:

Post a Comment