Thursday 24 July 2014

ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் இந்தியக் குழந்தைகள்

உலக அளவில் 6 வயதிலிருந்து 10 வயதுவரை உள்ள குழந்தைகளில் ஆரம்பக் கல்வியை 58 மில்லியன் குழந்தைகள் இன்னும் பெறவில்லை. இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையில் இருப்பதாக அய்.நா. ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டில் புருண்டி, ஏமன், காரை, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உலக எண்ணிக்கையில் கால் பங்கினைக் கொண்டிருந்தனர். பத்து ஆண்டுகளுக்குள் 86 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், கல்வி உதவித்தொகை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் முன்னேற்றம் இல்லாமை போன்ற பிரச்சினைகள், 2015ஆம் ஆண்டிற்குள் இந்த நாடுகள் உலகளாவிய ஆரம்பக் கல்வி சாதனையை எட்டுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனெஸ்கோவின் பொது இயக்குநர் இரினா போகொவா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2012ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆரம்பக் கல்வி பெறாதவர்களின் எண்ணிக்கை 5.4 மில்லியனாகவும், இந்தோனேஷியாவில் 1.3 மில்லியனாகவும் இருந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 15 மில்லியன் சிறுமிகளும் 10 மில்லியன் சிறுவர்களும் சேர்ந்து 25 விழுக்காட்டினர் ஆரம்பக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இருப்பர் என யுனெஸ்கோவின் புள்ளிவிவரம் எச்சரித்துள்ளது.
இந்த நிலை மாற வேண்டுமென்றால், கல்வி கற்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்பதை அரசுகள் மதிக்கும்படியான செயல்பாட்டைக் கொண்டுவரும் எச்சரிக்கை ஒலியினை ஏற்படுத்த வேண்டும் என்று இரினா போகொவா அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment