Thursday, 12 December 2013

பள்ளிகளுக்கு இந்தியா "மேப்': 2 மாதங்களில் வழங்கப்படும்


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1.48 லட்சம் வகுப்பறைகளுக்கு இந்திய, தமிழக வரைபடங்கள் மற்றும் மாவட்ட வரைபடங்கள் 2 மாதங்களில் வழங்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வரைபடங்களை அச்சிடும் நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) திறக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
மாணவர்களுக்கு வரலாறு மற்றும் புவியியல் பாடத்தை சிறந்த முறையில் கற்பிக்கவும், ஆர்வத்தை ஏற்படுத்தவும் வகுப்பறைகளுக்கு வரைபடங்கள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து, இந்த வரைபடங்களை அச்சிடுவதற்கான பணிகளை தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணிகள் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 245 வகுப்பறைகள் உள்ளன.
இந்த வகுப்பறைகளுக்கு தலா 3 வரைபடங்கள் வீதம் மொத்தம் 4 லட்சத்து 44 ஆயிரம் வரைபடங்கள் வழங்கப்பட உள்ளன.
மாணவர்கள் அனைவரும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் இந்த வரைபடங்கள் இருக்கும். மாவட்ட வரைபடங்களின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கூட தங்களது ஊர்களை வரைபடங்களில் பார்க்கலாம். இது வரலாறு பாடங்களின் மேல் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும்.
அதேபோல், இயற்கை வளங்கள் மற்றும் ஆறுகள், முக்கிய ஊர்கள் போன்றவற்றையும் மாணவர்கள் புத்தகங்களில் கற்கும்போதே, வரைபடங்களின் மூலம் அறிந்துகொள்வார்கள்.
வரைபடங்களை அச்சிடுவதற்கான சரியான அளவைப் பெறவும், சரியான காகிதத்தைத் தேர்வு செய்யவும் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. எனினும், ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டவுடன் வரைபடங்களை விரைவாக அச்சிடுமாறு அச்சிடும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படும்.
அடுத்த 2 மாதங்களுக்குள் வகுப்பறைகளுக்கு வரைபடங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் முதலில் மாதிரி வரைபடங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய மற்றும் தமிழக வரைபடங்களை அச்சிடுவதற்கு முன்னதாக இந்திய தலைமை நில அளவையாளர் அலுவலகத்திலும், மாவட்ட வரைபடங்களை அச்சிடுவதற்கு முன்னதாக மாவட்டங்களில் உள்ள நில அளவை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் பதிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும்.
அதன்பிறகே, வரைபடங்களை அச்சிட அனுமதி வழங்கப்படும்.
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அட்லஸ்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு 11 லட்சம் அட்லஸ் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்தப் புத்தகங்கள் அடுத்த மாதத்துக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment