Friday 10 April 2015

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி - திருமருகல்

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

undefined
      முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.
          இலக்கிய உலகின் மிக உயரிய, 'ஞான பீடம்' விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகரில், குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர் இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காலணி கடையில் துவங்கிய எழுத்துப் பயணம்: விழுப்புரத்தில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்த போது அவருக்கு பொதுவுடமைக் கோட்பாடுகளும், பாரதியின் எழுத்துகளும் அறிமுகமாகின. பின் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனியார் அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் தஞ்சையில் காலணி விற்கும் கடையில் பணிக்கு சேர்ந்தார். இங்கு தான் அவரது எழுத்து பயணம் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இவரது நாவல்களில் "உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சாகித்ய அகாடமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன், ரஷ்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment